Shadow

தி பிளாஷ் விமர்சனம்

டிசி (DC) என்றால் டார்க் காமிக்ஸ் என்றொரு பொதுவான அபிப்ராயம் உலகளாவில் நிலவியது. வொண்டர் வுமன் (2017), அக்வா மேன் (2018), ஷசாம் (2018) முதலிய படங்களின் மூலம் தங்களுக்கும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் போல் கலகலப்பான கொண்டாட்டத்தை அளிக்கக்கூடிய படம் எடுக்க முடியும் என நிரூபித்தனர். ‘தி பிளாஷ்’ படமும் அத்தகைய கொண்டாட்டத்திற்கு உறுதியளிக்கிறது.

பேரி ஆலன், ஒளியின் வேகத்தில் பயணிக்கும் தனது சக்தியைப் பயன்படுத்தி கடந்த காலத்திற்குள் செல்லமுடியுமென தற்செயலாகக் கண்டுபிடிக்கிறார். கடந்த காலத்திற்குள் சென்று, தனது தாயின் மரணத்தைத் தடுக்க முனைகிறார் பேரி ஆலன். ‘அது நடைமுறை சாத்தியமில்லா ஒன்று’ என பேட் மேன் எச்சரித்தும், ஸ்பீட் ஃபோர்ஸ் மூலமாகக் கடந்த காலத்திற்குள் விபரீதப் பயணத்தை மேற்கொள்கிறார் பேரி ஆலன்.

கடந்த காலத்தை மாற்றிவிட்டு, நிகழ்காலத்திற்கு வரும் வேளையில், ஸ்பீட் ஃபோர்ஸ்க்குள் நுழையும் ஸ்பீட்ஸ்டர், 2013 ஆம் வருடத்தில் பிளாஷைத் தள்ளிவிடுகிறார். தனது விபரீத முயற்சியால், உலகை அழிக்க நினைக்கும் ஜெனரல் ஜாடும் (Zod), அந்த வருஷத்துக்குள் வந்துவிடுவதை உணர்கிறார் பிளாஷ். 2013 ஆம் ஆண்டு பேரி ஆலனுக்கு மின்னல் தாக்கி சக்திகள் வர, தற்கால பிளாஷ்க்கு சக்தி போய்விடுகிறது. ஜெனரல் ஜாடைத் தடுக்க, என்ன செய்யலாமென யோசித்து, அந்த இயல்நிலையின் (Reality) பேட் மேனின் உதவியை நாடுகிறார் சக்தியை இழந்த பிளாஷ். ஜாடை அழிக்க சூப்பர் மேனின் உதவி தேவையென நாசா இணையதளத்தைக் குடைந்து, க்ரிப்டானியன் பயணப்பெட்டியைத் தேடுகின்றனர். சைபிரீயாவில் அப்பெட்டி இருப்பதாகத் தெரிய வந்து, சூப்பர் மேனைத் தேடிப் போனால், வேறொரு பெண் அங்கே சிறைப்பட்டிருக்கார். வயதான ஓய்வு பெற்ற விட்ட ஒரு பேட் மேன், 2 பிளாஷ், க்ரிப்டானைச் சேர்ந்த ஒரு பறக்கும் சூப்பர் கேர்ள் ஆகியோர் சேர்ந்து ஜெனரல் ஜாடை எதிர்க்கின்றனர். ஆனால், ஜாடை இவர்களால் தடுக்க முடியவில்லை. ஒருமுறை அல்ல இருமுறை அல்ல, பலமுறை பின்னோக்கிப் போய் மீண்டும் மீண்டும் எதிர்த்தாலும் ஜாடுக்கு இந்த அணியால் எண்ட்-கார்ட் போட முடியவில்லை.

பிளாஷ், 2013 இயல்புநிலை உலகை எப்படிக் காப்பாற்றுகிறார், தற்காலத்தில் கொலைக் குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்படவுள்ள தன் தந்தையை எப்படிக் காப்பாற்றுகிறார், பன்னண்டத்தில் ஏற்படுத்திய குளறுபடி என்னவானது என்பதோடு படம் முடிகிறது.

பிரச்சனையின் வீரியத்தைக் குறிக்க நம்மூரில் இடியாப்பச் சிக்கல் என்போம். ‘மல்டிவெர்ஸ் என்பது நூடுல்ஸ் போல் சிக்கலானது’ என்கிறார் 2013 இன் பேட் மேன். அது எப்படியெனில், பிளாஷ் கடந்த காலத்திற்குப் போகும் முன் பேட் மேனாக பென் அஃப்ளெக் இருப்பார். மீண்டும் தற்காலத்திற்கு வந்தால், பேட் மேனாக ஜார்ஜ் க்ளூனி இருப்பார். அதே போல், பிளாஷ் ஸ்பீட் ஃபோர்ஸில் இருக்கும் போது, சூப்பர் மேனாக நிக்கோலஸ் கேஜ், க்றிஸ்டோஃபர் ரீவ்ஸ் முதலியோரைப் பார்ப்பார். பிளாஷாக எஸ்ரா மில்லர் நன்றாகப் பொருந்திப் போகிறார்.

இரண்டு பிளாஷ்களுக்கு இடையிலேயான நட்புறவு எமோஷனலாக அற்புதமாகக் கையாளப்பட்டுள்ளது. டிசி காமிக்ஸ் படங்கள் dazzling cinema-க்களை நோக்கி பீடுநடை போகிறது.