Search
Diabolic-fi

டேஞ்சர் டயபாலிக்கும், மகோன்னத காதலும்

டயபாலிக்

“நான் டேஞ்சர் டயபாலிக்டா.. இரும்புத்தூணுடா” என ‘சரவணா (2006)’ படத்தில் விவேக் சொல்வார். டயபாலிக் என்பது சாத்தானின் குணாதிசயத்தைக் குறிக்கும் சொல். தன்னை டெரராகக் காட்டிக் கொள்ள விவேக் உபயோகிக்கும் வார்த்தை என நினைத்திருந்தேன்.

ஆனால் அவர் ஒரு சூப்பர் ஹீரோ. 1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே, லயன் காமிக்ஸ் இத்தாலிய நாயகனான டேஞ்சர் டயபாலிக்கை தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளனர். பின் 26 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் டேஞ்சர் டயபாலிக்கை 2013இல் களமிறக்கியுள்ளனர். அதுவும் ஜுன், டிசம்பர் என இருமுறை வந்துவிட்டார்.

டயபாலிக்கின் பூர்விகம் இத்தாலி. அங்கே டயபாலிக் காமிக்ஸ்கள் சுமார் 40 லட்சம் பிரதிகள் விற்கின்றனவாம். இத்தாலியைவிட அதிக மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் அத்தகைய விற்பனை சாத்தியமாக கிழக்கில் சூரியன் அஸ்தமித்தால்தானாச்சு.

Angela

ஏஞ்சலா ஜிஸானி என்ற பெண்தான் டயபாலிக் கதாபாத்திரத்தை நவம்பர் 1962 இல் உருவாக்கியவர். பெண்கள் காரோட்டியதை ஆச்சரியமாகப் பார்க்கப்பட்ட 1950களிலேயே விமானம் ஓட்டுவதற்கான உரிமையை வைத்திருந்தவர் ஏஞ்சலா. தனி பதிப்பகம் ஒன்றினைத் தொடங்கி, தங்கை லூசியானா ஜிஸானியையும் இணைத்துக் கொண்டு டயபாலிக்கை சூப்பர் ஹீரோவாக்கி விட்டார் ஏஞ்சலா. காமிக்ஸ் உலகின் தவிர்க்க இயலாத சகாப்தங்கள் இவ்விரு சகோதரிகளும். ஏஞ்சலா இறந்த 10 மாதங்களுக்குப் பிறகுதான் தமிழகத்தில் டயபாலிக் அறிமுகமாகியுள்ளார்.

Diabolikஆக்ஷன் விரும்பிகளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும் என தொடக்கத்திலேயே எச்சரித்து விடுகிறார் ஆசிரியர் விஜயன். எனினும் பொல்லாத தனுஷ் தமன்னாவிடம் சொல்வது போல் டயபாலிக் பற்றி, ‘படிக்கப் படிக்க நிச்சயம் பிடிக்கும்’ என்றும் ‘பிட்’டைப் போட்டு வைக்கிறார். அது உண்மைதான். அவசரகதியில் முதல்முறை படித்துவிட்டு மீண்டும் இரண்டாம் முறை படிக்கும் பொழுது அநியாயத்திற்கு ஈர்க்கிறார் டயபாலிக். இதற்கே அவர் நெகட்டிவ் கதாநாயகன்தான். பெரிதாக சாகசமும் எதுவும் செய்திடவில்லை. ஆனால் திட்டமிட்டு கச்சிதமாகச் செயல்படுகிறார். நெருக்கடி வேளைகளில் மட்டுமே தவிர்க்க இயலாமல் அசகாய சூரராக உருமாறுகிறார். ஆனால் அவரது பலம் திட்டமிடுதல். முக்கியமாக, எவராக வேண்டுமானாலும் மாறி வேண்டிய தகவல்களைச் சேகரிக்கும் அவரது பிரத்தியேக முகமூடி ரகசியத்தினைச் சொல்ல வேண்டும்.

‘குற்றத் திருவிழா’ என்ற தலைப்பிற்கு ஏற்றவாறு கோலாகலமான குற்றங்களை எதையும் டயபாலிக் செய்துவிடவில்லை. ‘கிளர்வில்’ எனும் ஊடில் தன்னிருப்பை ஸ்திரப்படுத்திக் கொள்ள சில காரியங்களை செய்து முடிக்கிறார். டயபாலிக் ‘டேஞ்சர்’ ஆனவர் எனப் பெயர் பெறும் படலம் இது.

டிசம்பர் 2013இல் வந்த ‘Operation சூறாவளி’ என்ற இதழின் பின்னட்டை படம் டயபாலிக்கின் பராக்கிரமத்தை பறைசாற்றும்படி உள்ளது. டயபாலிக்கைப் பிடிப்பதை தன் லட்சியமாகக் கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் ஜிங்கோவுடனேயே இணைந்து, ’க்ரே குரோஸ்’ எனும் போட்டி இயக்கத்தை பூண்டோடு அழிக்கிறார்.

இரண்டு கதைகளிலும் ஓர் ஓற்றுமை நிலவுகிறது எனில் அது “காதல்”. குற்றத் திருவிழாவில் டயபாலிக் மீது, நடாஷா கொண்டுள்ள காதல். இரண்டாவதில் இன்ஸ்பெக்டர் ஜிங்கோ ஆல்டீ கொண்டுள்ள காதல். நடாஷா நம்மூர் சொர்ணக்கா போன்றவர். உருவத்தில் அல்ல குணத்தில். டயபாலிக்கின் உதவியோடு அவளுக்கு எதிராக இருக்கும் ஆதாரங்களை எல்லாம் அழித்துவிட்டு அமைதியான வாழ்க்கை மேற்கொள்கிறாள். டயபாலிக் பற்றிய அறிந்து கொள்ள அவளைக் கடத்தி விமானத்தில் கொண்டுபோகின்றனர். இறப்பது உறுதி என்றானவுடன் அவள் சமயோசிதமாக செய்யும் காரியத்தால் ‘டயபாலிக்’கிற்கு இறவாப் புகழ் கிடைக்கிறது.

Natasha

டயபாலிக்கும் நடாஷாவும் குற்றப் பிண்ணனியுள்ள ஒரே ரகத்தினர். ஆனால் இன்ஸ்பெக்டர் ஜிங்கோ மீது கண்டதும் காதலில் லயிக்கும் ஆல்டீ ஒரு சீமாட்டி. தமிழ்ப்பட நாயகிகள் போல், இறக்கும் தருவாயிலுள்ள ஆல்டீ ஜிங்கோவை மணந்து கொள்ள விரும்புகிறார். ஆல்டீ மீதுள்ள காதலால், தனது பரம எதிரி எனும் கருதும் டயபாலிக்குடனே ஜோடி சேர்கிறார் ஜிங்கோ. கதாபாத்திரங்களை காதல் செலுத்துகிறது.

Eva Kantடயபாலிக் அசகாய சூரர் எனினும் கதையில் சாகசங்களைவிட காதலுக்கும், நிதானமான திட்டமிடலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதனால்தான் தனது ரசிகர்களில், 30% பெண்களாக வைத்துள்ளார் போலும் டயபாலிக். ‘உணர்ச்சிகளுக்கு இடமளிப்பவன் பலவீனப்பட்டுப் போகிறான்’ என்ற கொள்கையுடைய டயபாலிக்கிற்கு.. காலத்தின் கட்டாயத்தால் 1963 முதல் ‘ஈவா’ தான் உற்றத் தோழி. 1962 இல் வெளிவந்த டயபாலிக்கின் முதலிரண்டு இதழ்கள் தவிர்த்து, டயபாலிக்கின் சாகசங்களிற்குத் துணை புரிந்து வருகிறார் இந்தப் பூனைக் கண்ணழகி.

கத்தியை வீசுவதில் கில்லாடியான டயபாலிக்கிற்கு, ஜாகுவார் கார் என்றால் கொள்ளை பிரியம். ரசனைக்காரரான டயபாலிக்கை உங்களுக்கும் பிடிக்கும்.

Jaguar Diabolik

– ஆர் டின்
Leave a Reply