ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரமிப்பை ஏற்படுத்தும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ திரையிடப்பட்டது.
இயக்குநர் பா. ரஞ்சித், “டீசர் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன் நிறையப் பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். இது டீசர் வெளியீடு தான் இன்னும் பல மேடைகள் இருக்கிறது. இந்தப் படம் நாங்கள் நினைத்ததை விட பட்ஜெட் அதிகமாகி விட்டது, ஆனால் இன்று வரை அதைப் பற்றி ஒரு கேள்வி கூட ஞானவேல் சார் கேட்கவில்லை. அவருக்கு எனக்குமான உறவு 10 ஆண்டுகளுக்கு மேலானது. அட்டகத்தியில் இருந்து இப்போது வரை தொடர்கிறது. அவர் கமர்ஷியல் தயாரிப்பாளர். ஆனால் அவர் ஆர்டிஸ்டிக் படம் எடுக்கிறார் என்றால் என் கூடத்தான் செய்வார். அந்தளவு என்னை நம்புகிறார். அவர் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன் என நினைக்கிறேன் அவரைத் திருப்திப்படுத்துவது கஷ்டம், இந்த டீசருக்குக் கூட நிறையக் கட் கேட்டார். கடைசியாக அவர் பிடித்திருக்கிறது என்று சொன்னவுடன் திருப்தியாக இருந்தது. விக்ரம் சார், ஒரு நடிகனாக அவருக்கு நான் மிகப் பெரிய ரசிகன், அவருடன் இணைந்து வேலை பார்க்க வேண்டும் என்று எனக்கே ஆசை இருந்தது. சர்பட்டாவிற்குப் பிறகு அவருடன் இணைகிறோம் என்ற போது, என்ன மாதிரி இருக்க வேண்டும் என்று நிறைய யோசித்தோம். இந்தக் கதை சொன்ன போது அந்தக் கதாபாத்திரமாகவே மாறி வந்தார். பொதுவாக நான் என் நடிகர்களின் கதாப்பாத்திர லுக்கை மாற்ற நிறைய உழைப்பேன், சின்னச் சின்னதாக நிறைய வேலை பார்ப்போம். ஆனால் முதல் முறையாக விக்ரம் சார் எனக்கு நிறைய சாய்ஸ் தந்தார். அவர் அந்தக் கதாபாத்திரமாக முழுதாக மாறிவிட்டார். இந்தப் படத்திற்காக அவர் பட்ட கஷ்டம் பெரியது, இத்தனை வருடத்திற்குப் பிறகும் இத்தனைப் படத்திற்குப் பிறகும் ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என ஆச்சரியமாக இருக்கும். அவரிடமே கேட்பேன், நடிப்புத்தான் அவருக்கு எல்லாமே. அவருக்கு அடிபட்டு விட்டது ஆனால் அதற்கப்புறம் ஒரு ஆக்சன் காட்சி எடுக்க வேண்டி இருந்தது. காட்சி எடுக்கும் போது அவரால் முடியவில்லை என எனக்குத் தெரியும், என்ன சார் வலிக்கிறதா சார் என்றால் ஆமா என்பார், ஆனாலும் ரீடேக்கில் நடிப்பார். அவர் உழைப்பு பிரமிப்பானது. அவர் தான் இந்தப் படத்தைத் தாங்கியிருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர்கள் எல்லோருமே மிகப் பெரிய உழைப்பைத் தந்துள்ளார்கள். பார்வதி வித்தியாசமான ஒரு ரோலில் அசத்தியிருக்கிறார். பசுபதியை அவரது கேரக்டரை நீங்கள் எல்லோருமே ரசிப்பீர்கள். இந்தப் படத்தில் எல்லோருமே மிகப் பெரிய உழைப்பைத் தந்துள்ளார்கள். ஜீவியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்தப் படத்திற்கு அவர் இசையமைக்கிறார் என்ற போது, நடிக்கப் போய்விடுவாரே என்று பயமாக இருந்தது. ஆனால் அதைத் தாண்டி ஒவ்வொரு முறையும் அவர் இசையை என்னிடம் காட்டும் போது பிரமிப்பாக இருந்தது. அவர் கையில் தான் இந்தப் படம் மொத்தமும் உள்ளது. எடிட்டர் செல்வாவைப் பார்த்து, எனக்கே பயம், விஷுவல் பார்த்து என்ன சொல்வார் என நினைப்பேன். அவர் வேலை எப்போதும் சிறப்பாக இருக்கும். இந்தப் படத்திலும் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். ஸ்டன்ட் சாம் மிரட்டியிருக்கிறார். கிஷோர் விஷுவல்கள் கண்டிப்பாகப் பேசப்படும். இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது கண்டிப்பாக இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.
ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.