Shadow

தர்பார் விமர்சனம்

darbar-movie-review

முருகதாஸ் இயக்கியிருந்தாலும், இது ரஜினி படமாக மட்டுமே உள்ளது. ரஜினி படம், ரஜினி படமாக இல்லாமல் இருந்தால்தான் ஏமாற்றமளிக்கும். ரஜினி எனர்ஜியாக, ஸ்டைலாக, அழகாகத் தெரிகிறார் திரையில்.

தர்பார் என்பது அரசவையைக் குறிக்கும். தனது தர்பாருக்கு உட்பட்ட மும்பையைக் காவல் பரிபாலனம் செய்யும் ஐபிஎஸ் அதிகாரியான ஆதித்யா அருணாச்சலத்தின் மகள் கொல்லப்படுகிறார். மரணத்தால் மிகுந்த மனச்சோர்வில் உழலுகிறார். யாரால் அவர் மகள் கொல்லப்பட்டார் என்று கண்டுபிடிப்பதும், எவ்வாறு தன் மகளின் மரணத்திற்குக் காரணமானவரைப் பழிவாங்கினார் என்பதும்தான் படத்தின் கதை. இப்படத்திற்கு, என்கவுன்ட்டர் என்ற தலைப்பு தான் பொருத்தமாய் இருந்திருக்கும். என்கவுன்ட்டரை ஆதரிக்கும் ஆபத்தான போலீஸ் கருவைத் தொட்டுள்ளார் முருகதாஸ்.

லில்லி எனும் பாத்திரத்தில் நயன்தாரா தோன்றியுள்ளார். உண்மையில் இது நாயகியே தேவையில்லாத படம். நயன்தாரா வரும் காட்சிகளைப் படத்தில் இருந்து முற்றிலும் நீக்கினாலும் படத்திற்கு எந்தப் பாதிப்பும் எழாது. 69 வயதாகும் ரஜினிக்கு, காதல்/டூயட் என காட்சிகள் வைப்பதில், முருகதாஸ்க்கு ஒரு பெரிய தயக்கம் இருப்பது அப்பட்டமாய்த் தெரிகிறது. ரஜினியின் மனைவி இறந்துவிட்டார் என அத்தயக்கத்தைத் தொடக்கம் முதல் மெயின்டெயின் செய்திருக்கலாம். ஏனெனில் ரஜினியே கூட இளவயது நாயகிகள் கூட நடிக்க நேரும் போது ஏற்படும் தர்மசங்கடத்தை மேடையில் சில முறை பகிர்ந்துள்ளார். உதாரணம், லிங்கா படத்தில், தன் மகளை விட இளையவரான சோனாலி சின்ஹாவுடன் நடிக்க நேரிட்டதால் ஏற்பட்ட சங்கடத்தை ரஜினி வெளிப்படுத்தினார். ரஜினியிசத்தை, ரஜினி மேஜிக்கை மக்கள் கொண்டாடத் தயாராக இருக்கும் பொழுது, அவருக்குக் காதல் காட்சிகளை வைக்க, தார்மீக அறச் சிக்கல்கள் ஏன் ரஜினிக்கும், அவரை இயக்கியுள்ள முருகதாஸ்க்கும் எழுந்தது எனப் புரியவில்லை. ஆனால், ரஜினி 10 பேரை அடித்துப் பறக்கவிடுவது போல் காட்சிகளை உருவாக்க எந்தச் சிக்கலோ, தயக்கமோ இருப்பதில்லை.

35 வயதான தனுஷ், தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட ஒருவருக்குத் தகப்பனாய் நடிப்பது இங்கே கொண்டாடப்படுகிறது. ஆனால், 69 வயதுக்காரர் 35 வயதுக்காரராகத் தோன்றினால், அதை “நடிப்பு” என்று இயல்பாக எடுத்துக் கொள்ள ஏன் முடியவில்லை? உடையலங்காரமும் ஒப்பனையும், இளமையோடு திரையில் துள்ளித் திரிய ரஜினிக்கு உதவியுள்ளது. ரஜினி காக்கி உடை அணிந்திருக்கும் பொழுது மட்டும், இன்னும் கொஞ்சம் கவனமாக அவருக்கு ஷாட்களை வைத்திருந்திருக்கலாம் சந்தோஷ் சிவன்.

ரஜினியின் வயதைக் குறித்த பிரக்ஞை, முருகதாஸை மிகவும் தொந்தரவு செய்திருக்கும் போல். யோகிபாபு, ரஜினியின் வயதைக் கொண்டு 2-3 இடத்தில் கவுன்ட்டர் தருகிறார். போதாக்குறைக்கு, தன் வயதின் பொருட்டு ரஜினியை ஸ்ரீமனிடம் பாவமன்னிப்பு கேட்க வைத்து விடுகிறார் முருகதாஸ். ரஜினி படம் எடுக்க வந்துவிட்டு, முருகதாஸ்க்கு ஏன் இவ்வளவு குழப்பங்கள்? தனக்கான அரசியலைப் பேச முற்பட்ட ரஞ்சித் கூட, கபாலியிலும் காலாவிலும் அழகான மெச்சூர்ட் ரொமான்ஸைக் காட்டியிருப்பார். ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜும், ரஜினியிசம் குறையாமல் அந்த ரொமான்ஸ் மேஜிக்கை நிகழ்த்திக் காட்டியிருப்பார் பேட்ட படத்தில். ஆனால் முருகதாஸோ, மீசைக்கும் ஆசை, கூழுக்கும் ஆசை என்பது போல், நயன்தாராவைப் படத்திற்கு நாயகியாக்கிவிட்டு, பின், ஆடத் தெரியாதவர் கூடம் கோணல் எனச் சொன்ன கதையாக ரஜினியின் வயதைக் காரணம் காட்டிச் சொதப்பியுள்ளார் முருகதாஸ்.

ஸ்பைடர், சர்கார் முதலிய படங்களைத் தொடர்ந்து, இப்படத்தின் க்ளைமேக்ஸையும் எப்படி முடிப்பது எனத் தெரியாமல், க்ளைமேக்ஸ் சிண்ட்ரோமில் சிக்கியுள்ள இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பரிதவித்துள்ளது பட்டவர்த்தனமாய்த் தெரிகிறது.