தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகளைச் சுட்டிக் காட்டும் கதையை, உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதியுள்ளார் இயக்குநர் மகாசிவன்.
அரசுப் பேருந்தின் ஸ்டியரிங் லாக் ஆகி, லட்சுமி சோடா ஃபேக்டரி முதலாளியான வெங்கடேசன் மீது மோதிவிடுகிறது. அவ்விபத்தில் அவரது இரண்டு கையையும் பறி கொடுக்கிறான் வெங்கடேசன். நஷ்ட ஈட்டிற்காக நீதி மன்றத்திற்கு நடையாக நடக்கிறான். தீர்ப்பு சாதகமாக அமைந்த பின்பும், அவருக்கு நியாயம் கிடைக்காமல் அவஸ்தைகள் தொடர்வதுதான் படத்தின் கதை.
‘ஓய்ய்.. நானொரு முதலாளி’ என்ற குரலை மிக அழுத்தமாகப் பதிகிறான் வெங்கடேசன். பதிவதோடு மட்டுமல்லாமல், தனக்குக் கீழ் வேலை பார்ப்பவரிடத்தில் அதைக் காட்டவும் செய்கிறான். அப்படி அதிகாரத்துடன் நடந்து கொள்வதைக் கெளரவமாகவும் கருதுகிறான். இத்தகைய பூர்ஷ்வாத்தனத்தை உடைய வெங்கடேசனுக்கு தோழர் என்ற அடைமொழி வைத்திருப்பது பயங்கரமான முரண். வெங்கடேசனின் முதலாளித்துவத் திமிரை, அவனது கீழ் வேலை செய்யும் சிறுவன், காவல் நிலையத்தில் வைத்து சுக்குநூறாக்கிறான். அங்கு கூழைக் கும்பிடு போட்டுத் தப்பிக்கும் வெங்கடேசன், வெளியில் வந்ததும் தன் முதலாளி என்ற பெருமையை மீண்டும் அணிந்து கொள்கிறான்.
நாயகி மோனிகா சின்னகொட்லா மிகப் பிரமாதமாய் நடித்துள்ளார். பாந்தமான அவரது உருவமும், கண்ணசைப்புகளின் மூலம் அவர் வெளிக்காட்டும் பாவனைகளும் படத்தை நெருக்கமாக உணரச் செய்ய உதவுகிறது. வெங்கடேசனாக நடித்துள்ள அரிசங்கர் மிகவும் இயல்பாய் மனதில் குடி புகுந்து கொள்கிறார். ‘எனது உயிரைப் பார்க்கிறேன்’ என்ற பாடல், சகிஷ்னாவின் இசையில், நாயகன் நாயகிக்குள்ளான காதலை அற்புதமாகப் பிரதிபலித்துள்ளது. அப்பாடலை எழுதியதும் இயக்குநர் மகாசிவனே! மகாசிவனின் கதை மீது நம்பிக்கை வைத்து, நாயகனின் மனைவி மாதவி அரிசங்கரே படத்தைத் தயாரித்துள்ளார்.
‘இன்று போய் நாளை வா’ என அலையவிடும் நீதி மன்றமும், ‘நிறுவனம் நஷ்டத்தில் ஓடுது’ என நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாமல் பாராமுகமாய் இருக்கும் அரசுப் போக்குவரத்துத் துறையின் அலட்சியமும் மெத்தனமும்தான் படத்தின் கரு. ஆனால், இயக்குநரின் சமூகக் கோபம் இவையிரண்டில் மட்டும் அடங்காமல், அவரது படைப்புக்குள் இருந்து விலகி தர்மபுரி பேருந்து எரிப்பு வரை சென்று விடுகிறது. வெங்கடேசனின் போராட்டத்தின் முடிவு தான் என்ன என்ற கேள்வி படத்தின் முடிவில் அப்படியே தொக்கி நிற்கிறது.
தோழர் வெங்கடேசனின் ஊரான ஐங்குளத்தில் வாழ்பவர்கள் யாருமே நல்லவர்களில்லையாம். நாயகியின் அம்மா இறந்து விட, அவ்வூர் ஆண்களோ நாயகியின் அம்மா பிணத்தை எடுக்கும் முன்பே, இச்சைக்கு உள்ளாகிப் பலர் பார்க்க நாயகிக்கு ஆறுதலாக இருப்பது போல் தடவுகின்றனராம். கை போன நாயகனுக்கோ, உதவ ஒருவர் கூட அவ்வூரில் முன் வரவில்லையாம். அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்ட விதத்தைக் கேள்விக்கு உட்படுத்தும் இயக்குநர் மகாசிவனுக்கு, மனிதர்கள் யாருக்கும் மனதில் ஈரமே இல்லை என்பது போல் பாத்திரங்கள் உருவாக்கியுள்ளார். நாயகன் நல்லவன், நாயகி ரொம்ப நல்லவள், ஆனால் மற்ற அத்தனை பேரும் கல்நெஞ்சக்காரர்கள் என்றளவில் காட்சிகள் வைத்துள்ளார்.
படம் ஏற்படுத்தும் தாக்கத்தை விட, படத்தின் இறுதியில் அரசுப் போக்குவரத்துத் துறையால் பாதிக்கப்பட்டவர்கள், நீதிமன்றம் அரசாங்கம் ஆகிய இரண்டின் மெத்தனமும் அலட்சியமும் பற்றிப் பேசும் காணொளி மிகவும் தொந்தரவு செய்கிறது.