Shadow

Extraction விமர்சனம்

extraction-review

இந்திய போதைக் கடத்தல் மன்னன் சிறையில் அடைபட்டிருக்க, அவனது மகன் ஓவி மஹாஜனைக் கடத்தி விடுகிறான் பங்களாதேஷ் கடத்தல் மன்னன் அமிர். ஓவியைப் பணயத் தொகை தராமல் விடுவிக்க, ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு கூலிப்படை பங்களாதேஷ் தலைநகரம் டாக்காவில் இறங்குகிறது. அடைபட்ட பையனை, ஆஸ்திரேலியக் கூலிப்படையைச் சேர்ந்த நாயகன் டைலர் வெளியில் கொண்டு வந்த பிறகு, ஆஸ்திரேலியக் குழு யாரோ ஒருவனால் தாக்கப்படுகிறது. மறுபுறம், ஓவியை மீட்டுக் கொல்ல, அமிரின் ஆட்களும், பங்களாதேஷ் இராணுவமும் டாக்காவை முழுவதும் மூடித் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்றனர். இந்தக் குழப்பங்களை எல்லாம் மீறி, ஓவியைப் பத்திரமாக இந்தியா கொண்டு வந்து டைலர் சேர்க்கிறானா என்பதுதான் படத்தின் கதை.

மார்வல் படங்களுக்கு ஸ்டன்ட் டைரக்டராகப் பணியாற்றிய சாம் ஹார்க்ரேவ் இயக்கியுள்ள முதல் படம். தோர் ஆக நடித்த க்றிஸ் ஹெம்ஸ்வொர்த், டைலர் ரேக்-காக நடித்துள்ளார். எத்தனை பேர் வந்தாலும் கொன்று தீர்க்கும் அசகாய சூரன் பாத்திரத்திகுக் கச்சிதமாகப் பொருந்துகிறார். எனினும் பரபரவென ஓடிக் கொண்டேயிருக்கும் ஆக்ஷன் காட்சிகள், வீடியோ கேம் பார்க்கின்றோமோ என்ற பிரமையை ஏற்படுத்துவதுதான் படத்தின் மிகப் பெரிய மைனஸ்.

படம் நிதானமாகத் தொடங்கி, ஓர் ஆக்ஷன் படமாக அழகாய் மாறினாலும், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் போல் திரைக்கதை தள்ளாடுகிறது. டாக்காவை விட்டு பத்திரமாக வெளியில் போக ஒரு திட்டவட்டமான பிளான் எதுவும் நாயகனிடம் இல்லை. அவனது ஒரே நம்பிக்கை, எத்தனை பேர் வந்தாலும் சுட்டுத் தள்ளும் மூர்க்கம்மட்டுமே! ஒரே ஆறுதல், ஆயுதங்களுடன் ஓடி வரும் சிறுவர்களைக் கொல்லாமல் தூக்கி மட்டும் வீசுகிறார். அதே ஈர மனதுடைய நாயகன், ஓவியின் கையில் துப்பாக்கியைப் பார்க்கும் பொழுது பதறாமல் தியாகி போன்று ரியாக்ஷன் தருவது கொடுமை.

குண்டு மழையில் இருந்து தப்பித்துச் சுட்டுக் கொண்டே இருப்பது போதுமானதென நினைத்து விட்டார் போலும் ஸ்டன்ட் இயக்குநரான சாம் ஹார்க்ரேவ். க்றிஸ் ஹெம்ஸ்வொர்த்க்கு, ஓவி மீது ஏற்படும் எமோஷனல் பாண்டிங் சரியாகக் கனெக்ட் ஆகவே இல்லை. அவரது மகனின் கால்கள் அடிக்கடி நினைவுக்கு வரும் கிளிஷே காட்சிகளும் நாயகனின் வலி மிகு மனதைப் பார்வையாளர்களுக்குக் கடத்தவில்லை.

இந்தப் படத்தின் ஸ்வீட் சர்ப்ரைஸ் சஜுவாக வரும் ரந்தீப் ஹூடாதான். அவருக்கும், ஹெம்ஸ்வொர்த்க்குமான சண்டையை மிகவும் பிரயத்தனப்பட்டு, பல ரிஹர்சல்கள் செய்து, பிசியான சாலைகளில் எடுத்தோம் என இயக்குநர் பெருமையாகக் கூறினார். படத்தின் கலவையான கேஸ்ட்டிங்கும் (casting) ஈர்ப்பாக உள்ளன. அந்த ஆஸ்திரேலியக் கூலிப்படையின் தலைவி நிக் கான்-ஆக ஈரானில் பிறந்த ஃப்ரென்ச் நடிகை ஃபரஹானியும், ஓவி மஹாஜனாக ருத்ராக்ஷ் ஜெய்ஸ்வாலும் நடித்துள்ளார். இதில் சற்றும் ஒட்டாதவர் எனப் பார்த்தால், அமிராக வரும் ப்ரியான்ஷு பையனுலி தான். அந்தப் பாத்திரத்திற்கு பங்களாதேஷ் நடிகர் யாரையாவது போட்டிருந்திருக்கலாம்.

வில்லனை உயிருடன் விட்டால் ஆடியன்ஸ் நிறைவாக உணரமாட்டார்கள் என அதையும் அவசர கதியில் சுபமாக முடித்துள்ளனர். எதிர்பார்த்த பணம் வரவில்லையென ஏற்கெனவே கடுப்பில் இருக்கும் கூலிப்படை, ஏன் தேடிப் போய் வில்லனைக் கொல்கிறார்கள் என்பது ரூஸோ பிரதர்ஸ்க்கே வெளிச்சம்.