Shadow

காற்றின் மொழி விமர்சனம்

Kaatrin-Mozhi-movie-review

‘தும்ஹாரி சுலு’ எனும் ஹிந்திப் படத்தின் மறு உருவாக்கமாக வந்துள்ளது ‘காற்றின் மொழி’ திரைப்படம். சுலோச்சனாவாக நடித்த வித்யாபாலனின் பாத்திரத்தில் விஜயலக்‌ஷ்மியாக ஜோதிகா நடித்துள்ளார். நாயகியை மையப்படுத்திய படமாக ஜோதிகா தேர்ந்தெடுத்து நடிப்பது சிறப்பு. ஒரே மாதிரியான அம்சம் பொருந்திய கதைகளிலேயே உழலாமல், ஜோதிகாவைப் போல், முன்னணி நாயகர்களும் படத்தைத் தேர்ந்தெடுத்தால் எப்படியிருக்கும்?

பன்னிரெண்டாம் வகுப்பு தேறாத விஜியலக்‌ஷ்மிக்கு எதிர்பாராத விதமாக ஹலோ எஃப்.எம்.-இல் ஆர்ஜே-வாக (RJ – Radio Jockey) வேலை கிடைக்கிறது. அதனால் அவர் குடும்பத்தில் என்ன சிக்கல்கள் எழுகிறது என்றும், அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதும்தான் படத்தின் கதை.

ராதாமோகனின் ஆஸ்தான நடிகர்களான எம்.எஸ்.பாஸ்கரும், குமரவேலும் படத்தில் உள்ளனர். மொழி படத்தினைப் போலவே எம்.எஸ்.பாஸ்கருக்கு ஓர் அழுத்தமான பாத்திரம். மூலக்கதையில், ஒரு காட்சிக்கு வரும் பாத்திரத்தைத் தனது பாணியில் மேம்படுத்தியுள்ளார் ராதாமோகன். கவிஞர் கும்கியாகக் குமரவேல் வருகிறார். கும்பக்கரை கிருஷ்ணமூர்ர்த்தி என்பதன் சுருக்கம். அவரின் ஐடியாவைக் காதில் வாங்காமல், ஜோதிகா தனது பாணியில் எஃப்.எம். நிகழ்ச்சியை நடத்தினாலும், அதைப் பெரிதுபடுத்தாமல் பாராட்டும் நற்குணம் கொண்டவர். ஹலோ எஃப்.எம்.மின் ஹெட் மரியாவாக நடித்துள்ள லக்‌ஷ்மி மஞ்சுவும் தன் நடிப்பால் படத்திற்கு வலு சேர்க்கிறார்.

ஜோதிகாவின் கணவராக விதார்த் நடித்துள்ளார். மனைவியை விட்டுக் கொடுக்காத அன்பான கணவர் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். தான் விருப்பப்பட்டதைச் செய்யும் ஜோதிகாவிற்கு உற்ற துணையாக உள்ளார், அது சொதப்ப வாய்ப்புள்ளது எனத் தெரிந்தாலும். வேலையில் நிம்மதியின்மை, மனைவி செய்யும் ஆர்ஜே வேலை பிடிக்காமல் உள்ளுக்குள் தவிப்பது, மகன் காணாமல் போவதற்குப் பதறுவது என நிறைவாகத் தன் பாத்திரத்தைச் செய்துள்ளார். ‘எங்களைக் கொஞ்சம் தனியா இருக்கவிடுங்களேன்’ என்று வெடித்துச் சிதறாமல், ‘எப்படி சாப்பிட்டுக் கிளம்புறீங்களா?’ என்று தனது மாமனாரிடமும், மனைவியின் அக்காகள் குடும்பத்தினரிடமும் வலியோடு கேட்பது அட்டகாசம். ஜோதிகாவின் அக்காகளாக, ஹிந்திப்படத்தில் நடித்த இரட்டையர்களான சிந்து சேகரனும், சீமா தனேஜாவுமே நடித்துள்ளனர்.

பொன் பார்த்திபனின் வசனங்கள் படத்தினை அதன் மூலத்தை விட ஒரு படி மேலே உயர்த்தி விடுகிறது. ராதாமோகன் படங்களின் ஃபீல் குட் தன்மை மாறாமலும், மூலத்திற்கும் பங்கம் ஏற்படுத்தாமல் அலேக்காக ஒரு தளத்திற்குக் கொண்டு சென்றுள்ளார் என்றே சொல்லவேண்டும். ட்ரெயின் டிரைவரின் வலி மிகுந்த அழைப்புக்கு, ஜோதிகா சொல்லும் அட்டகாசமான ஆறுதல், பொன் பார்த்திபன் படத்திற்குக் கொடுத்துள்ள மேஜிக் டச்சிற்குச் சான்று. மும்பையில், வாவ் எஃப்.எம்.மில் நடக்கும் அந்த ஷோவின் பெயரே ‘தும்ஹாரி சுலு (உங்கள் சுலு)’. அது இரவில் நடக்கும் அடல்ட் டாக் ஷோ. அதை, இப்படத்தில், ‘மதுவோடு பேசுங்கள்’ என்ற நிகழ்ச்சியாக்கி, ஒருவரின் பிரச்சனைகளைக் காது கொடுத்துக் கேட்கும் ஆர்ஜே மதுவாக ஜோதிகாவைச் சித்தரித்துள்ளனர். அதற்குத் தோதாக வசனங்களை அமைத்ததால்தான் பொன் பார்த்திபனுக்கு இந்த விசேஷப் புகழாரம்.

ஹிந்திப் படத்தில், எஃப்.எம். நடத்தும் ஒரு போட்டியில் நாயகி வெல்கிறார் என்று மட்டுமே இருக்கும். ஆனால் இப்படத்திலோ, ஜோதிகா தான் டூர் போகாத இடமொன்றைப் பற்றி மிக அழகாக விவரிப்பார். ‘அழகிய தீயே’ படத்தில் பிரகாஷ்ராஜிடம், தன் காதலியை முதலில் சந்தித்தது பற்றி பிரசன்னா சொல்லும் காட்சி போல்! இப்படி, ராதாமோகனின் அடையாளமாக உள்ள க்ளிஷேகள் படத்தில் இருந்தாலும் ரசிக்க வைக்கிறது. இன்னொரு உதாரணம், மனோபாலாவின் தலைக்கு மேல் பல்ப் எரிவதும், பக்கத்தில் மணி அடித்து, அவருக்குள் எழும் காதலை உறுதிபடுத்தும் காட்சியைச் சொல்லலாம். அந்தக் காட்சிக்குத் திரையரங்கத்தில் சிரித்துக் கொண்டே மக்கள் கைதட்டுகின்றனர். இந்த வருடத்திலேயே, இது இரண்டாவது ரீமேக் எனினும், அது எல்லாம் பார்வையாளர்களின் கவனத்தில் எழாமல், இந்தக் காற்றின் ‘மொழி’ ராதாமோகனின் படைப்பாகவே மனதில் நிற்கும்.