Search

தொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியும் (2017) விமர்சனம்

thondimuthalum-review

‘திருட்டுப்பொருளும் சாட்சியும்’ என்பதே தலைப்பின் பொருள்.

ஆங்கிலத்தில், Angle in Details என்று சொல்லுவார்கள். மிக எளிமையான விஷயத்தைக் காட்சிப்படுத்துவது, அதனைப் புரிந்துகொள்வதில் விரிவாக ஆழம் செல்லச் செல்ல தெய்வீகம் வெளிப்படுகிறது. எளிமையே பிரம்மாண்டம். அதனைக் காணவும் மற்றவருக்கு அதே அனுபவத்தைக் கடத்தவும் சற்றே பெரிய கண்கள் தேவைப்படுகிறது. அது தனிக் கலை.

இந்தக் கலை பெரும்பாலான கேரள திரைப்படக் கலைஞர்களுக்குப் பிறப்பிலேயே வாய்த்திருக்கிறது எனலாம். மிக மிக எளிமையான கதையை கூட மனதில் நீங்காமல் இருப்பது போல காட்சிப்படுத்துவதில் கில்லாடிகள்.

ஃபஹத் ஃபாசில் நடிப்பில் இயக்குநர் திலீஷ் போத்தன் எடுத்த, ‘மகேஷின்டே பிரதிகாரம்’ என்ற படம் மிக நன்றாக ஓடியது (தமிழில் கூட அப்படம், உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் நிமிர் ஆக மறு உருவாக்கம் செய்யப்பட்டது). அதே இயக்குநர் ஃபஹத்துடன் இணைந்து, ‘தொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியும்’ படத்தை எடுத்திருக்கார்.

தமிழில் விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என பல ஸ்டார் நடிகர்கள் இருந்தாலும் அவர்களின் படங்களில் அவர்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை விட, அந்த நடிகர்களின் கதாநாயக பிம்பமே முன்னாடி நிற்கும். ஆனால், ஃபஹத் எனும் நடிகன் தனது படங்களில் தன்னுடைய கதாநாயகப் பிம்பத்தை மிக எளிதாகக் கடந்து, அந்தக் கதையின் பாத்திரமாக நிற்பது தான் பலம். அதனைச் செய்வதற்கு அவர் அதிக பிரயத்தனப்படுதில்லை. மிக அநாயசமாக அதனைத் தன் நடிப்பில் கொண்டு வருகிறார்.

ஸ்ரீஜாவும் பிரசாத்தும் கலப்பு திருமணம் செய்கிறார்கள். பெண் வீட்டில் எதிர்ப்பு. அதனால் காசர்கோடுக்கு இடம் பெயருகிறார்கள். காசர்கோட்டில் ஒரு சாதாரணமான மதிய வெயில் நேரத்தில் பஸ்ஸில் இருவரும் பயணிக்கும் போது, ஃபகத், ஸ்ரீஜாவின் பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். ஸ்ரீஜா அரை தூக்கத்தில் இருக்கும் போது, அவளது தாலி செயினை பிக்பாக்கெட் அடிக்கிறான். ஸ்ரீஜா கொஞ்சம் சுதாரித்துத் திரும்பிப் பார்க்கும் போது, அந்த செயினை ஃபகத் விழுங்கிவிடுகிறான்.

பஸ் உள்ளுர் போலீஸ் ஸ்டேஷனுக்கு செலுத்தப்படுகிறது. ஃபகத், தான் செயினைத் திருடவில்லை என சாதிக்கிறான். பெயரைக் கேட்டால் ஃபஹத், தனது பெயரும் பிரசாத் என்கிறான். ஸ்ரீஜா இதனை விடுவதாக இல்லை. சந்தேகத்தின் அடிப்படையில் அனைவரும் போலீஸ் ஸ்டேஷனிலேயே தங்குகிறார்கள். அடுத்த நாள் ஃபகத் தனது காலைக் கடமையைச் செய்யும் போதெல்லாம் ஆயுதம் தாங்கிய போலீஸ் கூடவே வருகிறது.

அவனது பிடிவாதத்தைக் கண்ட போலீஸ் எக்ஸ்ரே எடுக்க கூட்டிச் செல்கிறது. அதில் அவனது வயிற்றில் செயின் இருப்பது உறுதியாகிறது. அதனை பகத் பெறுமையுடன் ஒத்துக்கொள்கிறான். பிறகு அந்த செயின் தானாக அவனது வயிற்றிலிருந்து வெளிவர காத்திருக்கிறார்கள். இடையில் ஃபஹத் தப்பிக்கிறான். ஓடிச் சென்று பிடிக்கிறார்கள். திரும்பவும் ஸ்கேன் எடுத்தால், வயிற்றில் செயின் இல்லை. என்ன ஆனது எனக் கேட்டால், அதனை தனது பாதுகாப்புக்குக் கூட வந்திருந்த ஒரு ஹெட் கான்ஸ்டபிளிடம் கொடுத்து விட்டதாகச் சொல்கிறான். அவர் பதற்றமாகிறார்.

கடைசியில் என்னவானது, அந்த செயின் கிடைத்ததா, ஹெட் கான்ஸ்டபிள் என்ன செய்தார், ஃபஹத் என்ன ஆனான் என்பதைப் படம் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஏற்கெனவே சொன்னது போல மிக மிக எளிமையான கதை. அதனை நெம்புகோல் போட்டு உயர்த்தி வைத்திருப்பது திரைக்கதையும் கதாபாத்திரத்தின் நடிப்பும் தான். குறிப்பாக ஃபஹத் மற்றும் ஹெட் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் சிபி தாமஸும் கலக்கியிருக்கிறார்கள்.

போலீஸ் ஸ்டேஷன் அவஸ்தைகளை, அவர்கள் பக்கம் நாம் காணத் தவறும் பிரச்சனைகளை, இது போன்ற விஷயங்களில் அவர்களின் அணுகுமுறையைப் பக்கத்திலிருந்து பார்ப்பது போல உள்ளது படம்.

மிக நல்ல படம். வாய்ப்புக் கிடைத்தால் மளையாளத்திலேயே பார்த்துவிடுங்கள். இல்லையென்றால் இதனைத் தமிழ்ப்படுத்துகிறேன் என்று நம்மை படுத்தி விடுவார்கள்.

– ஜானகிராமன் நா