Shadow

வாத்தி விமர்சனம்

சோழவரம் அரசுப்பள்ளிக்கு ஒப்புக்குச் சப்பாணியாக அனுப்பி வைக்கப்படுகிறார் கணித ஆசிரியர் பாலமுருகன். ப்ரோமஷனுக்காக ஆசைப்படும் பாலமுருகன், மாணவர்கள் இல்லாத பள்ளிக்கூடத்திற்குத் தனது சாமர்த்தியத்தால் மாணவர்களை வர வைக்கிறார். பல நெருக்கடிகளை எதிர்கொண்டு, எப்படி 45 மாணவர்களையும் பள்ளிப் படிப்பை முடிக்க வைக்கிறார் வாத்தி பாலமுருகன் என்பதே படத்தின் கதை.

ஷா ராவும், ஹைப்பர் ஆதியும் நகைச்சுவைக்குச் சொற்பமாகவே உதவியுள்ளனர். அவர்களைப் பாதியிலேயே துண்டித்து அனுப்பி விட்டு தனுஷை மட்டுமே முழுமையாக நம்பிக் களமிறங்கியுள்ளார் இயக்குநர் வெங்கட் அட்லூரி. தன்னிகெல்லா பரணி, சாய்குமார் முதலிய நடிகர்களும் சாட்சிகளாக வந்து செல்கின்றனரே தவிர்த்து கதைக்குள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத பாத்திரங்களிலேயே நடித்துள்ளனர்.

ஆசிரியை மீனாக்‌ஷியாக சம்யுக்தா நடித்துள்ளார். பண பலம் பொருந்திய கல்வித்தந்தையான வில்லனை எதிர்க்கும் துணிவை இழக்கும் நாயகனை மீண்டும் போராடத் தூண்டுவதற்காக உதவியுள்ளார். தன் ஆசிரியரின் நிலை கண்டு பொறுமும் கென் கருணாஸ் செய்யும் செயல், நாயகனுக்கே இப்படத்தில் கிடைத்திராத நல்ல ஹீரோயிசக் காட்சி.

தோல்வியையும் தனக்கு ஆதாயமாக மாற்றிக் கொள்ளும் பாசிட்டிவ் ரோலில் வில்லனாக மிரட்டியுள்ளார் சமுத்திரக்கனி. அரசுப் பள்ளிகளை விட, கல்வியை வியாபாரமாக்கி வரும் தனியார் பள்ளிகள் தான் சிறந்தது என நிறுவ முயலும் தொழிலதிபர் திருப்பதியாக நடித்துள்ளார். தனியார் பள்ளிகளின் வளர்ச்சி என்பது அரசுப் பள்ளிகளின் தரம் வீழ்ச்சியடைவதில்தான் உள்ளது எனத் திட்டமிட்டுச் சிதைக்கிறார் திருப்பதி.

வாத்தி பாலமுருகனாக, பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் போலிருக்கும் தனுஷ் நடித்துள்ளார். வலுவான கதாபாத்திரங்களையே அநாயாசமாக நடிக்கும் தனுஷிற்கு, இலகுவான பாத்திரமான வாத்தி பாலமுருகனை மிக இலகுவாகக் கையாண்டுள்ளார். மாணவர்கள் மத்தியில் நிலவும் சாதீய வேற்றுமையைக் கூடப் போகிற போக்கில் சரி செய்துவிடும் வல்லவராய் உள்ளார் வாத்தி பாலமுருகன். ராவணனாய், பாரதியாராய் பல வேடங்கள் புனைந்து மாணவர்களுக்கு உதவுகிறார். 

ஒரு பிரச்சனை, அதற்கு தீர்வு காணும் ஒரு நேர்மையான ஆசிரியரின் டெடிகேஷன் எனும் இரண்டு புள்ளிக்குள் எளிமையான திரைக்கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர். ஊரிலுள்ள 45 மாணவர்கள் ஒரு நாள் படத்திற்குப் போனால் சந்தேகம் வராது, ஆனால் அவர்கள் தினமும் மூன்று மாதத்திற்குத் திரையரங்கத்தின் படியேறுகின்றனர். பெற்றோரிடமிருந்தோ, ஊராரிடமிருந்தோ ஒரு சின்ன சலசலப்புமில்லை. நோக்கம் பெரிதாக இருப்பின் மற்ற எதுவும் ஒரு பொருட்டில்லை என்ற இயக்குநரின் நம்பிக்கைத்தான் படம்.