ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரமிப்பை ஏற்படுத்தும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ திரையிடப்பட்டது.
ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா, “சீயான் விக்ரம் சாருக்கு ஸ்டூடியோ க்ரீன் பிலிம்ஸ் நிறுவனத்துடன் முதல் படம். மிகவும் அன்பானவர், கடின உழைப்பாளி தன் வேலையை மிக அர்ப்பணிப்புடன் செய்பவர். நானும் பா. ரஞ்சித்தும் விக்ரம் சாரைச் சந்திக்கச் சென்ற போது என்ன தேதிகள் வேண்டும் என்றார். அந்தத் தேதிகள் தள்ளிப் போனபோது கூட அதே கெட்டப்பில் தன்னை மாற்றிக் கொள்ளாமல் இந்தப் படத்துக்காகக் காத்திருந்து உழைத்தார். அவர் அர்ப்பணிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டோம். அவரது உழைப்பு மிகப்பெரிது. இந்தப் படத்திற்காக உழைத்த அனைத்துக் கலைஞர்களுக்கும் நன்றி. ரஞ்சித் சார் எப்படிப்பட்ட படம் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் முதல் படத்திலிருந்து இது தான் செய்ய வேண்டும் என முடிவு செய்து மிகச்சரியாகச் செய்து வருகிறார். அதற்கான வெற்றியையும் அவர் பெற்று வருகிறார். இந்தப் படம் அவருக்கு இன்னும் பெரிய இடத்தைப் பெற்றுத்தரும். ஜீ.வி.பிரகாஷ் எங்கள் வீட்டுப் பிள்ளைபோல. இந்தப் படத்திற்காகச் சிறந்த இசையைத் தந்துள்ளார். கிஷோர் ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார். எல்லோரும் விஷுவல் பார்த்து அவரைப்பற்றிக் கேட்டார்கள். அவர் மட்டுமில்லாமல் கலை இயக்கம், ஸ்டன்ட் என எல்லாத் துறையும் இந்தப் படத்தில் பேசப்படும். இந்த மாதிரியான ஒரு படத்தில் நானும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி. இது உலக அளவில் அனைவரும் ரசிக்கும்படியான படமாக இருக்கும். நம் தமிழ் சினிமாவின் பெயரை உலகம் முழுக்க இந்தப் படம் சொல்லும். ஸ்டூடியோ க்ரீன் பிலிம்ஸ் ஆரம்பித்த போது பாலா சாரை வைத்து படம் எடுப்பதாக இருந்தது. அப்போது ஹீரோவாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற போது, சீயான் சாரைச் சொன்னார். விக்ரம் சாருக்கு அது தெரியாது. அவரை வைத்து முதல் படம் தயாரிக்க இந்த நிறுவனத்திற்கு சூர்யா சார் வைத்த பெயர் தான் ஸ்டூடியோ க்ரீன். சூர்யா சார் விக்ரம் சாருக்காக வைத்த பெயர் தான் இது. அப்போது அது நடக்கவில்லை. இப்போது நடப்பது மகிழ்ச்சி” என்றார்.
ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.