ஒரு விபத்தில் அடிபட்டு, நாயகனுக்குக் கேட்டல் குறைப்பாடு ஏற்படுகிறது. அதாவது, சத்தத்தை அவரது மூளை உள்வாங்கிக் கொள்ள சுமார் 5 நிமிடங்கள் ஆகும். இந்த நொடி நீங்க நாயகனிடம் ஹலோ சொன்னால், அவருக்கு ஐந்து நிமிடங்கள் கழித்தே கேட்கும். ‘சாவு செய்தி சொன்னால் கருமாதி அன்று தான் அவருக்குக் கேட்கும்’ என்பதால், அவருக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் “டியூப்லைட்” என நாயகனுக்குப் பட்டப்பெயர் சூட்டுகிறார். அத்தகைய நாயகன், ஒரு பெண் மீது, கண்டதும் காதல் வயப்படுகிறார். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
நாயகனைச் சுற்றியே கதை நகர்கிறது. அவரது அறிமுகமும், அப்பொழுது அவரது ஆட்டமும், படம் நெடுகே அவருக்கு ஏற்படும் இக்கட்டினை அவர் முகத்தில் பிரதிபலிக்கும் விதத்திலும் அசத்தியுள்ளார். ராம் எனும் டியூப்லைட் பாத்திரத்தில் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார் இந்த்ரா. கார்பொரேட் கம்பெனிகளில் பணி புரியும் ஊழியர்களின் ஆளுமைத் திறனை வளர்க்க ஒரு நூதன பயிற்சியை நாடகம் மூலம் அளிக்கும் பயிற்சியாளராகப் பணி புரிந்தவர். மேலும் பல விளம்பரப் படங்களையும் இயக்கியுள்ள இவர் தான் இப்படத்தின் இயக்குநரும் கூட! அதோடு இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார்.
படத்தில் முக்கியமான பாத்திரத்தில் வருகிறார் R.பாண்டியராஜன். அவரது ஃப்ளாஷ்-பேக் சரியாக எடுபடவில்லையெனினும், மருத்துவராக அவர் மனம் குமுறும் பாத்திரத்தை நிறைவாகவே செய்துள்ளார். மேலும் போதுமான அழுத்தத்தை அந்தக் கதாபாத்திரத்திற்கு இயக்குநர் அளித்திருக்கலாம். க்ளைமேக்சில் அவரது மகனென ஒருவரை அறிமுகப்படுத்தி, படத்தின் சீரியஸ்னஸைக் கேள்விக்குறியாக்கியுள்ளார் இயக்குநர்.
இது சீரியஸ் படமில்லை தான். நகைச்சுவைப் படமாகவே எடுத்துள்ளனர். எனினும் இடைவேளைக்குப் பின், திருப்பங்கள் என்ற பெயரில் இம்சிக்கிறது திரைக்கதை. நாயகிக்கு நாயகன் பற்றிய உண்மை தெரிந்ததும் முடிய வேண்டிய படத்தை ஜவ்வாக இழுத்து, காமெடி என்ற பெயரில் இந்த்ரா பார்வையாளர்களின் பொறுமையை செமயாகச் சோதிக்கிறார்.
ஹேமா எனும் பாத்திரத்தில் நாயகியாக நடித்துள்ளார் கேரளத்து அதிதி. தமிழில் கதாநாயகியாக இதுதான் முதற்படம் எனினும், மலையாளத்திலும் தெலுங்கிலும் ஏற்கெனவே நாயகியாக நடித்துள்ளார். ‘ஆர்ட் தெரபி’யில் ஆர்வமுடைய நபராக வருகிறார். ஆனால், அதை வார்த்தை பிரயோகமாக மட்டும் பயன்படுத்தியதால், மனதில் பதிய மறுகிறது. மலையாளத்தில் காமெடி ஹீரோவாகக் கோலேச்சும் ப்ரவீன் பிரேமைச் (தமிழில் ‘டம்மி டப்பாசு’ எனும் படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார்) சரியாக நகைச்சுவைக்குப் பயன்படுத்தி இருக்கலாம் இயக்குநர். திணிக்கப்பட்டதால், திரிபுவனின் வில்லத்தனம் எடுபடாமல் போய் விடுகிறது.
சுவாரசியமான, நம்பிக்கையை ஏற்படுத்தும் கதைக்கருவைப் பிடித்த இந்த்ரா, திரைக்கதையில் அதைக் கோட்டை விட்டுவிட்டார். கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், மிகச் சிறந்த நகைச்சுவைப் படமாக வந்திருக்கும் இந்த டியூப்லைட்.