Shadow

விசித்திரன் விமர்சனம்

ஜோசஃப் எனும் மலையாளப் படத்தைத் தமிழில், ‘விசித்திரன்’ என மீள் உருவாக்கம் செய்துள்ளனர்.

விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்ட காவல்துறை அதிகாரியான மாயன், தன் முன்னாள் மனைவி ஸ்டெல்லாவின் மரணம், விபத்தால் ஏற்பட்டதன்று, அது ஒரு கொலை என்பதைக் கண்டுபிடிக்கிறார். அவரது மகள் டயானா மரணத்திற்கும், முன்னாள் மனைவி ஸ்டெல்லா மரணத்திற்கும் உள்ள ஒற்றுமையை ஆராய்ந்து, ஒரு பெரும் மருத்துவ மோசடியைக் கண்டுபிடிக்கிறார். அதைச் சட்டத்தின் முன் எப்படி நிரூபிக்கிறார் என்பதுதான் படத்தின் அபாரமான முடிவு.

தன் கேரியரில் மிக முக்கியமான படம் என்ற அதீத பிரக்ஞையுடன் மாயனெனும் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் ஆர்.கே.சுரேஷ். அனைத்தையும் இழந்த மாயன், பீடியிலும் குடியிலும் தன் நாட்களைக் கழிக்கிறார். படத்தின் முன் தயாரிப்பாக, ஜோசஃப் பட எழுத்தாளரான ஷஹி கபீரைச் சந்தித்துள்ளார். அவரது உடற்மொழியை உள்ளவாறு திரையில் கொண்டு வர, இரண்டரை லிட்டர் தண்ணீர் குடித்த பின்பே கேமரா முன் தோன்றியுள்ளார். இப்படியாக ஒரு நாளைக்கு ஏழு முறை தண்ணீர் குடித்து, தொப்பையைக் கொண்டு வந்துள்ளார்.

தன் முன்னாள் மனைவியின் கணவனுடன் ஜோசஃப் பேணும் உறவு, மலையாளத்தில் மிக இயல்பாக இருக்கும். ஸ்டெல்லாவின் கணவர் பீட்டராக நடித்திருக்கும் பக்ஸ் (எ) பகவதி பெருமாள், அப்பாத்திரத்திற்கு மிக மோசமான தேர்வு. ஸ்டெல்லா பாத்திரத்தில் நடித்துள்ள பூர்ணாவோ மிகக் கச்சிதமான தேர்வு.

ஜோஜு ஜார்ஜ் கண்களில் சுமக்கும் வலியை ஆர்.கே.சுரேஷால் கொண்டு வர முடியவில்லை. ஒரு தியாகத்திற்குத் தயாராகிவிட்ட முகபாவனையுடனே வலம் வருகிறார் ஆர்.கே.சுரேஷ். ஜோசஃப் எனும் சாதாரணனைத் தலைப்பிலேயே விசித்திரன் ஆக்கியுள்ளனர். ஜோசஃப் படத்தினை இயக்கிய எம்.பத்மகுமாரே இப்படத்தையும் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.