Shadow

எங்கே போனாய் ரெனி!?

மார்ச் மாதம் நான்காம் தேதி, மாலை நேரத்தில் என் மகளிடமிருந்து ஃபோன். பதட்டமான குரலில் அம்மா, “எதிர் வீட்டு ரெனி காணாமல் போய் விட்டான். அவன் நண்பர்கள் ஃபேஸ்புக்கில் போட்டிருக்கிறார்கள். உனக்கு விஷயம் தெரியுமா?” என்றாள்.

“அப்படியெல்லாம் இருக்காது. இரண்டு நாள் முன்பு அவன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது, மே மாதத்தோடு கல்லூரிப் படிப்பு முடிந்து விடுமென்றும், கலிஃபோர்னியாவில் வேலை கிடைத்துவிடும் என்றும், அவனுக்கு அங்கே ஒரு அபார்ட்மென்ட் பார்த்துக் கொடுக்க வேண்டும், புது கார் வாங்க வேண்டும் என்று பெருமிதமாய்ப் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.. மேலும் லண்டனில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் தன் மகளும் spring break என்று ஒரு வாரம் விடுமுறையில் வந்திருப்பதை எத்தனை மகிழ்ச்சியாகச் சொன்னார்?

அப்படி எல்லாம் இருக்காது.. நீ யாரையோ நினைத்துப் பேசுகிறாய்” என்றேன் மகளிடம்,.
கொஞ்ச நேரத்தில் ரெனியின் படத்துடன் அன்று வெளியான செய்திகளையும், அவர்கள் போட்ட ஃபேஸ்புக் ஸ்டேட்டசையும் மகள் அனுப்பியவுடன் தான் உண்மை உறைத்து. அதிர்ச்சியில் உறைந்தும் போனேன். வெளியே சென்று பார்த்தால் எங்கள் தெரு முழுவதையும் அடைத்துக் கொண்டு 20, 25 கார்கள்! வழக்கம் போல் அவர்கள் வீட்டில் நடக்கும் ஏதோவொரு விருந்து என்றுதான் நினைக்கத் தோன்றியது!

‘கடவுளே! இந்தச் செய்தி பொய்யாக இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டே பதட்டத்துடன் தெருவைக் கடந்து கதவைத் தட்டினால், கவலை தோய்ந்த முகத்துடன் ரெனியின் அக்காதான் கதவைத் திறந்தாள். ரெனியின் அப்பாவைச் சுற்றி அவருடைய உறவினர்கள், நண்பர்கள் என பெரிய கூட்டம். ஆளாளுக்கு அவரை சமாதனப்படுத்திக் கொண்டிருந்தார்கள். மிகவும் கலகலப்பான மனிதர். கடந்த ஏழு வருடத்தில் ஒரு நாளும் அவரை இப்படி பார்த்ததே இல்லை.

என் கணவர் அவர்களுடன் சேர்ந்து கொள்ள, நான் ரெனியின் அம்மாவைப் பார்க்கச் சென்றேன். அழுதழுது குரலிலும் ஜீவனில்லை. என்னைப் பார்த்ததும் மீண்டும் கண்ணீருடன் அழ ஆரம்பித்தார். “இரண்டு நாட்கள் முன்பு தானே நாம் பேசிக் கொண்டிருந்தோம் எப்படி இப்படி ஆனது என்று தெரியவில்லை” என கேவிக் கேவி அழ, என்னச் செய்வது, எப்படி ஆறுதல் சொல்வது என்று புரியாமல் தவித்தேன்.

என்ன நடந்தது என்று கேட்டதற்கு கல்லூரியில் கடைசி வருடம், spring break-ல் நண்பர்களுடன் பனாமா சிட்டி பீச் என்று ஃ ப்ளோரிடாவில் இருக்கும் சுற்றுலா நகரத்திற்குச் சென்றவனைக் காணவில்லை. நண்பர்கள் காவல்துறைக்கு புகார் கொடுக்க, அந்த ஊர் காவல் நிலையம் இவரிடம் செய்தியைச் சொல்லி இருக்கிறார்கள். சனிக்கிழமை நண்பர்கள் இருபது பேருடன் சுற்றுலா சென்ற ரெனி அதே நாளில் அம்மாவிடம் பேசி இருக்கிறான்.

Remi @ Florida beach

திங்கட்கிழமை மாலை ஆறு மணிக்கு மேல் தனியே வெளியில் சென்றவன் திரும்பவில்லை. நண்பர்கள் செவ்வாய் காலை வரை தேடியிருக்கிறார்கள். பிறகு அவர்கள் காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளும் பொழுது செவ்வாய்கிழமை காலை பதினோருமணி. அவர்களும் கடலுக்குள்ளும், நகருக்குள்ளும் தேடித் பார்த்து விட்டு ஒன்றும் பலனளிக்காமல் ரெனியின் அம்மாவிடம் விஷயத்தைக் கூறும் பொழுது மாலை நான்கு மணி.

எப்படி இருந்திருக்கும் அந்த தாய்க்கு? பித்துப் பிடித்தவர் போல் வீட்டுக்கு வந்து கணவரிடமும், மகளிடமும் சொல்ல அவர்களும் என்ன நடக்கிறது என்று புரியாமல்.. எப்பொழுதும் தன் பேரனைப் பற்றி பெருமையாக பேசும் அவனின் 92 வயதுப் பாட்டியும் அழுது புலம்பிக் கொண்டே இருந்தார்.

கடைசியாக போலீஸ் சொன்ன தகவலின் படி ரெனியின் சட்டை, பர்ஸ், செல்ஃபோன் எல்லாம் பீச்சுக்கருகில் ஒரு குப்பைத் தொட்டியில் கிடைத்திருக்கிறது! அவன் ஏதோ போதை மருந்தை உட்கொண்டு கடலை நோக்கிச் சென்றதாக அவன் நண்பர்கள் கூறியிருக்கிறார்கள். ஜீரணிக்கவே முடியாத தகவலாக இருந்தது. ரெனி போதை மருந்து பழக்கத்தில் சிக்கியிருந்தானா?…நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

மகன் தொலைந்து போய் 24 மணி நேரத்திற்கும் மேல் ஆகி விட்டதால் உயிருடன் கிடைப்பது அரிது என்று ரெனியின் அம்மா அழுது புலம்ப, அவனின் அக்கா , அத்தை மகன்கள், மகள்கள், நண்பர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் என்று ஊடகம் வாயிலாக நண்பர்களையும், மற்றவர்களையும் தொடர்பு கொண்டு துரிதமாக அவனைப் பற்றிய விவரங்களைப் போட்டு பொது மக்கள் கவனத்திற்குக் கொண்டு வர என்று வீடு பரப்பரப்பாகி விட்டது.

‘விரைவில் உங்கள் மகன் உங்களுக்குக் கிடைத்து விடுவான் தைரியமாக இருங்கள், எல்லோரும் பிரார்த்திப்போம்’ என்று ஆளாளுக்கு ஆறுதல் சொல்லி விட்டு நடு இரவு வரை அவர்களுடனே இருந்து விட்டு கனத்த மனதுடன் ஒவ்வொருவராய் வீட்டுக்குத் திரும்பினோம்.

அடுத்த நாள் காலையில் அவர்கள் குடும்பத்திலிருந்து ஐவர் பனாமா சிட்டி பீச் கிளம்பி விட, அவர்களிடம் இருந்து செய்திகளை எதிர் நோக்கி நாங்களும் காத்திருந்தோம். ஆனால் தினமும் எங்களுக்கு வந்த செய்திகள் மனதிற்கு வருத்தம் தந்தனவே ஒழிய அமைதியைத் தரவில்லை. வயதான பாட்டியும், ஆறு மாதங்களுக்கு முன் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட டயாபெடிக் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் ரெனியின் அப்பாவும், அதிர்ந்து பேசாத அன்பே உருவான ரெனியின் அம்மாவும் இந்த துயரத்தை எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறார்கள் என்று கவலை மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது.

அதற்குள் இந்தச் செய்தி எங்கள் ஆல்பனி நகரம் முழுவதும் பரவிவிட்டது. கல்லூரிக்கு குழந்தைகளை அனுப்பிய பெற்றோர்களுக்குக் கவலையும் பதற்றமும் தொற்றிக் கொள்ள அவரவர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் தகவல் சொல்லி பத்திரமாக இருங்கள் என்று அறிவுறுத்தலோடு.. ஊரெங்கும் இதே பேச்சாகத்தான் இருக்கிறது.

ரெனி ஜோஸ் , வயது 21. கல்லூரி மாணவன். நண்பர்களோடு சுற்றுலா போனவன் தொலைந்து போய் இன்றோடு இரு மாதங்களுக்கும் மேலாகி விட்டது.

Team Find Reny

நாட்கள் வாரங்களாக, மாதமாக ஓடிக் கொன்டிருக்கிறது. பலவகையான வதந்திகள். போலீசும் தங்களால் முடிந்தவரை கடலுக்குள் ஆட்களை அனுப்பித் தேடினார்கள், அங்கிருக்கும் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து தேடினார்கள், இன்னும் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்று வரை உருப்படியான நம்பிக்கை தரும் செய்தி எதுவும் இல்லை.

ரெனி படித்த Rice University-ல் சீட் கிடைப்பதே அரிது. மிகவும் நன்கு படித்தால் மட்டுமே அங்கு சீட் கிடைக்கும். அதுவும் பொறியியல் துறை ,GPA 4, நன்கு படிக்கும் மாணவன். வேலையும் கிடைத்து விட்ட நிலை. அமெரிக்கர்கள் இவனின் மறைவில் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்று நம்புகிறார்கள். ஆனால் இன்று வரை எந்தத் துப்பும் கிடைக்காமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள்.

அவன் படித்த கல்லூரியும், அவனுடன் சென்ற நண்பர்களும் இதுவரை வெளிப்படையாக எந்த முறையான தகவலும் சொல்லாதது வருத்தமும் பொறுப்பற்ற செயலாகவும் இருக்கிறது.ரெனியின் குடும்பம் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் வைத்து தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவன் இருக்கும் இடத்தைச் சொல்பவர்களுக்கு உரிய சன்மானமும் வழங்கத் தயாராக இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்புடனே சென்று கொண்டிருக்கிறது.

கோவிலில் ஸ்பெஷல் பூஜையும், பிரார்த்தனைகளும் நடந்தது. லோக்கல் காங்கிரஸ்மேன் வந்திருந்து அவரால் முடிந்தவரை உதவுவதாகக் கூறினார். அன்று பைபிளில் இருந்து ஒரு அருமையான வாசகத்தைப் படித்தார்கள். லோக்கல் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளிலும் விரிவாக செய்திகளை ஒளிபரப்பினார்கள். அவன் படித்த பள்ளி, நண்பர்கள் அனைவரும் வருத்தங்களையும், விரைவில் ரெனி வீடு திரும்ப தங்களுடைய பிரார்த்தனைகளையும் தெரிவித்தார்கள். தினமும் அவன் வீட்டில் குடும்பத்தினர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்கிறார்கள். அவர்கள் வீட்டை கடக்கும் பொழுது மனம் கனக்கிறது.

ரெனி காணாமல் போன அதே இடத்தில் இருந்து ஒரு குழந்தை காணாமல் போய் ஒரு மாதத்திற்குப் பிறகு நெவேடா மாநிலத்தில் கிடைத்திருக்கிறான்!! ஆனால் அதுபற்றி முழுத் தகவலும் தெரியவில்லை. இதே நேரத்தில் நியூயார்க் நகரத்தில் ஒரு கல்லூரி மாணவி ஒரு வாரமாக காணமால் போய்விட, அவளுடைய பெற்றோர்கள் ஊடகங்களில் கண்ணீர் மல்க தங்கள் மகளைத் தேடித் தர வேண்டிக் கொண்டிருந்தனர்.

ஒரு வாரம் கழித்து அவளுடைய காரில் தற்கொலை செய்து கொண்டாள் என்ற தகவல் மட்டுமே கிடைத்தது. எதற்காக, ஏன், எப்படி, என்று காரணங்கள் தெரியாமல் நிலைகுலைந்து நிற்கிறது அந்தக் குடும்பம்.. இதில் மற்றொரு திருப்பமாக அவள் படித்ததாகச் சொன்ன கல்லூரியோ அவள் அங்குப் போன செமஸ்டர் படிக்கவே இல்லை என்கிறது. அப்பாவோ மகள் கல்லூரிக் கட்டணம் கட்டியதாகச் சொல்கிறார்! ஒரே குழப்பம்!

சிகாகோவில் இந்திய மாணவன் ஒருவன் காணமல் போய் எங்கெல்லாமோ தேடி ஒரு வாரம் கழித்து அவனது உயிரற்ற உடல்தான் கிடைத்தது என்று செய்திகள் சொல்கிறது. அவனுடைய பெற்றோர்கள் இன்று வரை எப்படி நடந்தது, யாரால் நடந்தது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மூன்று சம்பவங்களில் உள்ள ஒரு ஒற்றுமை.. இந்தக் குழந்தைகள் மூவரும் மலையாளக் குடும்பத்தைச் சேர்ந்த இந்தியர்கள்.

உண்மையிலேயே என்ன தான் நடக்கிறது? நம் குழந்தைகளின் மறுபக்கம் நமக்குத் தெரியவில்லையா?.அல்லது நாம் அவர்களை கவனிக்கத் தவறுகிறோமோ? அவர்களுடைய நட்பு வட்டம் எத்தகையது? மாறுபட்ட இரு கலாச்சாரச் சூழலில் உழல்வதினால் உண்டாகும் குழப்பங்கள் அவர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறதா? இப்படி விடை தேட வேண்டிய கேள்விகள் அடுக்கடுக்காய்த் தோன்றி பயமுறுத்துகிறது. கல்லூரிக்கு குழந்தைகளை அனுப்பி விட்டு நெஞ்சில் நெருப்புடன் பெற்றோர்களின் அவதி மட்டும் கூடிக் கொண்டிருக்கிறது.

இந்தியர்கள் என்பதால் காவல்துறை சரியான விதத்தில் புலன்விசாரணையில் அக்கறை காட்டவில்லை. அதனால்தான் இறந்து போன மாணவர்களின் கொலையாளிகளைக் கண்டு பிடிக்கவில்லை என்கிற குரலும் இந்தியக் குடும்பங்களில் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.

அமெரிக்காவில் கடைகளில், பொது இடங்களில் காணமால் போனவர்கள் என்று சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படங்களுடன் (கணவன் மனைவி பிரச்னையில் காணாமல் போன குழந்தைகள், வஞ்சிக்கப்பட்டவர்கள் என்று பல விதங்களில்) அறிவிப்புப் பலகையில் இருப்பதைப் பார்த்தாலே மனம் பதைபதைக்கும்.

தொலைந்து போனவர்களில் வெகு சிலரே சில மாதங்களுக்குப் பிறகு கிடைத்திருக்கிறார்கள். பலர் உயிரற்ற நிலையில்! இன்னும் பலரை இன்னமும் தேடிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

ஊடகங்கள் வாயிலாக தினமும் காணமல் போன கல்லூரி மாணவர்களைப் பற்றிய செய்திகள் வந்தாலும் எங்கோ யாரோ தொலைந்திருக்கிறார்கள். எப்படியாவது கிடைத்து விட வேண்டும் என்ற ஒரு நிமிட வேண்டுதலுக்குப் பிறகு மறந்து விடும் நிகழ்ச்சிகள் தான் அதிகம். இன்று கண்முன்னே ஓர் அழகிய குடும்பமே துயரத்தில் இருக்கும் பொழுது தான் அதன் தாக்கம் புரிகிறது!

பள்ளியில் படிக்கும் வரை பெற்றோர் கண்காணிப்பில் அவர்கள் நட்பு வட்டாரம், நண்பர்களின் குடும்பங்கள் என்று தெரிந்து கொண்டு ஒரு பாதுகாப்பான சூழலில் குழந்தைகளை வளர்த்து விட்டு, அவர்கள் கல்லூரிக்குச் சென்றவுடன் அவர்கள் நண்பர்கள் யார், எங்கிருந்து வருகிறார்கள் , அவர்களுடைய பழக்க வழக்கங்கள் எதுவும் தெரியாமல் தான் பல பெற்றோர்களும் இருக்கிறோம். நம் குழந்தைகள் எதையும் சமாளித்து விடுவார்கள் என்ற ஒரு அசட்டுத் தைரியம்.

கண் முன்னே நடந்த இந்த அசம்பாவிதம் ஒரு படிப்பினை. அனைவரும் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம்.

Reny's Birthday

எது எப்படியோ அந்தக் குடும்பத்திற்கு விரைவில் நற்செய்தி கிடைக்க ஆண்டவனின் அருளும், அனைவரின் பிரார்த்தனையும் அவசியம். இன்று ரெனியின் பிறந்த நாள். அவனைப் பெற்றவர்கள் முகத்தில் ஆயிரமாயிரம் கவலைகள்.

ஃபேஸ்புக்கில் FIND RENY JOSE என்று தேடித் பார்த்தால் பல தகவல்கள் தெரிந்து கொள்ள முடியும்.

– லதா