ஒரு நகைக்கடைக் கொள்ளையில் மூன்று பேர் கொல்லப்பட, நாயகன் கொள்ளைக்காரர்களைத் தேடி அவர்கள் முன் நிற்கத் துணிகிறான்.
குற்றவாளிகளைத் தப்ப விடாமல் தண்டனை வாங்கித் தரவேண்டும் என்பதை மீறி நாயகனிடம் ஒரு சாகச உணர்வு தொற்றிக் கொள்கிறது. ‘அவங்க முன்னாடி போய் நிற்கணும்’ என்ற தீர்மானத்துடன் உள்ளார். அப்பொழுது போலீஸ்? ஐடியில் வேலை செய்யும் நாயகன் அளவிற்குக் கூட விசாரணையை மேற்கொள்ளாமல் சுதாரிப்பின்றி உள்ளனர். அதிலும் அமைச்சர் ஒருவர், போலீஸுக்குப் பயங்கர குடைச்சல் தருகிறார்.
அமைச்சராக வைபவின் அண்ணன் சுனில் நடித்துள்ளார். முதல் பாதியில், காலில் வெந்நீர் ஊற்றியது போல் ஓர் அவஸ்தையோடு வருபவர், இரண்டாம் பாதியில் ரசிக்க வைக்கிறார். அவரது ஜோடியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தும், தனது ஸ்க்ரீன் பிரசென்ஸால் மற்ற இருவரை விடத் தனித்துத் தெரிகிறார். கொள்ளைச் சம்பவத்தில் தன் கணவனை இழந்து விடுகிறார் அஞ்சலி நாயர். அவரது மகளுக்கும் உடல்நலக் கோளாறு என்பதால், பெரும்பாலான காட்சிகளில் அழுது கொன்டே உள்ளார்.
கதையை முன்னும் பின்னுமாக நான்-லீனியரில் நகர்த்திச் செல்கிறார் இயக்குநர் S.K.வெற்றிச்செல்வன். இடையிடையே வரும் அதுல்யா ரவியுடனான காதல் காட்சிகள் ரசிக்க முடியாமல், படத்தோடு ஒன்ற முடியாமல் செய்கிறது. கொள்ளையை நிகழ்த்தும் மாஸ்டர் மைண்டாக வம்சி கிருஷ்ணா சிறப்பாக நடித்துள்ளார். ஆனால், ஏனோ அவருக்கு லாஸ் ஏஞ்செல்ஸில் இருந்து சாம் என்பவர் ஃபோன் செய்து கொண்டே இருக்கிறார். ஆனால் அந்த அமெரிக்க வில்லனின் அத்தியாயமும் சரியாக முடிக்கப்படவில்லை.
நாயகனாக ஜெய். காதல் காட்சிகளில் அவரது வழக்கமான நடிப்பை வழங்கியுள்ளார். வம்சி சொல்வது போல், கொள்ளைக் கதையைப் பழிவாங்கும் கதையாக மாற்றுகிறார் ஜெய். ஆக்ஷன் காட்சிகளை நம்பித் துணிந்துள்ளார் இயக்குநர் S.K.வெற்றிச்செல்வன். ஆக்ஷனுக்கு முன் அதற்கான தேவையை வலுப்படுத்தியிருந்தால் எண்ணித் துணிந்த கருமம் கைகூடியிருக்கும்.