விஜய் ஆண்டனி முதல் முறையாகக் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். மக்களுக்கு நல்லது செய்யவேண்டுமென நினைக்கும் காவல்துறை அதிகாரியாக வருகிறார். ஆனால், ஒரு போலீஸ் படமாக இல்லாமல், 2018 இல் வந்த மிகச் சிறந்த பக்திப் படமென்ற புகழையே திமிரு புடிச்சவன் பெறும். படத்தில் விஜய் ஆண்டனி கதாபாத்திரத்தின் பெயர் முருகவேல். இயக்குநரின் பெயர் கணேஷா. நம்பியார் எனும் படத்தை இயக்கியவர்.
படத்தின் தொடக்கமே கொஞ்சம் அதிர வைக்கிறது. பிளேடைக் கொண்டு மிகக் கொடூரமான கொலை ஒன்றைப் புரிகிறார் விஜய் ஆண்டனியின் தம்பி. தனது தம்பி தான் அந்தக் கொலையைச் செய்தான் என்றும், மேலும் எட்டுக் கொலைகளைச் செய்துள்ளான் என்றும், அடுத்து ஒரு கர்ப்பிணிப் பெண்ணையும், ஒரு குழந்தையும் கொலை செய்ய உள்ளான் எனத் தெரிய வருகிறது விஜய் ஆண்டனிக்கு. நீதி, நேர்மை தவறாத நல்லவர், நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவேண்டுமென நினைக்கும் உத்தமரான எஸ்.ஐ. முருகவேல், சுடும் வரம்பில் ஓடும் தனது தம்பியின் முட்டிக்குக் கீழ் சுடாமல், தலையில் சுட்டு என்கவுன்ட்டர் செய்கிறார். படத்தின் எதிர்பாராச் சுவாரசியமே இதன் பின் தான்.
கொல்லப்படும் தம்பி, ஆவியாக வந்து முருகவேலைத் தூங்கவிடாமல் இம்சிக்கிறான். அதை உணராத மருத்துவரான லக்ஷ்மி ராமகிருஷ்ணனோ, Insomnia-விற்கு மருந்து கொடுக்கிறார். பேய்ச் சேட்டைக்கு அலோபதி மருந்து தீர்வளிக்குமா? தூக்கம் இல்லாததால் சீரற்ற ரத்தக் கொதிப்பால் தவிக்கிறார்.
ஆக, விஜய் ஆண்டனி எப்படி தன் குற்றவுணர்வில் இருந்து மீண்டு தூங்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் ஒரே ஆறுதல் நிவேதா பெத்துராஜ்தான். அவர் ஒருவருக்காகப் படத்தின் எல்லா இம்சையையும் பொறுத்துக் கொள்ளலாம். இயக்குநரின் மொத்த திறமையையும், அந்தக் கதாபாத்திரத்தைச் செதுக்குவதிலும், நிவேதா பெத்துராஜை அந்தக் கதாபாத்திரமாக மாற்றுவதிலுமே செலவிட்டிருப்பார் போலும். உணர்ச்சிகளே இல்லாத விஜய் ஆண்டனியின் முகத்தில், ரொமான்ஸ் அதில் துளியும் தெரியாவிட்டாலும், கேள்வி கேட்டுக் கேட்டே காதலை உறுதிபடுத்திக் கொள்கிறார். அவரிடம், அதாவது நிவேதா பெத்துராஜின் திமிரான உடல்மொழியும், அலட்சியமான வசன உச்சரிப்பும் செம! அவர் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாய்ச் சுவாரசியமாய் உள்ளன. சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘நான்’ படத்தில் ரூபா மஞ்சரி தவிர்த்து, பொதுவாக அவர் படங்களின் நாயகிகள் புது முகங்களாகவோ, அதிகம் அறியப்படாதவர்களாகவுமே இருப்பார்கள் என்பது உப தகவல்.
முருகவேல், ராயப்பேட்டையில் இன்ஸ்பெக்டராகப் பணி புரிகிறார். வடபழனியும் அவர் லிமிட்டில் தான் உள்ளன. அக்கோயிலில் பெரிய விழா நடக்கிறது. இரண்டே இரண்டு காவல்துறை அதிகாரிகள் தான் அங்கே உள்ளனர். ஒருவர் போலீஸ் பூத்துக்குள்ளும், மற்றொருவர் முருகனுக்கு மாலை போட்டிருக்கும் விஜய் ஆண்டனியே தான். மாலையைக் கழட்டாமல் முருகவேலால் அடிக்க முடியாது. மாலையைக் கழட்டினால், சிறார் குற்றவாளிகளுக்குக் கடவுள் பயம் போயிடுமே என்ற இக்கட்டில் தவிக்கிறார். கண நேரத்தில், ஒரு சிந்தனை எழுந்து, சாமி வந்ததாக ரெளத்திரம் பூணுகிறார். அச்சமயத்தில், ஒரு கையால் ஒருவனைப் பிடிச்சுத் தூக்கிப் போட்டால் அவன் கோபுர உயரத்திற்கு மேலே போய் தொபக்கடீரென கீழே விழுகிறான். நல்லவேளையாக, முருகன் அருளால் எந்த உயிர்ச்சேதமும் அங்கு நிகழ்வது இல்லை. முருகனின் மகிமையைத் திரையில் பார்த்து எவ்வளவு நாளாகிறது என்ற ஏக்கத்தையும் படம் போக்குகிறது.
மீசை பத்மாவாக சாய் தீனா மிரட்டுகிறார். அவரைக் கோழி திருடிய வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறார் விஜய் ஆண்டனி. லாஜிக் இல்லாவிட்டாலும், மூன்று முறை அவரை வெளியிலேயே வரவிடாமல் சிறையில் அடைக்கும் காட்சிகளை மக்கள் வெகுவாக ஆர்ப்பரித்து ரசிக்கின்றனர்.
விஜய் ஆண்டனிக்கு லோ பி.பி. (BP) இருக்கும் விஷயம் அனைவருக்குமே தெரிந்துள்ளது படத்தின் ஆச்சரியங்களில் ஒன்று. ‘இங்க பாருங்க இப்படித்தான் கம்பு சுத்தணும்’ என விஜய் ஆண்டனி சக காவலர்களுக்கு டெமோ காட்டுவதையெல்லாம் காட்சியாக வைத்து ஆச்சரியம் ஏற்படுத்துகிறார் இயக்குநர் கணேஷா. 14 ஆண்டுகளுக்கு முன், கோயில் படத்தில் புல்லட் பாண்டி செய்து காட்டிய வித்தையாச்சே என்று நாஸ்டால்ஜியா எழுகிறது.
குற்றங்கள் புரிய சிறுவர்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றனர் என்ற கருவை மையப்படுத்தியே படத்தின் கதையை எழுப்பியுள்ளார் இயக்குநர். ஆனால், அதற்கான எந்த நியாயத்தையும் கற்பிக்காமல், அசுவரசியமான ஹீரோயிசத்தால் சொதப்பியுள்ளனர்.