சிபிராஜ் நடிப்பில் உருவாகும் ‘வால்டர்’ திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஷிரின் காஞ்வாலா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். தற்போது இவர்கள் இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பிற்காகச் சென்னையில் கலந்து கொள்ளவுள்ளனர்.
11:11 நிறுவனத்தின் சார்பாக இப்படத்தை டாக்டர் பிரபு திலக்கும், சுருதி திலக்கும் தயாரித்து வருகிறார். “இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கும்பகோணத்தில் வெற்றிகரமாக நடந்துள்ளது. திட்டமிட்டபடி இப்படத்தின் வேலைகள் சரியாகச் சென்று கொண்டிருப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் சென்னையில் துவங்கி முழுவதையும் அங்கேயே முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தின் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பில் பங்கு பெறுவது எங்கள் குழுவிற்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது. மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் எழுத்தாளர் பவா செல்லதுரை இப்படத்தில் இணைந்திருப்பது எங்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பம் முதல் இறுதிவரை இப்படத்தின் கதையை சரியாகத் திட்டமிட்டுள்ளார் இயக்குநர் அன்பரசன். இப்படத்தின் முக்கியக்காட்சிகள் கும்பகோணத்தில் சிறப்பான முறையில் படமாக்கப் பட்டுவிட்டது. தற்போது இப்படத்தை முழுவதையும் பார்ப்பதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.
‘வால்டர்’ விறுவிறுப்பான த்ரில்லர் திரைப்படம். இப்படத்தில் சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சிபிராஜின் தந்தை சத்யராஜ் நடித்து மாபெரும் வெற்றியடைந்த ‘வால்டர் வெற்றிவேல்’ படத்தின் தலைப்பின் தொடர்ச்சியாக தான் இந்த வால்டர் தலைப்பைத் தேர்ந்தெடுத்தோம்” என்றார் 11:11 நிறுவனத்தின் சார்பாக டாக்டர் பிரபு திலக்.