Shadow

தீராக்காதல் விமர்சனம்

பிரிந்த காதல் என்பது ஒருவழிப்பாதை. அதில் திரும்ப முடியாது. அப்படியே முடிந்தாலும், ‘திரும்பக் கூடாது’ என்பதைப் பேசுகிறது தீராக்காதல் திரைப்படம்.

கொஞ்சம் விட்டுவிட்டு என்றாலும், இன்ப நிழலாடும் வீட்டிற்குள் திடீரென புயல் அடித்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு புயலைச் சந்திக்கிறார் நாயகன் ஜெய். மனைவி ஷிவதா, மகள் ஆர்த்தி, நல்ல மரியாதையும் சம்பளமும் உள்ள வேலை என நிறைவான வாழ்வை வாழ்ந்து வருகிறார் ஜெய். அலுவலக வேலையாக ஒருமுறை ரயில் பயணம் மேற்கொள்கிறார். அந்தப் பயணத்தில் தனது முன்னாள் காதலியான ஐஸ்வர்யா ராஜேஷைச் சந்திக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் தனது மண வாழ்வுப் பிரச்சனைகளை ஜெய்யிடம் சொல்கிறார். அதன் பிறகு அவர்களின் உறவு எந்த அளவிற்கு வளர்கிறது, அதன் பின் இருவர் வாழ்விலும் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன எனப் பயணிக்கிறது படம்.

கதாபாத்திரங்களின் உணர்வுகள் வழியாக ரசிகனுக்குக் கதையை உணர்த்த வேண்டிய பொறுப்பு இயக்குநருக்கு. அதனால் ஒவ்வொரு கலைஞரையும் பார்த்துப் பார்த்து வேலை வாங்கியுள்ளார். அதில் முதன்மையான ஸ்கோர் சில இடங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் பண்ணியிருந்தாலும், தன் நோக்கம் மாறாமல் இறுதி வரை விடாப்பிடியாக நிற்கும் ஜெய் கேரக்டர் ஒருபடி உயர்ந்தே நிற்கிறது. நிதானமான நடிப்பால் ஒரு மேல் நடுத்தர் குடும்பத் தலைவனாக மனதில் நிற்கிறார். ஜெய்யின் மனைவியாக வரும் ஷிவதா தன் ரியாக்‌ஷன்களால் அசரடிக்கிறார். க்ளைமேக்ஸில் தான் அவருக்கு ஸ்கோப் இருக்கிறது. இருந்தாலும் சின்ன இடத்திலும் பெரிய தடம் பதிக்கிறார். ஜெய்யின் நண்பராக வரும் அப்துல் அழகாக கவர்கிறார். ஒரு சில இடங்களில் அவர் பேசும் வசனங்களுக்குத் திரையரங்கில் சிரிப்பலை எழுகிறது.

சித்துக்குமார் தன் இசையால் இந்தக் கதைக்கு பெரும் உதவி செய்துள்ளார். பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும், பின்னணி இசை சரியாக அமைந்துள்ளது. ரவிவர்மன் நீலமேகத்தின் ஒளிப்பதிவில் இருக்கும் நேர்த்தியும் அழகியலும் அசர வைக்கிறது. அப்பார்ட்மென்ட், ரயில் காட்சிகள், மங்களூர் காட்சிகள் என கேமராவைச் சுழல விட்டு அசத்தியுள்ளார்.

எக்ஸ் லவ்வர் மீட் என்பது நினைத்துப் பார்க்க மட்டுமே நன்றாக இருக்கும். அதை வாழ்வில் தொடர்ந்து நடத்திப் பார்க்க நினைத்தால், குடும்ப வாழ்வின் சமநிலை பாதிக்கப்படும் என்பதை அறத்தோடு நின்று பேசியிருக்கிறார் இயக்குநர் ரோஹின் வெங்கடேசன். பேசிய விஷயம் மிகச் சிறப்பானது தான். அதைச் சரியான திரைமொழியோடு அணுகவில்லை என்பது தீராக்காதலில் ஏற்பட்டுள்ள வடு. ஜெய், தன் மனைவியிடம் ஐஸ்வர்யா ராஜேஷ் விஷயத்தை ஏன் முதலிலேயே சொல்லவில்லை என்ற கேள்வி படம் பார்க்கும் போது எழுந்து கொண்டே இருக்கிறது. அதே போல் ஐஸ்வர்யா ராஜேஷ் கணவரின் கேரக்டரை, கதையை நகர்த்த வேண்டும் என்பதற்காக வம்படியாக வடிவமைத்திருப்பது போலவே தோன்றுகிறது. அந்தக் கேரக்டர் அவ்வளவு செயற்கைத்தனமாக இருக்கிறது. ஜெய் – ஐஸ்வர்யா ராஜேஷின் காதல் காட்சிகளில் எந்தவிதப் புதுமையோ, இன்ட்ரஸ்டிங்கான அம்சங்களோ இல்லை. மேலும் முன்பாதி மொத்தமாக நம்மை சோர்வாக்கவே செய்கிறது. பின்பாதியில் ஐஸ்வர்யா ராஜேஷ் பாத்திரம் மாறும் விதம், எதிர்பாராத விஷயங்களை எதிர்நோக்கும் போது ஜெய் சந்திக்கும் உளவியல், புறவியல் பிரச்சனைகள் ஆகியவை தான் படத்தைக் காப்பாற்றிக் கொண்டு போகிறது. க்ளைமேக்ஸைப் படத்தில் இருப்பவர்களும் சரி, படம் பார்ப்பவர்களும் சரி, அனைவருமே ஏற்றுக்கொள்ளும் படி அமைத்ததும் சிறப்பு. இன்னும் கொஞ்சமே கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ‘96 போல ஒரு காதல் கவிதை கிடைத்திருக்கும்.

– ஜெகன் கவிராஜ்