Shadow

பொய்க்கால் குதிரை விமர்சனம்

கதிரவன் எனும் மையக் கதாபாத்திரத்திற்கு, ஒரு விபத்தில் முட்டி வரை இடது கால் போய்விடுகிறது. அவருக்குச் செயற்கைக் கால் பொருத்தப்படுகிறது. தலைப்பு, அந்தச் செயற்கைக் காலைக் குறிக்கிறதே அன்றி, பொய்க்கால் குதிரை ஆட்டம் எனும் கலைக்கும் கதைக்கும் சம்பந்தமில்லை.

ஒரு தந்தை தன் மகளின் உயிரைக் காப்பதற்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கிறார். அதனால் ஒரு கோடீஸ்வரியின் மகளைக் கடத்தி, தனது மகள் மகிழ்க்கு ஆப்ரேஷன் செய்யலாம் என முடிவெடுக்கிறார் கதிரவன். அவர் கடத்தும் முன், வேறு எவராலேயே அச்சிறுமி கடத்தப்பட, பழி கதிரவன் மேல் விழுகிறது. இரண்டு சிறுமிகளும் கதியும் என்னானது, கதிரவன் அவர்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை.

ஒரு பெரும் நிறுவனத்தைக் கட்டியாளும் கோடீஸ்வரி ருத்ராவாக வரலட்சுமி சரத்குமார்க்கு மிடுக்கான கதாபாத்திரம். கதையோடு பொருந்தி வரும் பாத்திரம். அவர் சமயத்துக்குத் தக்கவாறு எடுக்கும் முடிவுகள் ரசிக்க வைக்கின்றன. படத்தில் ரெய்ஸா வில்சன் இருப்பினும், வரலட்சுமியையே நாயகியெனக் கூற இயலும். மையக் கதாபாத்திரமான கதிரவனைப் போலவே, தன் மகளை எப்படியும் மீட்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறார்.

பிரபு தேவாவின் மகள் மகிழாக ஆழியா நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே, மை டியர் பூதம் படத்தில், அஷ்வந்தின் தோழியாகத் துறுதுறுவென நடித்திருப்பார். இப்படத்திலும், அதே துறுதுறுப்புடனும், கூடுதல் துள்ளலுடன் நடித்துள்ளார். த்ரில்லர் படமென்றாலும் நேரடியாகக் கதைக்குள் செல்லாமல், தந்தை – மகள் பாசத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்திய பின்பாகவே கருவிற்குள் செல்கிறார் இயக்குநர் சன்தோஷ் P. ஜெயக்குமார்.

நாயகனின் உற்ற நண்பன் மதனாக ஜெகன் நடித்துள்ளார். ஒன் மேன் ஆர்மியான கதிரவனுக்கு மாரல் சப்போர்ட்டாக உள்ளார். கெளரவ வேடத்தில் ஷ்யாமும் பிரகாஷ்ராஜும் நடித்துள்ளார். போலீஸ் கமிஷ்ணராக வரும் ஷ்யாம், அடுத்த பாகத்திற்கான லீடில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

கதிரவனாக, ஒற்றைக் காலுடன் நடனமாடி, ஆக்ரோஷமாகச் சண்டையிடுகிறார் பிரபு தேவா. ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷ் காசி இயக்கியுள்ள சண்டைக் காட்சிகள் பிரமாதமாக உள்ளன. நாயகனுக்குப் பொய்க்காலோ, செயற்கைக்காலோ தேவைப்படாத கதை என்ற போதும், ‘விபத்தில் ஒரு கால் போனபோது ஊனமாக உணரவில்லை. ஆனா மகளைக் காப்பாற்ற முடியாதோ என நினைக்கும் போது ஒரு தந்தையாக ஊனமாக உணர்கிறேன்’ என்ற வசனத்தின் மூலம் ஒரு நியாயத்தைக் கற்பித்துள்ளார் இயக்குநர். நாயகனுக்கு இரண்டு கால்கள் இருக்கும்படி கதை அமைத்திருந்தாலும், தம் குழந்தைகளுக்காக வாழும் கையறு நிலையிலுள்ள எல்லாத் தந்தைகளையும் பிரதிபலிக்கும்படி அப்பாத்திரம் சிறப்பாகவே அமைந்திருக்கும்.

ரேண்டமாக ஒரு கோடீஸ்வரரைத் தேர்ந்தெடுக்காமல், ஏன் வரலட்சுமியின் குழந்தையைக் கடத்தவேண்டுமென, சிறையிலிருக்கும் கதிரவனின் அப்பா பிரகாஷ்ராஜ் ஒரு கதையைச் சொல்கிறார். சாமானியனாக பெஸ்ட் (pest) கன்ட்ரோலில், மருந்தடிக்கும் வேலை செய்யும் பிரபு தேவா, அதன் பின் ஒரு கிரிமினலாக யோசிக்கிறார் வாழ்கிறார் என்பது சற்று நம்ப முடியாமல் இருக்கிறது.

படத்தின் சுவாரசியம் அதன் க்ளைமேக்ஸே! அதுவரையிலான படத்தின் போக்கை ஒட்டுமொத்தமாகக் கலைத்து புது அடுக்கில் நிறுவுகின்றனர். ஆனால் முடிவில், வாய்ப்பு கிடைத்ததும் வில்லன் நாயகனைக் கொல்லாமல், தான் ஏன் அப்படிச் செய்தேன் என வாக்குமூலம் தருவதைத் தவிர்த்து, அதைக் காட்சிரீதியாகச் சுருக்கியிருக்கலாம். பின் மீண்டும் நாயகன் பார்வையாளர்களுக்குக் கிட்டத்தட்ட அதே கதையைத் தன் கோணத்தில் மீண்டும் சொல்கிறார்.

பொறிக்குள் சென்று, பொறியை வைத்த வில்லனைப் பிரபுதேவா சிக்கவைப்தே, பொய்க்கால் குதிரையின் சுவாரசியம்.