Shadow

Untraceable (2008) விமர்சனம்

untraceable-review

கடந்த ஒரு வாரம் பத்து நாட்களாக, ஃபேஸ்புக்கில் பெரியாரியம், பெண்ணியம், பாலியல் சுதந்திரம் குறித்து இரண்டு முற்போக்கு குழுக்கள் விவாதம் செய்து வருகின்றன. பரஸ்பரம் குற்றம் சாட்டியும் வருகின்றன. சில அந்தரங்கப் பேச்சுகள், வீடியோக்கள் என விவாதம் தனிப்பட்ட தாக்குதலைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. அந்த இரண்டு குழு பற்றியும் எனக்குப் பெரிய அக்கறை இல்லை. ஆனால், அவர்கள் இருவரும் தந்தை பெரியாரைத் தனது துணைக்குக் கூப்பிட்டுக் கொள்கிறார்கள். அது தான் வருத்தம். பாவம் பெரியார். இந்த இரண்டு குழுவைச் சார்ந்தவர்கள் இதற்கு முன்பும் பெண்ணியம், சுதந்திரம், பகுத்தறிவு என பல தலைப்புகளில் மிகச் சிறப்பான பதிவுகளைப் பகிர்ந்திருக்கிறார்கள். ஆனால் அதிகம் கவனிக்கப்படாத அந்தப் பதிவுகளை விட, பெண்ணுடல், ஆபாசப் பேச்சு என பதிவுகள் வந்ததும் அங்கு ஆயிரக்கணக்கில் லைக்குகளும் பின்னூட்டங்களும் குவிந்து வருகிறது. அங்கு லைக், பின்னூட்டம் போடுபவர்களில் பெரும்பாலானோருக்கு அவர்களுக்கிடையே இருக்கும் பிரச்சனை பற்றியெல்லாம் கவலையிருப்பதாகத் தெரியவில்லை. ஒரு குதூகலத்துக்காக, சில ஹேக் (hack) செய்யப்பட்ட வீடியோக்களுக்காகத் துண்டு போட்டுக் காத்திருக்கிறார்கள்.

இப்படித்தான் இந்த மெய்நிகர் உலகின் சமூக மனம் இருக்கிறது. இந்தக் கூட்டு மனவியல், குழு மனப்பாங்கு தனிப்பட்ட மனிதனை பல வகைகளில் தொந்தரவு செய்கிறது. மனிதத்தைக் கொல்கிறது. மதம், சாதி, இனம் என எதுவாகட்டும் கும்பலாகச் சேர்ந்தால் கிடைக்கும் ஒருவித போதை மிகப் பெரிய ஆதிக்கத்தை, அதிகாரத்தை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்றவற்றில் நமது அறச்சீற்றத்துக்கு எந்த உள்ளார்ந்த மதிப்பும், அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை (என்னையும் சேர்த்துத் தான் கூறுகிறேன்). ஒரு சமூக அவலத்துக்கு லைக், ஷேர் , கமென்ட் செய்தாலே ஏதோ மிகப்பெரிய சமூகப் பங்களிப்பு ஆற்றிவிட்டோம் என்ற போலிப் பெருமிதம் நம்மிடையே வந்து விடுகிறது.

இந்தச் சமூக ஊடகங்களின் இயங்கும் மனிதர்கள் குறித்த ஒரு சுய விமர்சனமாக Untraceable திரைப்படத்தைக் குறிப்பிடலாம். கதை வழக்கமான சீரியல் கில்லர், அவனை விரட்டிப்பிடிக்கும் போலீஸ், நீதி வென்றது வகை திரைப்படம் தான். ஆனால் அதில் எடுத்துக் கொண்ட தீம் மிக முக்கியமானது. இந்தப் படத்தில் சீரியல் கொலைகாரன் உண்மையில் எந்தக் கொலையையும் செய்வதில்லை. அவன் ஹைடெக் & ப்ரில்லியன்ட். ரேண்டமாக யாராவது ஒருவரைக் கடத்துவான். அவனைக் கட்டிப்போட்டுவிட்டு அவனை மெல்ல மெல்லக் கொல்வதற்கான செட்டப்பை செய்து பிறகு இன்டெர்நெட் வழியாகச் KillwithMe எனும் வெப்சைட்டில் ரியல் டைம் ஸ்ட்ரீம் செய்வான். அந்த வீடியோ உலகில் எத்தனை பேர் பாக்கிறார்களோ அதற்கேற்ப அந்த நபர் கொல்லப்படும் நேரம் குறைந்து கொண்டே சென்று கடைசியில் இறப்பார்.

முதல் கொலையில் கடத்தப்பட்டவனைக் கட்டிப் போட்டு விட்டு நெஞ்சினில் சின்ன கீறல் போட்டு லேசா இரத்தம் கசிவது போல வைத்திருப்பான். அப்புறம் அவனது மணிக்கட்டில் இரத்தம் உறைவதைத் தடுக்கும் மருத்தை தனியாக டிரிப் ஏற்றி இணைத்திருப்பான். இது இன்டர்நெட்டில் லைவ் ஸ்ட்ரீம் ஆகும் போது இந்தக் காட்சியைப் பார்க்கும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்த மருந்து அதிகமாக, அவனது உடலில் கலக்க ஆரம்பிக்கும். ஒருவேளை பார்ப்பவர் எண்ணிக்கை குறைந்தால் மருந்து வெளிவருவதும் குறையும். இப்படி ஒவ்வொரு கொலையின் போதும் ஒரு செட்டப், அதனை இணையத்தில் ஸ்ட்ரீம் செய்தல், பார்வையாளர் எண்ணிக்கைக்கு ஏற்ப கடத்தப்பட்ட நபர் கொல்லப்படுதல் என தொடர்ந்து கொலைகளைச் செய்வான். குற்றப் புலனாய்வு துறைப் பெண் போலீஸ் தான் பிரதான பாத்திரம். இவர் அந்தக் கொலைகாரனைக் கண்டுபிடித்து அழிப்பது மிச்ச கதை.

ஒவ்வொறு முறை அவன் கடத்தப்பட்ட நபரை ஸ்ட்ரீம் செய்யும் போதும் மிகப் பெரிய எண்ணிக்கையில் பார்வையாளர்கள் கூடுகின்றனர். மரணம் மிக மிகச் சீக்கிரமாக நிகழ்ந்துவிடுகிறது. அந்தக் கொலைகார சைக்கோ, நான் யாரையும் கொல்லவில்லை, மக்கள் தான் கூட்டாகக் கொலை செய்கிறார்கள் என்று லாஜிக் வேறு கொடுப்பான். அரசு, ‘யாரும் இந்த லைவ் ஸ்ட்ரீமைப் பார்க்க வேண்டாம். தவிருங்கள்’ எனக் கேட்டுக் கொண்டாலும், நான் ஒருத்தன் பார்க்காததால் என்ன நிகழ்ந்து விடப்போகிறது எனப் பார்ப்பவர் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக் கொண்டே செல்கிறது.

இணையம் தந்த பல நன்மைகளை விட, இது போல பொறுப்பற்ற ஒரு சமூகத்தைக் கட்டமைத்திருப்பது நமது மனித குலத்துக்கு மிகப் பெரிய தீமையாகியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சுதந்திரமும் கட்டுப்பாடும் வேறு வேறு, எதிர் எதிரானவை என நினைப்பதால் நிகழும் அபத்தம். உண்மையில் கட்டுப்பாடு சுதந்திரத்தின் அங்கம் என உணரும் போது இந்த மெய் நிகர் உலகின் சமூக மனம் சற்று நெறிபடலாம் என்றே தோன்றுகிறது.

அன்ட்ரேசபிள், கட்டாயம் பார்க்கவேண்டிய படம் அன்று. ஆனால், திரைக்கதை கூறும் சமூகப் பார்வையை நாம் அவசியம் உணர்ந்து கொள்ளவேண்டும். அமேசான் ப்ரைமில் காணக் கிடைக்கிறது.

– ஜானகிராமன் நா