Shadow

காட்ஸ் ஆஃப் எகிப்த் விமர்சனம்

Gods of Egypt Tamil Vimarsanam

மனிதர்களும், கடவுள்களும் ஒன்றாய் வாழ்ந்த காலமது. கடவுளே மன்னனாக இருந்து மக்களை ஆட்சி செய்கிறார்கள். ஒசிரிஸ் எனும் எகிப்தின் மன்னன், காற்றுக் கடவுளான தன் மகன் ஹோரஸுக்கு முடிசூட்ட, விழா ஏற்பாடு செய்கிறார். அங்கே வரும் ஹோரஸின் சிற்றப்பாவான பாலைவனங்களுக்குப் பொறுப்பேற்கும் இருள் கடவுள் செத், தன் அண்ணனான ஒசிரஸைக் கொல்வதோடு ஹோரஸின் இரண்டு கண்களையும் பிடுங்கிக் கொள்கிறார். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.

இப்படத்தில் தோன்றும் கடவுள்களின் சராசரி உயரம் 9 அடி. ஆவேசமாகிச் சண்டையிடும் தருணங்களில் 12 அடிக்கு விஸ்வரூபமெடுப்பார்கள். கடவுள்கள் தான் எனினும் அவர்களுக்கும் மரணம் உண்டு. இருள் கடவுள் செத் எதிர்பார்ப்பதோ மரணமின்மையையோடு தீர்க்க ஆயுசாக நைல் நதி பாயும் எகிப்தை ஆள்வது. அவரது தந்தையான சூரிய கடவுள் “ரா”-வோ, தனக்குப் பிறகு பூமியை விழுங்க நினைக்கும் அபோஃபிஸ் எனும் ராட்சஷ ஜந்துவுடன் தினமும் போரிடுமாறு பணிக்கிறார். தன் சக்தியைப் பெருக்கிக் கொண்ட செத், கடுப்பாகி தந்தையை வீழ்த்தி விட்டு அவரது ஆயுதத்தைப் பறித்துக் கொண்டு, அபோஃபிஸ்க்கு உலகத்தைத் தாரை வார்க்கிறான். அப்படி உலகமும், மனிதர்களும் அழிந்தால்.. புதிய கிரகத்தை உருவாக்கி அதற்குத் தானே சகலமுமாக இருந்து விடலாம் என்பது செத்தின் திட்டம்.

பிரம்மாண்டமான படமெனினும், சுவாரசியமின்மையால் எதையும் ரசிக்க முடியாமல் போவது துரதிர்ஷ்டம். இப்படி எகிப்தியத் தெய்வங்கள் கைவிட்டாலும் எகிப்தியத் திருடனான பெக்-கும், அவன் காதலி ஜாயாவும் காப்பாற்றுகின்றனர். ஒட்டுதலின்றி அந்நியமாய் ஓடிக் கொண்டிருக்கும் படத்தில், பிணைப்பை உண்டாக்குவதே இவர்கள் தான். துறுதுறுவென்றும், ஜாயா மீது காதல் மிளிர வலம் வரும் பெக்-காக ப்ரெண்ட்டான் த்வைட்ஸ் நடித்துள்ளார். ஜாயாவாக நடித்திருக்கும் கர்ட்டனி ஈட்டன் குறைவான காட்சிகளிலேயே வந்தாலும் நிறைவாக ஈர்க்கிறார். ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த அவருக்கு இது இரண்டாவது படமென்பது குறிப்பிடத்தக்கது. முதல் படம் மேட் மேக்ஸ்: ஃப்யூரி ரோட். அப்படத்தில் இம்மார்ட்டன் ஜோவின் மனைவிகளில் ஒருவராகத் தோன்றி அசத்தியிருப்பார்.

300படத்தில் லியோநிடாஸாக ஈர்த்தது போல் ஜெரார்ட் பட்லர் ஈர்க்காவிட்டாலும், பார்ப்பதற்கு ஸ்டைலான கடவுளாக அசத்துகிறார். அவரது வில்லத்தனம் நமக்குச் சரியாகக் கடத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் கடவுள்களின் ரத்தம் தங்க திரவமாய் மின்னுவது ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் ஹோரஸ் மீது பரிதாபமோ, செத் மீது இயல்பாய் எழ வேண்டிய கோபம் பார்வையாளர்களுக்கு ஏற்படவில்லை. அதே போல், கடவுள்களின் விஸ்வரூபம் சிலிர்ப்பை ஏற்படுத்தாமல் தேமோவென்ற உணர்வையே ஏற்படுத்துகிறது. ஞானத்தின் கடவுள் ‘தோத்’தாக நடித்திருக்கும் சாட்விக் போஸ்மன் மட்டுமே கடவுள்களிலேயே கவர்பவராக உள்ளார்.

Chadwick Bosman

எலோடி யங் பெண் கடவுள் ஹேத்தோராக நடித்திருக்கிறார். இறந்தவர்களை மறு உலகத்திற்கு வரவேற்கும் கடவுள் இவர். மகிழ்ச்சி, காதல், பெண்மை, தாய்மை என்பனவற்றிற்கான கடவுளாகவும் எகிப்திய தொன்மங்களிவரைக் கெளரவிக்கின்றன. இப்படத்தில், ஹோரஸின் காதலியாக வருகிறார். பெக்-கின் காதலுக்கு உதவி செய்ய பெரும் தியாகம் ஒன்றினைச் செய்கிறார் ஹேத்தோர். படம் வலியுறுத்தும் அதி முக்கியமான விஷயம் தியாகம், நற்பண்புகள் போன்றவை மீதான முக்கியத்துவத்தையே!

தனது கண்கள் இல்லாமல் சக்தி இழந்து அலையும் ஹோரஸ், ஒரே ஒரு சுயநலமற்ற உதவியால் இழந்த சக்திகள் அனைத்தையும் பெறுகிறான். இறந்த பின்னான வாழ்க்கை அவரவரது நற்பண்புகளாலும், செயல்களாலுமே தீர்மானிக்கப்படுகிறது என்பதே எகிப்தியக் கடவுளர்கள் சாமானியர்களுக்குச் சொல்லும் செய்தி.