அமிதாப் பச்சனும், அமீர் கானும் இணைந்து நடித்திருக்கும் முதல் படம். 300 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட பாலிவுட்டின் மிகப் பிரம்மாண்டமான படம். ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ போல ஒரு இந்தியப் படம் வராதா என்ற ஏக்கத்தைப் பூர்த்தி செய்வதாக இருந்தது படத்தின் ட்ரெய்லர்.
தக்ஸ் என்பது கொலை, கொள்ளையில் ஈடுபடும் கும்பலுக்கு ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். அப்படி இந்துஸ்தானின் விடுதலைக்காகப் புரட்சி செய்யும் ஒரு குழுவிற்கு, தக்ஸ் என முத்திரையிட்டு, அதை அடக்கி ஒடுக்க நினைக்கிறார் ஜான் க்ளைவ் எனும் ஆங்கிலேயர். அது அவருக்குச் சாத்தியமானதா என்பதுதான் படத்தின் கதை.
இளவரசி ஜஃபிராவின் கண் முன்பே ஜான் க்ளைவ், அவள் அண்ணன், அம்மா, அப்பா ஆகிய மூவரையும் நம்ப வைத்து, துரோகமிழைத்துக் கொன்று விடுகிறார். பதினோரு ஆண்டுகள் கழித்து தனது வஞ்சத்தை ஜஃபிரா எப்படித் தீர்த்துக் கொள்கிறார் என்பதே படத்தின் முடிவு.
நல்லவனாய் வாழப் பெரும் தைரியம் வேண்டும் என்பதால், எப்படியும் வாழ்ந்தால் போதுமென்ற கொள்கையுடன், ஆங்கிலேயருக்கு ஒற்று வேலை செய்து பணம் பார்ப்பவன் ஃபிராங்கி மல்லா. குதாபஷ் ஆசாதோ, சுதந்திரம் எனும் கனவை விதைக்கும் மாவீரன். வஞ்சனை மற்றுமே புரியும் ஃபிராங்கி மல்லாவும், அனைவரையுமே நம்பி அரவணைக்கும் ஆசாதும் சந்தித்துக் கொள்கின்றனர். வஞ்சனை நம்பிக்கையை வீழ்த்தியதா, நம்பிக்கை வஞ்சனையையும் ஆட்கொண்டதா என்பதே திரைக்கதையின் ஆடுபுலி (!?) ஓட்டம்.
பிரம்மாண்டத்தில் கவனம் செலுத்தியுள்ள இயக்குநர் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா, படத்தை நகர்த்திய விதத்தில் படு தோல்வியினைச் சந்தித்துள்ளார். அமிதாப் பச்சனின் அறிமுகம் மட்டுமே கொஞ்சம் நிமிர்ந்து அமரச் செய்கிறது. ஒரு பேஷனோடு (Passion) அவர் திரைக்கதையை எழுதவில்லை. அல்லது அது படத்தில் கொண்டு வரப்படவில்லை. ஒரு காட்சி கூட, ‘அட!’ போட வைக்கும் தருணத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆக்ஷன், ஒளிப்பதிவு, பின்னணி இசை என எல்லாமே நன்றாக இருந்தும், ஒரு சாகச படம் தர வேண்டிய நிறைவினைப் படம் தரவில்லை. எந்தவொரு மேஜிக்கை ரிதேஷ் சோனியின் படத்தொகுப்பு ஏற்படுத்தவில்லை.
இளவரசி ஜஃபிராவாக நடித்துள்ள ஃபாத்திமா சானா முகத்தில் பழி வாங்கும் வெறியோ, அவஸ்தையோ சுத்தமாக இல்லை. உம்மென்று வைத்துக் கொண்டுள்ளாரே தவிர, ஜான் க்ளைவின் மீதான அவரது வஞ்சம் துளியில் இல்லை. ஆனால், வில்லைக் கொண்டு துரிதமாய் அம்புகளைப் பாய்ந்து பாய்ந்து எய்தும் அவரது ஸ்டன்ட் ஆக்ஷன் மிக நன்றாக உள்ளது. படத்தின் பிரதான பாத்திரமான இவருக்குப் போதுமான டீட்டெயிலிங் தராதது மிகப் பெரும்குறை. பாடல்களுக்குக் கவர்ச்சியாக நடனமாட மட்டுமே நடனக்காரி சுரையாவாக காத்ரீன் கைஃப் வருகிறார்.
ஃபிராங்கி மல்லாவாக வரும் அமீர் கான் மிகவும் ரசிக்க வைக்கிறார். கடைசிக் காட்சி வரை, அவர் போடும் இரட்டை வேஷம் அலாதியாக உள்ளது. ‘நீ என்னைப் பேசியே சாகடிக்கப் போறியா?’ என அமிதாப் கடுப்பாகிக் கேட்குமளவு, ஃபிராங்கி பேசியே அசரடிக்கிறார். ஜாக் ஸ்பேரோ பாத்திரத்தில் இன்ஸ்பியராகித்தான் ஃபிராங்கியை உருவாக்கியிருப்பார் போல் இயக்குநர் விஜய் கிருஷ்ணா. அமீர் கான், அதைத் தனக்கே உரிய பாணியில், சிரித்த முகமாக மிக நைச்சியமாக அந்தப் பாத்திரத்திற்கு உயிரளித்துள்ளார். ஜாக் ஸ்பேரோவிற்கு எப்பொழுதும் ஒரே லட்சியம்தான்! ஆனால், ஃபிராங்கி மல்லா பாத்திரத்திற்கு அப்படியான ஷேடிங் தராததால், கடைசியில் அவர் கப்பலைத் திருடிக் கொண்டு போவது ஒரு பரவசத்தை ஏற்படுத்தவில்லை. ஏன் எந்தக் காட்சியுமே படத்தில் பரவசத்தை ஏற்படுத்தவில்லை.
ட்ரோஜன் குதிரையை ட்ராய் நகரிற்குக் கொண்டு சென்றது போல், ஒரு காட்சியில், அமிதாப் பெரிய சிலை வடிவில் துறைமுகத்தில், தனது தக்ஸ்களுடன் உள்ளார். இப்படியான ஐடியாஸ் ரசிக்க வைத்தாலும், அதைத் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய டிராமாவாக மாற்ற திரைக்கதை தவறி விடுகிறது. பாகுபலி படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் போன்ற ஒரு திரைக்கதை எழுத்தாளரின் பங்கு எவ்வளவு முக்கியமானது என ‘தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான்’ பார்த்தால் விளங்கும். சல்மான் கானின் ‘பஜ்ரங்கி பைஜான்’ கூட விஜயேந்திர பிரசாத் கதையில் கொண்டு வரும் மேஜிக் தருணங்களுக்குச் சான்றாய் விளங்கும் பாலிவுட் படம்.
குதாபஷ் ஆசாதாக அமிதாப் பச்சன் நடித்துள்ளார். அந்தப் பாத்திரத்தை இன்னும் அழுத்தமாய் உலாவ விட்டிருந்திருக்கலாம் எனும் குறை எழுகிறது. ஆசாத் என்பது விடுதலைக்கான ஓர் உணர்வு. அதை கதாபாத்திரங்களுக்கும் கடத்தியிருக்க வேண்டும். சுதந்திரம் என்பது எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஓர் உணர்வு. ஃபிராங்கியைப் போலவே படம் சீரியஸாய் இல்லை. ஃபிராங்கியின் நண்பர் சனீஸ்வரனாக நடிச்சிருக்கும் மொஹமத் ஜீஷன் அயூப் ரசிக்க வைக்கிறார். ஆனால், அவரது படிப்பு ஃபிராங்கிக்கு எங்கே, எப்போது உதவுகிறது எனத் தெரியவில்லை.
கொண்டாட்டமாக இருந்திருக்க வேண்டிய படம், அமெச்சூர் டிராமாவாக முடிந்தது துரதிர்ஷ்டமே! ஒரே ஆறுதல், படம் சுவாரசியமாக இல்லாவிடினும், போரடிக்காமலாவது இருக்கிறது.