Shadow

சீதா ராமம் விமர்சனம்

கதை, திரைக்கதை, நடிப்பு, மேக்கிங், ஒளிப்பதிவு, இசை, உடை வடிவமைப்பு, நடனம் என எல்லா வகையிலும் நிறைவைத் தருகிறது சீதா ராமம். காஷ்மீர், காதல் என மனதைக் குளிர வைக்கும் படம்.

பாகிஸ்தான் பிரிகேடியர் தாரிக்கின் பேத்தி அஃப்ரீன், 1965 இல் இந்தியன் லெஃப்டினென்ட் ராம் எழுதிய கடிதத்தை அவரது காதலி சீதா மகாலக்‌ஷ்மியிடம் ஒப்படைக்க, 1985 ஆம் ஆண்டு இந்தியா வருகிறார். அஃப்ரீனின் தேடல் படலத்தில், ராம் – சீதாவின் காதல் அழகாய் மொட்டவிழ்த்து மலரத் தொடங்குகிறது. கூடவே, ராம் தன் காதலிக்கு எழுதிய கடிதம் எப்படி பாகிஸ்தானின் பிரிகேடியருக்குக் கிடைத்தது என்ற சஸ்பென்ஸைக் கடைசி வரை தக்க வைத்துள்ளனர்.

எந்தக் கதாபாத்திரத்திற்கும் தன்னை அசால்ட்டாகப் பொருத்திக் கொள்ளும் மராத்தி நடிகரான சச்சின் கடேகர், பிரிகேடியர் தாரிக் பாத்திரத்தை ஏற்றுள்ளார். படத்தின் இரண்டாவது கதாநாயகன் எனச் சொல்லக் கூடிய அளவுக்கு மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள பாத்திரத்திற்கு ஆகச் சிறந்த கெளரவத்தைச் சேர்ந்துள்ளார்.

தாத்தா எழுதிய உயிலின்படி, வேண்டா வெறுப்பாக இந்தியா புறப்படும் கல்லூரி மாணவி அஃப்ரீனாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்திய வெறுப்பையுடைய பாகிஸ்தானியான அஃப்ரீனை இந்தியப் பயணம் என்னவாக மாற்றுகிறது என்பதறிய, படம் முடிந்ததும் திரையில் காண்பிக்கப்படும் வார்த்தைகளைத் தவறாமல் காணவேண்டும். இயக்குநர் ஹனு ராகவபுடி கிடைக்கின்ற எல்லா இடத்திலும் சிக்ஸர் அடித்துள்ளார் என்றே சொல்லவேண்டும்.

மனிதநேயம் மிக்க, நாட்டுப்பற்றுடைய அழகான இராணுவ அதிகாரி ராமாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். லவ்வர் பாய் பாத்திரம் அவருக்குப் புதிதல்ல என்பதால் மிக அநாயாசமாக நடித்துள்ளார். அவரது காதலி சீதா மகாலட்சுமியாக மிருணாள் தாகூர் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்திற்கு சீதாயணம் என்ற பெயர் கூடச் சால பொருந்தும். காதலுக்காக அவர் உள்ளபடிக்கு விண்ணைத் தாண்டிச் செல்வதோடு நில்லாமல், அவரது காதல் காவியத்தன்மையுடையது என்பதற்குச் சான்றாகக் காத்திருக்கவும் செய்கிறார் சீதா. அதுவும் பழியைச் சுமந்தவாறு ஒரு ரணமான காத்திருப்பு.

கடிதத்தில் குரலாக அறிமுகமாகும் பொழுதே நெருக்கமாகி விடுகிறார் சீதா மகாலக்‌ஷ்மி. அதற்கு முக்கிய காரணம் மதன் கார்க்கியின் தமிழாக்கமே! நேரடி தமிழ்ப்படம் பார்க்கும் உணர்வை அளித்ததோடு, மனதோடும் மாயம் செய்கிறது. வெறும் டப்பிங் படமாக மட்டுமில்லாமல், தமிழ்ப்படமாகவே தோன்றச் செய்ய சிரத்தையோடு உழைத்துள்ளனர். முரளி ஷர்மாவின் மேஜையில், ‘யாகாவராயினும் நா காக்க’ என்ற பலகை, ‘என்னை விட்டு ஓடிப் போக முடியுமா?’ என வெண்ணெலா கிஷோர் வீட்டு ரேடியோவில் ஒலிக்கும் தமிழ்ப்பாட்டு என மிக நேர்த்தியாக அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்துள்ளனர். பார்வையாளர்களை மதித்து, அவர்களை மனதில் கொண்டு படைப்பை உருவாக்கியதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர்.

தெலுங்கு படத்திற்கே உரிய பிரகாசமான வண்ணஜாலங்களாக இல்லாமல், கதைக்குத் தேவையான வண்ணக்கலவையைக் கவிதை போல் பயன்படுத்தியுள்ளனர் உடை வடிவமைப்பாளர், கலை இயக்குநர், ஒளிப்பதிவர்களான பி.எஸ்.வினோத்தும், ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவும். கூடவே மனதை வருடும் விஷால் சந்திரசேகரின் இசையும் இணைந்து படம் பார்க்கும் அனுபவத்தை ரம்மியமாக்கியுள்ளனர்.

பான் இந்தியா படம் என்ற கோதாவில் துப்பாக்கிகளின் இரைச்சலை அளவுக்கு அதிகமாகவே கேட்டு இம்சையுற்றவர்களை ஆசுவாசப்படுத்த, வாராது வந்த மாமணியாக அமைந்துள்ளது சீதா ராமம். நல்ல சினிமாவைப் பார்த்த நிறைவை அளித்துள்ளார் இயக்குநர் ஹனு ராகவபுடி. தவறவிடாதீர்கள் நண்பர்களே!