Shadow

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 8 விமர்சனம்

FF8 Tamil review

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7

‘தி ஃபேட் ஆஃப் தி ஃப்யூரியஸ்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் ஆரம்பமே அதகளமான கார் ரேஸில் தொடங்குகிறது. ரசிகர்கள், இந்தத் தொடர் படங்களில் இருந்து என்ன எதிர்பார்ப்பார்களோ அதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார் திரைக்கதையாசிரியர் க்றிஸ் மார்கன். கதை, லாஜிக் எல்லாம் இரண்டாம் பட்சமே! ரோலர் கோஸ்டரில் இரண்டு சுற்று போய் வந்தது போன்ற உணர்வை தரக்கூடிய பொழுதுபோக்குச் சித்திரம். அதனால் தான் உலகளவில் வசூலில் ரெக்கார்ட் பிரேக் சாதனை புரிந்து வருகிறது.

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் என்றாலே விர்ர்ரூம் எனச் சீறும் கலர் கலரான கார்கள் தானே ஞாபகம் வரும். இப்படத்தில் ஒரு படி மேலே சென்று, “கார் மழை”யைப் பொழிந்துள்ளார் இயக்குநர் கேரி க்ரே. விஷூவலால் வாயடைக்க வைக்கின்றனர். ‘தெறி மாஸ்’ என்ற பதம் இப்படத்திற்கு மிகப் பொருந்தும்.

வில்லனாய் உள்ளே வந்த ஜேஸன் ஸ்டாத்தமை, டொமினிக் டீமுக்குள் அழகாய்ச் சேர்த்துவிட்டார்கள். வின் டீசல் அதகளப்படுத்தினாலும், குழந்தையைக் காப்பாற்ற விமானத்திற்குள் செல்லும் ஜேஸனே நாயகனாக ஸ்கோர் செய்கிறார். அந்தக் குழந்தையுடன் ஜேஸன் ஸ்டாத்தம் பேசும் காட்சி பட்டாசாய் உள்ளது. திரையரங்கில் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு, தமிழ் டப்பிங்கும் ஒரு காரணம். ரோமன் பியர்ஸாக வரும் டைரிஸ் கிப்ஸன் வாய் திறந்தாலே ரசிகர்கள் சிரிக்கத் தொடங்கிவிடுகின்றனர்.

வில்லி சைஃபராக நடித்திருக்கும் சார்லிஸ் தெரான் பெரிதாகப் பயமுறுத்தவில்லை. வின் டீசல் அவர் டீமுக்கு எதிராகத் திரும்பி விடுவதால், வலுவற்ற வில்லி குறையாகத் தெரியவில்லை. பேரன்ட்ஸ் கடலின் பனிவெளியில் நடக்கும் நீளமான க்ளைமேக்ஸ் சண்டையில், நீர்மூழ்கிக் கப்பலை வின் டீஸல் தகர்க்கிறார். அவ்வளவு பெரிய கப்பல் வெடித்துச் சிதறினாலும் வின் டீசலுக்கு ஒன்றும் ஆவதில்லை. அந்தக் காட்சியிலும் ரசிகர்கள் கை தட்டுகின்றனர். காரணம், அவரது டீம் அவரைக் காக்க அரண் அமைக்கின்றனர். ஒரு டீம் ஒற்றுமையாகச் செயல்படுகிறது, ஒருவரை ஒருவர் விட்டுத் தராமல் தோள் கொடுக்கின்றனர் என்பதை மக்கள் கொண்டாடுகின்றனர். நேரடி தமிழ்ப்படங்களை விட, ரசிகர்கள் இந்த சீரிஸின் படங்களோடு நெருக்கமாகத் தன்னைப் பொருத்திக் கொள்வது ஆச்சரியம் அளிக்கின்றது. வின் டீசல் தனது மகனுக்கு ‘ப்ரையன்’ எனப் பெயர் வைப்பதாகச் சொன்னதும், தமிழ் ரசிகர்கள் கரவொலி எழுப்புகின்றனர்.

அட்டகாசம்.!