தங்கள் உருவத்தை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்ட அதிநவீன ரோபாட்ஸ்க்கு ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் (உருமாறிகள்) எனப் பெயர். வாகனங்களாக உருவெடுக்கும் உருமாறிகளுக்குப் பெயர் ஆட்டோபாட்ஸ். இந்தப் படத்தொடரின், நாயகர்கள் இந்த ஆட்டோபாட்ஸே! இந்தப் பாகத்தில், உலகைக் காக்க ஆட்டோபாட்ஸ்களுடன் இணையும் புது உருமாறிகளாக மேக்ஸிமல்ஸ் அறிமுகமாகின்றனர். கொரில்லா, புலி, பறவை போன்ற மிருகங்களாக மாறும் ரோபாட்கள் அவை.
கிரகங்களை உண்டு கொழிக்கும் இருள் கடவுளான யுனிக்ரான், மேக்ஸிமல்ஸின் கிரகத்தை அழித்து உண்கிறது. யுனிக்ரான் கையில், ‘ட்ரான்ஸ்வார்ப்’ எனும் நவீன தொழில்நுட்பத் திறவுகோல் கிடைக்கக் கூடாதென மேக்ஸிமல்ஸ் அதை எடுத்துக் கொண்டு மறைகின்றனர். ட்ரான்ஸ்வார்ப் கிடைத்தால், காலத்தையும் தூரத்தையும் வளைத்து, பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும், எப்பொழுதும் வேண்டுமானாலும் செல்லக்கூடும்.
மேக்ஸிமல்ஸ், ட்ரான்ஸ்வார்பைப் பூமியில் கொண்டு வந்து மறைத்து வைக்கின்றனர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர் எலீனா வாலஸ், பழமையான கழுகு சிற்பத்தில் இருக்கும் ட்ரான்ஸ்வார்ப்பின் பாதியை எடுக்க, யுனிக்ரானின் சேவகன் ஸ்கெளர்ஜ், தன் ஆட்களுடன் பூமிக்கு வந்துவிடுகிறார். ஆட்டோ-பாட்ஸ் தடுக்க முயன்றும், ஸ்கெளர்ஜ் பம்பிள்பீ-யைச் செயலிழக்கச் செய்துவிட்டு பாதி ட்ரான்ஸ்வார்ப்பை எடுத்துச் சென்றுவிடுகிறது. மீதிப் பாதியை எடுத்து, யுனிக்ரானுக்குப் பூமியை விருந்து படைக்க நினைக்கிறது ஸ்கெளர்ஜ்.
இரண்டாவது பாதியைக் கண்டுபிடித்து, அதை அழித்து பூமியைக் காப்பாற்ற நினைக்கின்றான் மின்னணுவியல் நிபுணர் நோவா. ஆனால் ஆப்டிமஸ் ப்ரைமோ, தங்கள் கிரகத்திற்குப் போக அந்தத் திறவுகோல் உதவுமெனச் சொல்கிறது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஸ்கெளர்ஜ், திறவுகோலினைப் பயன்படுத்தி யுனிக்ரான் பூமியை விழுங்க வழி வகை செய்துவிடுகிறது.
மனிதர்களான நோவா – எலீனா வாலஸ், மேக்ஸிமல்ஸ், ஆட்டோபாட்ஸ் ஆகியோர் இணைந்த மூவர் கூட்டணி எப்படி உலகை அழிவிலிருந்து காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை.
இப்படத்தை ஸ்டீவன் கேப்பல் ஜூனியர் இயக்கியுள்ளார். நோவாவாக நடித்த ஆந்தோனி ராமோஸ்க்கும், அவரது தம்பி க்றிஸ் டயஸாக நடித்த டீன் ஸ்காட்டுக்கும் இடையேயான பாசக் காட்சிகள், மேக்ஸிமல்ஸ்க்கும் பெரு நாட்டுப் பழங்குடிகளுக்கும் இடையேயான புரிதல்கள் என படத்தில் எமோஷ்னல் காட்சிகளை அழகாகக் கொண்டு வந்துள்ளார். என்ரிக் செடியாக்கின் ஒளிப்பதிவில், பெரு நாட்டின் மலைச்சிகரமான மச்சு பிச்சுவின் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இனி உலகம் அழியப் போகிறது என்ற நொடியில், கதாபாத்திரங்கள் செய்யும் தியாகங்களும், இணைந்த கைகளாய்க் கடைசி வரை யுனிக்ரானுக்கு எதிராகப் போராடும் மூவர் கூட்டணியின் விடாமுயற்சி ரசிக்க வைக்கிறது. க்ரெடிட்ஸில், நோவாவை, ஜி.ஐ.ஜோ நிழல் நிறுவனத்திற்குத் தேர்வு செய்யப்படுகிறார். இந்த இரண்டு தொடரின் இணைப்பு காமிக்ஸ்களிலும், ஹாஸ்ப்ரோவின் பொம்மைகளிலும் (Toys) ஏற்கெனவே நிகழ்ந்திருந்தாலும், திரைப்படங்களில் இப்பொழுதுதான் தொடங்கியுள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏகத்திற்கும் அதிகரிக்கச் செய்யும் அற்புதமான முன்னெடுப்பிது.