Shadow

The tale of the Princess Kaguya (2013) விமர்சனம்

ஜப்பான் நாட்டுப்புறக் கதை ஒன்றை அழகான அனிமே (Anime – Japanese animation) படமாக உருவாக்கியுள்ளார் இசாவோ டகஹாட்டா (Isao Takahata). இது அவர் இயக்கிய கடைசிப்படமும் ஆகும். சிறிய வயதில் அவர் படித்த, ‘ஒரு முங்கீல் வெட்டியின் கதை’ என்ற நாட்டுப்புறக் கதைக்கு அனிமேஷன் உருவம் கொடுக்க வேண்டுமென்பது அவரது ஆசை. சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக அனிமேஷன் துறையில், கதாசிரியராகத் தயாரிப்பாளராக இயக்குநராகப் பணியாற்றிய டகஹாட்டா, தனது இளம் வயது கனவிற்கு அவரது 78 வது வயதில் உயிர் கொடுத்தார்.

வழக்கம் போல், மலையில் மூங்கிலை வெட்டிக் கொண்டு திரும்பும் பொழுது, ஓர் அதிசயமான வெளிச்சம் மூங்கிலின் அடித்தண்டில் இருந்து வருவதைக் காணுகிறார் ஒரு மூங்கில் வெட்டி. அருகில் சென்று பார்க்கும் பொழுது, ஒரு மூங்கில் குருத்து பிரகாசமாய் வளர்ந்து மலருகிறது. அந்த மலர்ந்த மூங்கில் குருத்தில் இருந்து, உள்ளங்கைக்குள் அடங்கி விடுமளவு ஒரு சின்னஞ்சிறிய தேவதை தோன்றுகிறாள். படம் தொடங்கிய நொடி முதல், அடுத்த 30 நிமிடங்களுக்குப் படம் மிகப் பெரிய கொண்டாட்டமாக உள்ளது. அந்த தேவதை, கைக்குழந்தையாக மாறி, பின் தவழுவது, நிற்பது, மலைக்காடுகளில் ஓடுவது, மிருகங்களைக் கண்டு மகிழ்வது, சிறுவர்களுடன் சேர்ந்து பாடுவது என என்றென்றும் மனதை விட்டு நீங்காத அழகிய ஃப்ரேம்களாக, இனிய நாஸ்டாலஜியாக மனதிலேயே தங்கி விடுகிறது. மீண்டும் மீண்டும் முதல் அரைமணி நேரத்தைப் பார்க்கத் தோன்றுமளவிற்கு மிக நேர்த்தியான வண்ணக் கோர்ப்புகளாலும் இசையாலும் கவர்ந்துள்ளனர்.

Princess-Kaguya

தேவதையை, ஏதோ ஒரு வனாந்திர மலைக்கிராமத்தில் வளர்ப்பதா எனத் தோன்ற, மூங்கில் வெட்டி தன் மகளைத் தலைநகரத்திற்கு அழைத்துச் செல்கிறார். ராஜ குடும்பத்துப் பெண்களைப் போல், தன் மகளும் மாறவேண்டுமெனப் பிரயத்தனப்படுகிறார். மாளிகை, கலைகளில் தேற ஒரு ராஜாங்க ஆசிரியை என தேவதையை ஒரு விலையுயர்ந்த சிறைக்குள் அடைத்துவிடுகிறார் மூங்கில் வெட்டி. அவரது அளவுகோல்களின்படி, பணக்கார வாழ்க்கையும், அரசவையில் கிடைக்கும் கெளரவமும்தான் வாழ்வின் மிகப் பெரிய பேறாக உள்ளது. அது தன் மகளுக்குக் கிடைக்கவேண்டுமென நினைக்கிறார். அந்தக் குழந்தை கிடைத்த நாள் முதல், அவர் “இளவரசி” என்றே அழைத்து வருகிறார். மகள், கலைகளில் எல்லாம் தேர்ந்ததும், அரண்மனையில் இருந்து ஒருவரை வரவழைத்து தனது மகளுக்குப் பெயர் சூட்டச் சொல்கிறார்.

தேவதையின் வசீகரத்தால் கவரப்படும் அவர், நாயகிக்கு “ககுயா” என பெயர் சூட்டுகிறார். ஜப்பானிய மொழியில் அதற்கு, “பிரகாசமான ஒளி” என்று பொருள்.

தன் விருப்பத்திற்கு எதிராக இளவரசி ககுயாவின் தந்தை நடக்கும் பொழுது, அந்த இளவரசியின் மனதில் என்ன ஓடியிருக்கும்? அந்த மர்மமும் புதிரும் தான், 50 ஆண்டுகளாக இயக்குநர் இசாவோ டகஹாட்டாவின் மனதை அலைகழித்துக் கொண்டிருந்தது. அதற்கு விடைகாணும் விதமாகத்தான், அந்த நாட்டுப்புறக் கதையை அனிமேவாக மாற்ற பெருவிருப்பம் கொண்டார்.

இளவரசியை, அரசவையைச் சேர்ந்த பிரமுகர்கள் அடைய நினைக்கின்றனர். அவள் சாமர்த்தியமாக அதிலிருந்து தப்புகிறாள். இறுதியில் மன்னரே இளவரசியைத் தேடி வந்துவிடுகிறார். அரசரின் அந்தச் செயலை வெறுத்து ஒதுக்கும் இளவரசிக்கு என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.

தேவதையாக இருந்தாலும், அவள் பூமியில் பெண்ணாகப் பிறந்துவிட்ட பிறகு, அனைத்துப் பெண்களையும் போலவே நடந்து கொள்ளக் கட்டாயப்படுத்தப்படுகிறார். இயற்கையை விட, தலைநகரின் பளபளப்பு தான் உயர்வானது என நினைத்து விடுகிறார் மூங்கில் வெட்டி. மனிதர்களுக்கு உண்மையான மகிழ்ச்சி எங்குள்ளது என்றோ, தன் பிரியத்துக்குரியவர்கள் விழைவது என்னவென்றோ கடைசி வரை புரியாமல் போய்விடுகிறது. மனிதர்களை அலைகழிக்கும் இந்த மாயை, தேவதையையும் பீடித்துக் கொள்கிறது. தான் யாரென உணர்ந்த பின்னும், அதிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கிறார் இளவரசி. கொண்டாட்டமாய்ப் பேரனுபவமாய்த் தொடங்கும் படம், அடர்ந்த உறைய வைக்கும் மெளனத்தை ஏற்படுத்தியவாறு முடிகிறது.