32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

The Great Indian Kitchen விமர்சனம்

Dinesh R சேலம் Published: 22/04/2021 4 நிமிட வாசிப்பு Updated: 16/02/2026 OTT
எழுத்து அளவு:

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ எனும் மலையாளப் படத்தை ஓடிடி தளங்களான அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் முதலியவை வாங்க மறுத்த நிலையில், நீஸ்ட்ரீம் எனும் தளத்தில், அப்படம் ஜனவரி 21, 2021, அன்று வெளியானது. ஒரு படத்தை வாங்குவதும் வாங்காததும், ஓடிடி தளங்களது தனிப்பட்ட நிர்வாக முடிவே எனினும், அவை வாங்க மறுப்பதற்குச் சுட்டிக் காட்டிய ஒரு காரணமே இப்படத்தின் மீது கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது. அவ்வசனம், ‘உச்சநீதி மன்றத்தினுடைய சபரிமலைத் தீர்ப்பு என்பது பெண்களின் கோயில் நுழைவு பற்றியது மட்டுமில்லை, அது பெண்களின் விடுதலையைக் கூறும் பிரகடனம்’ என்றொரு வசனம் வருகிறது. படத்தின் மையக்கருவாகக் கூட இல்லாமல், வலதுசாரி நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் ஒரே ஒரு வசனம் வந்தாலும் கூட, அப்படைப்பு சர்ச்சைக்குள்ளாகும் போக்கு ஆரோக்கியமற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

வணிக சமரசமற்ற கலை முயற்சிகளை மேற்கொள்வதில் மலையாளத் திரையுலகம் முன்னோடியாகத் திகழ்கிறது என்பதற்கு இப்படமும் ஓர் எடுத்துக்காட்டு. நூறு நிமிடங்களே ஓடக் கூடிய படம், பெண்கள் மீது ஆண்கள் செலுத்தி வரும் ஆயிரம் ஆண்டுக்கால சமூக அநீதியைத் தோளுரித்துக் காட்டுகிறது. நாயகிக்குக் கல்யாணமாகி ஒரு பாரம்பரியமான வீட்டிற்கு மருமகளாகச் செல்கிறார். அவ்வீட்டின் மூத்த மருகமளான அப்பெண்ணின் மாமியார், தினம் எழுந்து சமைக்கிறார், வீட்டைச் சுத்தம் செய்தவண்ணம் உள்ளார். இது ஒரு சுழற்சியாக நாள் தவறாமல் இயந்திரத்தனமாக நடக்கிறது. மாமியார், அவரது மகள் தனது பிரசவக்காலத்திற்கு உதவிப் புரிய அழைத்துக் கொள்ள, மருமகள் அச்சுழற்சியில் மாட்டிக் கொள்கிறார். சமைக்கிறார், வீட்டினைக் கூட்டிப் பெருக்குகிறார், பாத்திரங்கள் சேருகிறது, அதைச் சுத்தம் செய்கிறார். படத்தின் பெரும்பகுதி இந்தக் காட்சிகளே தொடர்ந்து ரிப்பீட் மோடில் வந்தவண்ணமுள்ளன. காய்கறிகளை நறுக்குதல், சமைத்தல், பாத்திரங்களைச் சுத்தம் செய்தல்; காய்கறிகளை நறுக்குதல், சமைத்தல், பாத்திரங்களைச் சுத்தம் செய்தல்; காய்கறிகளை நறுக்குதல், சமைத்தல், பாத்திரங்களைச் சுத்தம் செய்தல் எனத் தொடரும் காட்சிகள் கடி ஏற்படுத்தவே செய்கின்றன. விஷூவலாக ஒன்றையே பார்ப்பதற்கு நமக்குப் பொறுமையில்லாத பட்சத்தில், வாழ்நாள் முழுவதும் சமையலறையில் சிறைப்பட்ட பெண்களின் நிலை பற்றிச் சொல்லாமல் சொல்கிறது படம்.

சமைப்பது பெண்களின் வேலை என இந்தத் தலைமுறை குட்டீஸ்கள் மனதிலும் ஆழமாகப் பதியப்படுகிறது. குழந்தைகளிடம் கூப்பிட்டுத் தனியாகச் சொல்லவேண்டிய அவசியமில்லை. அவர்கள் அறிவு பெரியவர்களைப் பார்த்தும், இமிடேட் செய்துமே வளருகின்றன. அவரவர் வீட்டில், உறவினர் வீட்டில், நண்பர்கள் வீட்டில், திரைப்படங்களில், தொலைகாட்சி சீரியல்களில் என தொடர்ந்து சமூகம், சமையலும் சமையலறையும் பெண்களுக்கானது என்பதைப் பதிய வைத்துக் கொண்டே உள்ளன. இவை, பெண்கள் மீது யுகம்யுகமாய் நடக்கும் ஒரு மெளனமான வன்முறை என்றே சொல்லலாம். தன் தந்தை தனது தாயை எப்படி நடத்தினாரோ, அதையே பிரதான கதாபாத்திரம் தன் மனைவிக்கும் செய்கிறது என அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் ஜியோ பேபி.

‘இதெல்லாம் பெரிய விஷயமா? நாங்களும்தான் சமைக்கிறோம்! போவியா..’ என சில ஆண்கள் வக்கணை பேசலாம். ஆண்கள் சமைப்பதென்பது தேவையின் பொருட்டோ, விருப்பத்தின் பேரிலோ நடக்கும் விஷயங்களே தவிர்த்து, அது அவர்கள் மீது நேரடியாகவோ, மறைமுகமாகவோ திணிக்கப்படுவதில்லை.

ஆண், பெண் கல்யாண விஷயத்தில் அதாவது, புருஷன் – மனைவி என்ற வாழ்க்கையானது நமது நாட்டில் உள்ள கொடுமையைப்போல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று சொல்லலாம். நமது கல்யாணத் தத்துவம் எல்லாம் சுருக்கமாய்ப் பார்த்தால், பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்வது என்பதைத் தவிர, வேறு ஒன்றுமே அதில் இல்லை.

– ‘பெண் ஏன் அடிமையானாள்?’ – தந்தை பெரியார்

படத்தில் சில சுவாரசியமான சங்கதிகள் உள்ளன. பின்னணி இசை (background score) கிடையாது. காய்கறிகள் நறுக்கும் சத்தங்களும், பாத்திரங்கள் கழுவும் ஒலிகளுமே பிரதானப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய நிலை இந்தியச் சமூகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே பெண்களுக்கானது என சமையலை அவர்கள் தலையில் திணித்து வைத்துள்ளது ஆண்வய சமூகம். பெண்கள் அனைவருக்குமான ஒட்டுமொத்த குறியீடாக நிமிஷா சஜயன் நடித்துள்ள கதாபாத்திரத்தை உருவகித்துக் கொள்ளலாம். அதனாலோ என்னவோ, கதாபாத்திரங்களுக்கு எந்தப் பெயரும் வைக்கவில்லை இயக்குநர்.

சுவாரசியத்திற்குப் பஞ்சமுடைய கதையை, மிக நேர்த்தியாகக் கத்தரித்து, தனது படத்தொகுப்பின் மூலம் வலு சேர்த்துள்ளார் ஃபிரான்சிஸ் லூயிஸ். கணவன் மனைவியாக நிமிஷா சஜயனும், சூரஜ் வெஞ்சரமூடும் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். டேபிள் மேனர்ஸ் பற்றி நிமிஷா தயங்கித் தயங்கிக் கேள்வியெழுப்புகையில், சூரஜ் வெளிப்படுத்தும் மூர்க்கம் என்பது படத்தின் கருவைப் பதம் காட்டும் அற்புதமான காட்சி.

மித்தத்தில் (வாஷ் பேஸின்) உணவு எச்சங்கள் அடைத்துக் கொண்டு நீர் வெளியேறாததால் படாதபாடுபடுகிறார் நிமிஷா. ஒருமுறை இருமுறையல்ல தினமும் அந்தச் சங்கட்த்திற்கு உள்ளாகிறார். உணவு எச்சங்களை, மித்தத்தில் போடாமல் தனியாகச் சேகரித்தால் அந்தப் பிரச்சனையைத் தவிர்க்கலாம். ஆனாலும், பெண்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர் எனப் பார்வையாளர்களுக்கு ஆழப் புரிய வைத்தே ஆகவேண்டுமென இயக்குநர், வீட்டுப் பெண்களின் இயல்பான அறிவைக் கொச்சைப்படுத்தாமல் இருந்திருக்கலாம்.

“சமைத்துச் சாப்பிட்ட பின் கிச்சனில் என்ன வேலை இருக்குது?” என படத்தில் ஒரு கதாபாத்திரம் கேள்வியெழுப்பும்.

பதில் தெரிந்து கொள்ள, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை ஒருமுறை பாருங்கள் அல்லது பெண்களுக்கான இடமாக நம்ப வைக்கப்பட்டுள்ள வீட்டுச் சமையலறைக்கு ஒரு ‘விசிட்’ அடியுங்கள்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.