Shadow

கூகுள் குட்டப்பா விமர்சனம்

‘ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ எனும் மலையாளப் படத்தினைத் தமிழில் மீள் உருவாக்கம் செய்து இயக்கியுள்ளனர் இயக்குநர்களான சபரியும் சரவணனும். பிக்பாஸ் புகழ் தர்ஷனும் லாஸ்லியாவும் அறிமுகமாகியுள்ளனர். தெனாலிக்குப் பிறகு, கே.எஸ்.ரவிகுமாரின் RK செல்லூலாய்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெளிவரும் இரண்டாவது படமிது. படம் தொடங்குவதற்கு முன் முறையாக அனைவருக்கும் நன்றி சொல்லியுள்ளார் கே.எஸ்.ரவிகுமார்.

மகனை வெளியூருக்கு அனுப்ப விரும்பாத தந்தை சுப்ரமணிக்கும், வெளிநாட்டில் பணி புரிய விரும்பும் மகன் ஆதிக்கும் நடக்கும் பாசப்போராட்டத்தில் படம் தொடங்குகிறது. தன் லட்சியத்தில் உறுதியாக இருந்து வெளிநாடு செல்லும் ஆதி, தந்தைக்கு உதவியாக ஒரு ரோபாவை ஹோம் நர்ஸாகப் பயன்படுத்திக் கொள்ள தருகிறான். முதலில் ரோபோவை வெறுக்கும் சுப்ரமணி, போகப் போக ரோபோவைத் தன் மகனாகப் பாவிக்கத் தொடங்கி விடுகிறார். ரோபோவின் சோதனை ஓட்ட காலம் முடிய, ரோபோவுடன் எமோஷ்னலாகக் கனெக்ட் ஆகிவிடும் சுப்ரமணியை ஆதி எப்படிச் சமாளிக்கிறார் என்பதுதான் பட்த்தின் முடிவு.

தர்ஷனின் தமிழ் உச்சரிப்பு அந்நியமாக ஒலிக்க, கே.எஸ்.ரவிகுமார் கொங்கு தமிழில் அசத்துகிறார். யோகிபாபு, கே.எஸ்.ரவிகுமார் ஆகிய இருவரும் இணைந்து தோன்றும் காட்சிகள் கலகலப்பிற்கு உத்திரவாதம் அளிக்கின்றது. ரோபோவை மகனாகவே பாவிக்கும் கே.எஸ்.ரவிகுமார் மனதில் நிற்கிறார். லாஸ்லியாவிற்குச் சொல்லிக் கொள்ளும்படியான பாத்திரம் அமையவில்லை. மலையாள மூலத்திலோ, மலையாளம் பேசும் ஜப்பான் பெண்மணியென அப்பாத்திரம் தனித்துத் தெரியும்.

தொழில்நுட்பத்தின் பாசிட்டிவ் பக்கம் பற்றி ஒரு வசனம் வருகிறது படத்தில். ரோபோவால் மனிதனைப் போல் பாசம் காட்ட இயலாதென்பது உண்மையெனினும், தனிமையில் வாடுபவருக்குப் பற்றிக் கொள்ள ஓர் ஊன்றுகோலாக ரோபோ உதவும் என்பதைப் படம் கண் கூடாக முன்னிறுத்துகின்றது. செல்பேசியைப் போல், ரோபோகளும் மனிதர்களிடையே தவிர்க்க இயலாத இடத்தினைப் பெறும் காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ரோபோ ஒரு குழந்தை போல் கவருகிறது. அதனின் மழலை இயந்திர மொழியும், சுப்ரமணியின் காதலியான பவித்ராவிடம் பொய் சொல்லிச் சமாளிக்கும் இடத்திலும், க்ளைமேக்ஸின் சுப்ரமணியிடம் பேசும் காட்சியிலும் தானொரு ரோபோ என்பதை மெச்சூர்டாக நடந்து கொள்கிறது. தமிழுக்கென சிற்சில ஏற்புடைய மாற்றங்களைச் செய்துள்ளனர் இயக்குநர்கள் சபரியும் சரவணனும். அர்வியின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் பின்னணி இசையும் படத்திற்கொரு ரம்மியத்தைக் கூட்ட உதவியுள்ளது.