Shadow

ஐஸ் ஏஜ்: கொலிஷன் கோர்ஸ் விமர்சனம்

Ice Age 5 Tamil Review

சிறுகோள் (Asteroid) ஒன்று பூமியைத் தாக்க வருகிறது. பூமியின் அடியாழத்தில் வாழும் பக், ஒரு தீர்க்க தரிசணத்தைச் சொல்லும் தூணைத் தற்செயலாகக் கண்டுபிடிக்கிறது. அந்தத் தூணிலுள்ள செய்தியின் படி, முன்பே பூமியில் விழுந்த சிறுகோளின் ஒரு பகுதிதான் அதன் மற்றொரு பகுதியை ஈர்க்கும் விசையாகச் செயல்படுகிறது; அதை மீண்டும் விண்வெளிக்கு அனுப்பி விட்டால் பூமியைப் பேரழிவில் இருந்து காப்பாற்றலாம் என்றிருக்கிறது. பக்-கின் தலைமையில் பாலூட்டிகள் எப்படி சிறுகோளை விண்வெளிக்கு ஏவி பூமியைக் காப்பாற்றுகின்றன என்பதே படத்தின் சுவாரசியமான கதை.

2002 இல் வெளியிடப்பட்ட முதல் ஐஸ் ஏஜ் படத்தில் இருந்தே வரும் மரபுப்படி, இப்படமும் ஸ்க்ராட் எனும் அணிலின் ஓக் கொட்டை மீதான காதலுடனே தொடங்குகிறது. இம்முறை ஓக் கொட்டையைப் புதைக்கும் முயற்சியில், பனியில் புதையுண்டு கிடக்கும் வேற்றுக்கிரகவாசியின் விண்கப்பலை உயிர்ப்பித்து விடுகிறது ஸ்க்ராட். பூமியை விட்டு நீங்கித் தவறுதலாக விண்வெளியில் பயணப்படும் ஸ்க்ராட் தவறுதலாக ஏதோதோ செய்து சிறுகோளைப் பூமியை நோக்கித் திருப்பி விடுகிறது.

‘கான்ட்டினென்ட்டல் ட்ரிஃப்ட்’ என்ற போன பாகத்தின் இயக்கிய இயக்குநர்களில் ஒருவரான மைக் தர்மீயரே ‘கொலிஷன் கோர்ஸ்’-ஐயும் இயக்கியுள்ளார். படத்தில் முன் எப்பொழுதையும் விட நிறைய கிளைக் கதைகள் இழையோடுகின்ரன. மேன்னிக்கு தன் ஓரே மகளான பீச்சஸின் காதலன் ஜூலியனை ஏற்றுக் கொள்வதில் சிக்கல்; எல்லிக்கோ தங்கள் மகள் கல்யாணத்துக்குப் பிறகு பிரிவதில் உடன்பாடில்லை; பக்கிற்கு உலகை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும்; பறக்கும் டனோசாரான ட்ரோமெசார் கவினுக்கு பக்கைக் கொன்று பழி வாங்க வேண்டும்; லாமாவுக்கோ என்றும் இளமையாக வாழ வேண்டும்.

யானையான ஜூலியனின் நடை, தேவாங்கு ஸ்லாத்தின் காதல் தோல்வி, தேவாங்குப் பாட்டி க்ரானி செய்யும் அட்டகாசங்கள், ஒட்டக வகையைச் சேர்ந்த லாமாவின் யோகா, ஸ்க்ராட் விண்கப்பலில் செய்யும் அட்டூழியங்கள், தனியாகப் போவதைப் பற்றிப் பயமுறுத்தும் எல்லியை பீச்சஸ் சமாளிக்கும் பாங்கு என படம் நெடுகே உங்களைச் சிரிக்க வைக்கின்றனர். போதாக்குறைக்கு வசனங்களாலும் உங்களைக் கலகலப்பாக்குகின்றனர். தனது கல்யாண தேதியை மறந்து விட்டு முழிக்கிறது ஆண் யானையான மேன்னி. அப்பொழுது வரும் எரிநட்சத்திரத் தூறலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ‘அனிவேர்சரி சர்ப்ரைஸ்’ எனக் காட்டிக் கொள்கிறது.

Buck, the saviour2009 இல் வெளியான ‘டான் ஆஃப் தி டைனோசர்ஸ்’ எனும் மூன்றாம் பாகத்தின் நாயகனான ஒற்றைக் கண் மரநாய் பக் தான் இப்படத்தினும் நாயகனும். ‘நீங்க எல்லாம் ஆஸ்ட்ராய்ட் மோதிச் சாகும் பொழுது நாங்க மேலே பறந்து தப்பிச்சுப்போம்’ என ட்ரோமெசார் கவின் சொல்லும் பொழுது, “இவ்வளவு முட்டாள்த்தனமாக எதையும் நான் கேட்டதே இல்லை” என பக் தரும் ரியாக்ஷன் செம! கற்களை நக்கிப் பார்த்து, அதன் குணங்களைச் சொல்லும் பக் உங்களைக் கண்டிப்பாய் வெகுவாகக் கவரும்.

சிறுகோளுக்குள் வசிக்கும் உயிரினங்கள் இளமையோடு வாழ்கின்றனர். ‘ஜியோடோபியா’ என்று பெயரும் வைத்துக் கொள்கின்றனர். அந்தச் சிறுகோளை எப்படி விண்வெளிக்கு ஏவுகின்றனர் என்பது அட்டகாசமான யுக்தி. அதிலும் ஏவுதல் தடைப்படும் பொழுது, ஜூலியனின் யோசனையும் தேவாங்குப் பாட்டியின் செயலும் அட்டகாசம். அக்கால தமிழ் சினிமா போல், படம் சுபமாக முடிந்த பின்னும் பீச்சஸ் ஜூலியன் திருமண வைபவங்களோடு படத்தை முடிக்கின்றனர். புலிகளான டியகோவையும் ஷிராவையும் பார்த்துத் தொடக்கத்தில் அச்சமுறும் சிறு உயிரினங்கள், அவர்கள் உலகத்தை எப்படிக் காப்பாற்றினர் எனக் கதை கேட்டு அவர்களோடு ஒட்டிக் கொள்வது மனதிற்கு நிறைவளிக்கும் அருமையான காட்சி.

வில்லனில்லாப் படம், கொஞ்சம் சயின்ஸ், கூட்டு முயற்சியின் பலன், பரஸ்பர அன்பு எனக் குழந்தைகள் பார்க்க மிக ஏதுவான படமாக உள்ளதோடு, சுவாரசியமாய் மிகவும் ரசிக்கும்படியாக 3டி-யில் படமாக்கப்பட்டுள்ளது சிறப்பு. அடுத்த பாகமும் உண்டென உறுதியளித்து ஐஸ் ஏஜ் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளார் இணை இயக்குநரான T.Chu. மகிழ்ச்சி!