முந்தின நாள் நிகழ்ச்சியே தொடர்ந்தது. வனிதாவும் சாக்ஷியும் பேசிக் கொண்டிருந்தனர். அது கவினைப் பற்றித் தானெனச் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன?
இரவு சந்திப்பு 1 – சேரன், ஷெரின், வனிதா சாக்ஷி.
சாக்ஷி தான் வெளியே பார்த்ததை எல்லாம் சொன்னார். சாக்ஷியும் வனிதாவும் வளைத்து வளைத்து ஷெரினுக்கு யோசனை சொல்ல, கூடவே தர்ஷனோடு சேர்த்து வைத்துப் பேச, டென்சனான ஷெரின், ‘என்னையும் தர்ஷனையும் சேர்த்துப் பேசாதீங்க’ எனச் சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார்.
பின்னாடியே போன சாக்ஷி ஷெரினைச் சமாதானப்படுத்தினார். இன்ஃப்ளூயன்ஸ் செய்வது என்றால் என்ன? அதற்கு மற்றவர்கள் எப்படி ரியாக்ட் செய்யவேண்டும் என்கிறதுக்கு இந்த உரையாடல் ஒரு நல்ல உதாரணம். வனிதாவும் ஷெரினும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் தான். ‘நான் உன்னோட நன்மைக்கு தான் சொல்றேன்’ என வனிதா நிறைய சொல்கிறார். ஆனால் தேவையானதை மட்டும் தான் ஷெரின் எடுத்துக் கொள்கிறார். முந்தின நாள் நாமினேஷனில் கவின் செய்வது தப்பு என வனிதா சொன்னதை எடுத்துக் கொண்டு, கவினிடம் நேராகவே கேள்வியும் கேட்டது நினைவிருக்கலாம். தனக்கு நியாயமில்லாத விஷயங்களை மறுத்துப் பேசுகிறார். ‘அய்யோ வனிதா நம்ம ப்ரெண்ட். நம்ம நன்மைக்கு சொல்றாங்க. நாம எதிர்த்து பேசக்கூடாது. தப்பா நினைச்சுக்குவாங்க’ என எமோஷனலாக அரெஸ்ட் ஆகிறதில்லை. ஆனால் அங்கே இருக்கிற எல்லோருமே ஒரு விதத்தில் லாக் ஆகி தான் உள்ளனர். லாஸ் லாக் ஆனதும் இப்படித்தான். இதை வனிதா, கவின் இரண்டு பேரும் தனக்கு அட்வான்டேஜாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.
‘சும்மா திரும்பத் திரும்ப தர்ஷனையும் என்னையும் பத்திப் பேசி இல்லாத இரு ரிலேஷன்ஷிப்பை உருவாக்காதீங்க’ என உறுதியாகச் சொல்லிவிட்டார் ஷெரின்.
இரவு சந்திப்பு 2 – மோகன், கவின், தர்ஷன், கவின், சாண்டி
‘நீ பறந்து போய் விழந்ததைப் பார்த்து பக்குன்னு ஆயிருச்சு கவினு’ என பெர்ஃபாமன்ஸ் பண்ணிக் கொண்டிருந்தார் மோகன். திடீரென ஏதோ ஞாபகம் வந்த மாதிரி, ‘நான் தள்ளி விடலை, அதை நான் க்ளாரிஃபை பண்ணிக்கிறேன்’ என சாக்ஷி சொல்லிட்டு இருக்கும் போதே, கவின் ஏதோ சைகை காண்பித்தார்.
இரவு சந்திப்பு 3 – கவின், சாண்டி
‘நீ சாக்ஷி கூட சண்டை எதுவும் போட்றாதடா. அவளை அடிச்சிறாதடா. கெட்ட வார்த்தை பேசிறாத’ என கவினிடம் சொன்னார் சாண்டி. ‘ஓ! அப்ப இதெல்லாம் பண்ணனும் போல இருக்கு!’ என கவின் யோசித்திருப்பாரோ என்னமோ.
இதில் விஷயம் என்னவெனில், ‘இந்த வீட்ல இருந்ததால தான் இவன் பின்னாடி போனேன். இதே வெளிய இருந்திருந்தா இவனை எல்லாம் கண்டுக்கவே மாட்டேன்’ என சாக்ஷி சொன்னதாகக் கவினிடம் போட்டுக் கொடுத்தது வனிதாவாம். வாட்டே எ பெர்ஃபாமன்ஸ். அதில் இருந்து தான் மரண காண்டில் இருக்காராம் கவின். ஆனால் பாருங்க அதற்கு முன் வரைக்கும் சாக்ஷியைக் கழட்டி விட்டதற்காக வருத்தப்பட்டாராம். இதை அவரே சொன்னார் என்றால் பார்த்துக்கோங்களேன். வைத்தியத்தைத் தெரிந்து கொண்டு தான் மஞ்சக்காமாலையைக் கண்டுபிடித்த கார்த்திக் – கவுண்டமணி ஞாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பில்லை.
நாள் 73
காலையில் பாட்டுக்கு சாக்ஷி, முகின், அபி, எல்லோரும் குத்தாட்டம் போட்டனர். மோகன், சாக்ஷி, வனிதா ஆகிய மூன்று பேரும் சேரனுக்கு விபூதி அடித்துக் கொண்டிருந்தனர். ‘ஆத்தாடி, இன்னிக்கு நான் தான் இவர்களுக்கு ஊறுகாய் போல இருக்கே!’ என கலவையான ரியாக்ஷன் கொடுத்துக் கொண்டிருந்தார் சேரன்.
ஷெரினை ஜெயிக்க வைக்கிறது தான் என் வேலையென சாக்ஷி தன் மிஷன் சீக்ரெட்டை ஓப்பன் செய்ய, அதெல்லாம் நீ ஒன்னும் செய்ய வேண்டாம், இங்கேயே இருக்கற என்னாலேயே முடில. அவளே பாய்ஸ் டீம்ல சேர முடிலன்னு வருத்தத்துல இருக்கா?’ என வனிதா எண்ட் கார்ட் போட்டுவிட்டார். உண்மையாகவா ஷெரின்? சோ சேட்.
‘வெளியே போன மாதிரியே உள்ளே வந்தது அபிராமி மட்டும் தான். மற்ற இரண்டு பேரும் பழிவாங்க வந்துருக்காங்க’ என அபியைப் பாராட்டிக் கொண்டிருந்தார் சாண்டி. ‘நான் உங்க கூட ஜாலி பண்ண வந்தேன்’ எனச் சொன்னார் அபி.
லாஸ் பேசினது, சிரித்தது எல்லாவற்றையும் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார் மோகன். பெரிய ரியாக்ஷன் இல்லாமல், இதெல்லாம் எனக்கு எப்பவோ தெரியும் என்கிற மோடில் கேட்டுக் கொண்டிருந்தார் சேரன். உன்னைப் பார்த்தா பழி வாங்க வந்த மாதிரி தெரியலையே மேன்!
லக்சரி பட்ஜெட் டாஸ்க் ஆரம்பித்தது. ஜெயிக்கின்ற அணி நேரிடையாக ஒருத்தரை எவிக்ஷனுக்கு தேர்ந்தெடுக்கணுமாம். ரைட்ட்டூ..!
கன்வேயரில் இருந்து பொருட்களை எடுக்கும் போது, தர்ஷன் கையில் காயம் பட்டது. இருந்தாலும் அதையெல்லாம் கண்டுக்காமல் விளையாடினார். முகினும், தர்ஷனும் தான் பெஸ்ட் பெர்ஃபாமர்ஸ்.
க்வாலிட்டி செக்கில் இன்னிக்கும் பிரச்சினை வருமா என எல்லோரும் ஆவலாக இருக்க, அப்படி ஏதும் நடக்கவில்லை. தர்ஷன், ஷெரின் என இரண்டு பேரும் பக்கத்தில் நின்று விளக்கம் கொடுத்தனர்.
பட்டி மன்றம்
கெஸ்ட்டா வந்தவர்கள் நடுவராக இருக்க, ஒரு பட்டிமன்றம் நடந்தது. முதலில் இந்தப் பட்டிமன்றம் டிசைன் பண்ணின ஸ்ட்ராட்டர்ஜி டீமுக்கு பாராட்டுகள். செம்ம பிளான். ‘உங்களுக்குச் சண்டை தானே போடணும்? இந்தாங்க ப்ளாட்ஃபார்ம். அந்தச் சண்டையை ஆர்கனைஸ்டாகச் செய்ங்க’ என பட்டிமன்றத்தைக் கொடுத்து பேசுங்க’ எனச் சொல்லிவிட்டனர்.
தலைப்புகளும் கூட இரண்டு நாளாக அடிபட்ட தலைப்புகள் தான்.
டீம் பிரிக்கும் போதே தோற்றுவிட்டனர் சாண்டி டீம்.
தர்ஷன், வனிதா, சேரன் + கவினால் ட்ரிக்கர் ஆன ஷெரின்.
போட்டியும் திறமையும் – தியாகமும் விட்டுக் கொடுத்தலும்
கரன்ட் டாபிக் எடுத்துக் கொடுத்த உடனே பிளந்து கட்டி விட்டனர் வனிதா அணி.
‘மத்தவங்களுக்குத் தெரியாம, அவங்களுக்காகச் செய்றது தான் தியாகம். ஊர் மக்கள் அனைவருக்கும் சொல்லிட்டுச் செஞ்சா அதுக்கு பேர் வேற’ என ஷெரின் நச் பாயிண்ட் பேச,
‘நீங்க விட்டுக்கொடுத்தா ஒருத்தன் மேல போகணும். கீழ போகக்கூடாது. மத்தவங்க விட்டுக் கொடுத்து தான் இவன் ஜெயிச்சாங்கிற அடையாளம் எனக்கு வேணாம். நான் அதுக்காக உழைச்சுருக்கேன். அதுக்கான தகுதியும் எனக்கு இருக்கு. அப்படி ஜெயிச்சா தான் எனக்கும் மரியாதை’ என தர்ஷன் வாயால் சொல்ல வைத்தது தான் டர்னிங் பாயின்ட்.
தனியா விளையாடணும் – அணியா விளையாடணும்
‘க்ரூப்பா இருந்தாலும் எங்களுக்குள்ள நாமினேட் பண்ண யோசிச்சதே இல்லை. நீங்க க்ரூப்பா சேர்ந்ததே அடுத்தவங்களை யூஸ் பண்ணிக்க தானே!’ என வனிதா போட்டுத் தாக்க,
‘நண்பர்களா க்ரூப்பா இருந்தாலும் எங்க கேமை நாங்கதான் விளையாடறோம்’ என ஷெரினும் அடித்து ஆடினார்.
சாரி எனும் சொல்லுக்கு மதிப்பு
இதுவும் திருவாளர் வனிதா அருளிய தலைப்பே! ‘நான் சாரி சொல்ல மாட்டேன். அதுல எனக்கு நம்பிக்கையில்லை’ என வனிதா சொன்னதை எடுத்து தலைப்பாகக் கொடுத்துவிட்டனர். பிக் பாஸ் டீம் அணியில், ‘அவனவன் எடுக்கிற முடிவு நமக்குச் சாதகமாகத் தான்யா இருக்கு’ என ஃபீல் செய்திருப்பார்கள்.
கையை ஆட்டி ஆட்டி, தலையை ஆட்டி ஆட்டி லாஸ் பேசின போது, “அந்த வெடுக்கு வெடுக்குன்னு ஆடற கையை உடைச்சு அடுப்புல வைச்சுருவேன்’ என்ற சின்ன கவுண்டர் மனோரமா கண் முன் தோன்றினால் நீயும் என் நண்பனே!
ஆர்ட்டின் சப்பாத்தியில் ஓட்டை போட்டதுக்கு லாஸ் சாரி கேட்டதை நடித்துக் காண்பித்து பழி வாங்கினார் ஷெரின். இதானாம்மா உங்க டக்கு?
நடுவில் சாக்ஷிக்கும் பட்டிமன்றத்தை, டிபேட் எனச் சொல்லப்போக, அதை கரெக்ட் பண்ண வந்த கவினுக்கும் முட்டிக் கொண்டது.
ஆக மொத்தமாக டீம் பி தான் ஜெயித்தனர். ஏன்னா அவங்க மட்டும் தான் பேசினார்கள்.
என்னதான் தன் அணிக்காகப் பேசினாலும் தர்ஷன் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்தது கண்கூடு. இதை பாய்ஸ் அணி எப்படி எடுத்துக் கொள்ளப் போறாங்க எனப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.