Shadow

உலக MS தினம் 2024 | இளைஞர்களை ஊனமாக்கும் நோய்

MSSI என்பது ‘மல்டிபிள் ஸ்க்ளிராசிஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா (Multiple Sclerosis Society of India)’ -வைக் குறிக்கும். உடலின் பல்வேறு இடங்களில் திசுக்கள் கடினமாகி, தண்டுவட மரப்பு நோய் (MS) ஏற்படும். மூளை மற்றும் முதுகு தண்டுவடத்து திசுக்களை மூடியுள்ள காப்புப் பொருளான மையீலின் (Myelin) கடினமாவதால் ஏற்படும் வடுக்கள், மூளை நரம்பணுக்கள் மற்றும் முதுகுத்தண்டுக்கிடையே உள்ள தொடர்பினைத் துண்டித்து, நோயாளியை ஊனமாக்குகிறது. இந்த நோய் ஏற்படுவதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆதலால், இதற்கான மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது, 14 முதல் 40 வயதுக்குள் உள்ளோரைத் தாக்குவதால், ‘இளைஞர்களை ஊனமாக்கும் நோய் (Crippler of the Young Adult)’ என்றும் அழைக்கப்படுகிறது.

MS ஒரு நரம்பியல் சிதைவு ஒழுங்கின்மைக் கோளாறாகும். இது, மூளை, முள்ளந்தண்டு வடம் மற்றும் பார்வை நரம்புகளைப் பாதிக்கிறது. மேலும் பல நரம்பியல் கோளாறுகளை ஏற்படுத்துவதோடு, எதிர்பாராத விதமாகவும் மைய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மீண்டும் மீண்டும் பாதிக்கிறது. இதன் விளைவாக, இளம் வயதினரின் வாழ்க்கை முடக்கப்படுகிறது. MS -ஆல் பாதிக்கப்படுபவர்கள், சோர்வு, குடல் சிறுநீர்ப்பை கட்டுப்படுத்த இயலாமை, உணர்வின்மை, மரத்துப்போதல், கூச்ச உணர்வு போன்ற 41 வகையான அறிகுறிகளை எதிர்கொள்வார்கள்.

MSSI சென்னைப் பிரிவின் சார்பாக, “எனது MS நோயறிதல்” என்ற கருவுடனும், “MS-ஐ ஒன்றாகக் கடத்துதல்” என்ற மைய நோக்குடனும், விழிப்புணர்வு நிகழ்ச்சி ஐ.ஐ.டி.யில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. MSSI இன் சென்னை அத்தியாயம், 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சொசைட்டி, MS-ஆல் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து வருகின்றனர்.

இந்தியாவில், MS உடன் வாழும் மக்களுக்கு எத்தகைய உதவியும் ஆதரவும் கிடைப்பதில்லை. ஏனெனில் இந்நோய் பற்றிய விழிப்புணர்வே இல்லாமல்தான் உள்ளனர். MSSI சென்னை பிரிவு, MS-ஆல் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. சில சமயங்களில், உலக MS தினம் அன்றுதான் தண்டுவட மரப்பு நோய் (MS) பற்றி முதல்முறையாகக் கேள்விப்படுகின்றனர். இந்தியாவில் ஒன்பது நகரங்களில், MSSI இன் பிரிவுகள் இயங்கியும், MS பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது, அதிலும் குறிப்பாகப் பரந்து விரிந்த கிராமப்புறங்களில் சுத்தமாக விழிப்புணர்வே இல்லை. MSSI இன் பிரதான நோக்கமே MS பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்குதலே! திடீரென பேச முடியாமல் வாய் குழறல் ஏற்படுபவர்களைக் குடித்துள்ளார் என்றும், நடக்க முடியாமல் ஊனமாகிறவர்களுக்குப் பேய் பிடித்துள்ளது என்றும் நம்பும் வழக்கம் இன்னும் சமூகத்தில் நிலவி வருவதால், MSSI இன் வேலை மிகவும் சிக்கலானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது.

மே 30 அன்று அனுசரிக்கப்படும் உலக MS தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக MSSI-இன் சென்னைப் பிரிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக முருகப்பா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திரு. முருகப்பன் அவர்களும், ஐ.ஐ.டி. ப்ரெயின் சென்ட்டரைத் தலைமை வகிக்கும் பேராசிரியர் மோகன்சங்கர் சிவபிரகாசமும், நரம்பியல் கண் மருத்துவர் திரு. ராஷ்மின் காந்தியும் தங்கள் துறை சார்ந்த முன்னெடுப்புகளைப் பகிர்ந்து கொண்டனர். MSSI-இன் செயலாளரான திருமதி ஆன் கொன்சால்வெஸ் நன்றியுரையை வழங்கினார்.

பேராசிரியர் மோகன்சங்கர் சிவபிரகாசம், “மருத்துவ ஆய்வுகள் எப்பொழுதும் இல்லாத அளவு புதிய உயரத்தைத் தொட்டுள்ளது. கண் நரம்பியலை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கும் ஒரு புதிய ஆய்வு முடிவினைப் பெறுகிறோம். ஆனால், ஒரு கசப்பான உண்மை என்னவென்றால், மூளை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியில் 30 வருடங்களாக நாம் எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. MRI ஸ்கேன் தான் கடைசியாக நிகழ்ந்த அறிவியல் கண்டுபிடிப்பு. மூளையை முழுவதுமாகப் படமெடுத்து, நல்ல ரெசலூஷனில் இமேஜைப் பார்க்க முடியாததால், மூளையில் என்ன நிகழ்கிறது என நம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லை. பாதிக்கப்பட்ட மூளையில் என்ன நிகழ்கிறது என்பதைப் பாதிக்கப்படாத மூளையோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை. பெண் மூளைக்கும், ஆண் மூளைக்குமான வேறுபாடுகளை ஆய்ந்தறிவதிலும் சிக்கல் நேரிடுகிறது.

ஆனால், நாங்கள் இங்கே ஐ.ஐ.டியில், 50 மூளைகளுக்கும் மேலாக அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலமாக ஆராய்ச்சி செய்துள்ளோம். உலகளவில் இத்தகைய முயற்சி இதுவே முதல்முறையாகும். உலகம் முழுவதும் உள்ள 25க்கும் மேற்பட்ட மூளை ஆராய்ச்சி நிறுவங்களோடு இணைந்துள்ளோம். வெளிநாடுகளில் இருந்து இங்கே வந்து, தரமணி கெஸ்ட் ஹவூஸில் தங்கி மெட்ராஸ் ஐ.ஐ.டி.யில் எங்களோடு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். வெவ்வேறு மருத்துவப் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 150 பேர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். மேலும் 150 மூளைகளை ஆராய்ச்சி செய்யவுள்ளோம். எங்களுக்கு மூளையை அளித்து உதவிய நோயாளியின் குடும்பங்களுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்” என்றார்.

ஐ.ஐ.டி.யுடன் இணைந்து இந்த ஆய்வில் MSSI-உம் பங்கெடுத்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் வெளிவரும்பட்சத்தில், உலகையே உலுக்கவல்ல மகத்தான கண்டிப்பிடிப்பாக இருக்கும். MS-ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லாமல், மூளை சம்பந்தமான எல்லாப் பிரச்சனைகளுக்குமே நல்லதொரு தீர்வினை வழங்கவல்லதாக இருக்கும்.

நரம்பியல் கண் மருத்துவரான ராஷ்மின் காந்தி, “MS -ஐக் கண்டுபிடிக்க எளிய வழி கண்கள்தான். கண் மங்கலாவதுதான் முதலில் தெரியும் அறிகுறி. மற்ற அறிகுறிகள் எல்லாம் இன்விசிபிளாகவே இருக்கும். அதை உதாசீனப்படுத்தாமல், ஒரு கண் மருத்துவரை அணுகினால், கண் பிரச்சனையாக இல்லாத பட்சத்தில் அவர் உடனடியாக உங்களை ஒரு நரம்பியல் நிபுணரிடம் அனுப்பி வைப்பார்” என்றார்.

MSSI சென்னை சேப்டரின் செயலாளரான திருமதி ஆன் கொன்சால்வெஸ், இருபத்தியேழு வருடங்களாக, MS-ஆல் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, ஒருங்கிணைத்து, அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதியை அளித்து, அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட தொடர் கவுன்சிலிங் அளித்துத் தேவையான அனைத்து உதவிகளையும் பெற உதவி வருகிறார். MS பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்க வேண்டும் என்பதும், MS -ஆல் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே அவரது வாழ்க்கையின் லட்சியம்.

(MSSI வெளியிட்டுள்ள ‘மூளை நலம்: மல்டிபிள் ஸ்க்ளிராசிஸ் உள்ளவர்களுக்கான வழிகாட்டி’ மின்னூலைப் பதிவிறக்கச் சொடுக்கவும்)