‘ஜு-ஆன்: தி க்ரட்ஜ்’ என 2002 இல் வெளிவந்த ஜப்பானியப் படத்தின் ரீமேக்காக, ஆங்கிலத்தில் ‘தி க்ரட்ஜ்’ எனும் படம் 2004 இல் வெளியானது. அதைத் தொடர்ந்து, ‘தி க்ரட்ஜ் 2 (2006)’, ‘தி க்ரட்ஜ் 3 (2009)’ ஆகிய படங்கள் வெளிவந்தன.
ஜப்பானில் இருந்து ஒரு சாபத்தைத் தன்னோடு அமெரிக்கா கொண்டு வருகிறாள் நர்ஸ் ஃபியோனா லேண்டர்ஸ். இப்படத்தினை, 2004 இல் வெளிவந்த ‘தி க்ர்டஜ்’ படத்தின் இணைப்பாகமாகக் (sidequel) கொள்ளலாம். 2004 இல் லேண்டர்ஸ் குடும்பம் முழுவதுமாக பாதிக்கப்படுகிறது.அதை விசாரிக்க வந்த போலீஸ்காரர் மீதும் சாபம் படிகிறது. பின், அந்த வீட்டை யார் யாரெல்லாம் மிதிக்கிறார்களோ அவர்கள் அனைவரின் மீதும் சாபம் படிகிறது.
அப்படி, 44 எனும் இலக்கமிட்டு அந்த வீட்டிற்குச் சென்று, அதன் துர் அமானுஷ்யத்தைக் கண்டு அஞ்சும் லோர்னா, காரில் தப்பித்துச் செல்ல முற்படுகையில் விபத்தில் எரிந்து போகிறாள். அவ்வூருக்கு 2006 இல் மாற்றலாகி வரும் டிடெக்டிவ் முல்டோன், லோர்னாவைப் பற்றி விசாரிக்க அந்தப் பேய் வீட்டிற்குச் செல்கிறார். அந்த வீட்டோடு தொடர்புடைய மூன்று குடும்பங்களின் துர் மரணங்களை, முன் பின் என நான்-லீனியராகச் சொல்லியுள்ளார் இயக்குநர் நிக்கோலஸ் ஃபிஷே (Pesce).
இறுதியில், அந்தச் சாபத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள டிடெக்டிவ் முல்டோன் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதோடு படம் முடிகிறது. டிடெக்டிவ் முல்டோனாக நடித்துள்ள ஆண்ட்ரியா ரைஸ்பாரோ தான் படத்தின் நாயகி. அந்த வீட்டின் அமானுஷ்யத்தைக் கண்டுபிடிக்க முயல்வதும், அது தன்னையும் ஆக்கிரமித்துவிட்டது என உணர்ந்து பரிதவிப்பது என நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். க்ரட்ஜ் தொடர் படங்களைப் பார்த்து வருபவர்களுக்கு, இந்தப் படத்தோடு தங்களை முழுமையாகத் தொடர்புப்படுத்திக் கொள்ள இயலும். ஏனெனில் இது பயமுறுத்தும் வகை பேய்ப்படம் இல்லை இது. மெதுவாக இருண்மையைப் படரவிடும் டார்க் ஜானர் படமிது. உதாரணம், மெலிண்டா எனும் குழந்தையின் மூக்கிலிருந்து நிற்காமல் ரத்தம் வடியும். இது திடுக்கிட்டுப் பயமுறுத்தும் காட்சி இல்லை என்றாலும், இக்காட்சியின் மூலம் வெளிப்படும் டார்க்னெஸ் பார்வையாளர்களையும் ஆட்கொள்ளச் செய்யும். காட்சிகள் மெதுவாய் நகரும் இப்படம் பார்வையாளர்களின் பொறுமையைக் கொஞ்சம் கோரும். டார்க் வகைமை படங்களை விரும்புபவர்களுக்கான படமிது.