32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

என் முதல் தீபாவளி – நடிகர் ஷாம்

Dinesh R சேலம் Published: 26/10/2016 3 நிமிட வாசிப்பு Updated: 12/11/2017 சினிமா
எழுத்து அளவு:

Actor Shyam

திருமணமான புதுமணத் தம்பதிகளைப் போல திரையுலகக் கதாநாயகர்களும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார்கள். அந்தத் தீபாவளிக்கு அவர்கள் நடித்த படம் வந்தால் அவர்களுக்கு அது தலை தீபாவளியைப் போன்ற மகிழ்ச்சி தரும்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அந்த வகையில் எந்த ஆண்டும் இல்லாத உற்சாகமாக இந்த ஆண்டு தீபாவளியை எதிர்கொள்கிறார் நடிகர் ஷாம். அவரது உற்சாக எதிர்பார்ப்புக்குக் காரணம், அவர் நடித்த, ‘ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்’ என்ற கன்னடப் படம் தீபாவளி அன்று வெளியாகிறது.

இப்படத்தில் கதாநாயகனாக அங்கே முன்னணிக் கதாநாயகனான யஷ் நடித்துள்ளார். நாயகியாக வருகிறவர் ராதிகா பண்டிட். இதுவரை நாயகனாக நடித்து வந்த ஷாம், அப்படத்தில் எதிர் நாயகனாக நடித்திருக்கிறார். அதுவும் முழு நீள வில்லனாக நடித்துப் படத்தின் எடையில் சரி பாதியைச் சுமந்து இருக்கிறார்.

பட அனுபவம் பற்றி ஷாம் பேசத் தொடங்கும் போதே பேச்சில் உற்சாக வெள்ளம் அலையடிக்கிறது, “நான் ‘6’ படம் வெளியான பிறகுதான் தெலுங்கு, கன்னடப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன; வருகின்றன.

கன்னடத்தில், ‘ஸ்ட்ரெய்ட் பார்வர்ட்’ எனக்கு மூன்றாவது படம். இயக்கியிருப்பவர் மகேஷ் ராவ். ஒளிப்பதிவு ஆண்ட்ரூ. தயாரிப்பு கே.மஞ்சு. இந்தப் படத்தில், என் பாத்திரம் மிகவும் அதிரடியாகவும் அசத்தலாகவும் வந்திருக்கிறது. நான் இதுவரை நடித்ததில் மோஸ்ட் பவர்ஃபுல் ரோல் இதுதான் என்பேன்.

புறம்போக்கு‘ படம் வரை காக்கிச்சட்டை போட்டு போலீஸ் வேடங்களில் தோன்றி வந்த எனக்கு, இதில் மாறுபட்ட வேடம். இதில் நான் ஒரு கேங்ஸ்டராக வருகிறேன். தேவ் என்பது என் பாத்திரத்தின் பெயர். தனியாக எனக்குத் தீம் சாங் உண்டு. நான் வரும் போதெல்லாம் அது ஒலிக்கும். ‘தனி ஒருவன்‘ அரவிந்தசாமி மாதிரி இந்தப் படம் வந்ததும் நான் பேசப்படுவேன்.

இப்படத்துக்காகப் பெங்களூர், ஹைதராபாத் என்று நடந்த படப்பிடிப்பு வெகு மகிழ்ச்சியாக இருந்தது” என்று சற்றே நிறுத்தியவர், படத்தின் நாயகன் யஷ் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

“இதுவரை நான் சேர்ந்து நடித்தவர்களில் யஷ் சிறந்த கோ ஆர்ட்டிஸ்ட் என்பேன். பொதுவாக நடிப்பவர்கள் தன் பாத்திரம், தோற்றம், ஸ்டைல், உடைகள், வசனங்கள், நடிப்பு போன்றவை தங்களுக்கு மட்டும் நன்றாகச் சிறப்பாக வர வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்; நினைப்பார்கள். ஆனால் யஷ் மாறுபட்டவர். அவருக்குப் படத்தில் எப்படி முக்கியத்துவம் கொடுத்தாரோ அதே போல எனக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்.

தன் நாயகன் பாத்திரம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் எதிராளியான வில்லன் பாத்திரமும் நன்றாக வரவேண்டும் என விரும்பினார். உங்களிடமுள்ள பெஸ்ட்டைக் கொண்டு வாருங்கள் என்று என்னை நன்றாக ஊக்கப்படுத்தினார். நடிப்பதற்கு எனக்கான இடத்தை விரிவாக்கிக் களம் அமைத்துக் கொடுத்தார்.

அது மட்டுமல்ல என் உடைகளை வடிவமைத்ததே அவர்தான். என் சூட் இப்படி இருக்க வேண்டும்; ஜாக்கெட் இப்படி ஸ்டைலாக இருக்க வேண்டும் என்று வடிவமைத்துக் கொடுத்தார்.

படம் முழுக்க எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தது. படப்பிடிப்பில் எனக்குப் பெரிதும் ஊக்கம் கொடுத்துக் கொண்டே இருந்தார். அடிக்கடி யஷ் சொல்வார் ஷாம் உங்களுக்கு இன்னமும் சரியான ரோல் தமிழில் அமையவில்லை. யாரும் உங்களைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பார். எனக்கு வேறு மொழிகளில் வந்த ‘கிக்’, ‘ரேஸ் குர்ரம்’ போன்ற படங்கள் எல்லாமே என் ‘6’ படம் பார்த்து விட்டுத்தான் வந்திருக்கின்றன. இந்தப் படமும் அப்படித்தான் வந்தது. முதல் முறையாக என் படமொன்று தீபாவளிக்கு வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அனைவருக்கும் தீபாவள் நல்வாழ்த்துகள்” என்றார் மகிழ்வுடன் ஷான்.

தமிழில் ‘காவியன்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்; தெலுங்கில் சுரேந்தர் ரெட்டியின் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.