Shadow

காலத்தின் மழையில் நனைகிறோம்

கொட்டும் மழையில்
குளிரும் நிலையில்
இரவு பிறந்து
பகல் மரிக்கும்
வேளையில்
தான் நிற்கும் இடத்திலிருந்து
எதிர்த்திசையில்
வந்துகொண்டு இருக்கும்
ஒவ்வொரு பேருந்தாய்
பார்த்துக்கொண்டே எவ்வளவு
நேரம் கழித்தாரோ தெரியவில்லை …… !

கையைக் காட்டி நிறுத்தினாலும்
தன்னுடன் காத்திருந்தோர்
வேகமாக ஓடி ஏறிக்கொண்டதும்
அவரை மட்டும் தனிமைப்படுத்தி
விட்டு சென்றுகொண்டே இருக்கின்றார்கள்
அதுவும் ஏனோ ?

அவர் ஏறி இறங்க
நேரம் அதிகமாகும்
என்பதுதானே உங்கள்
கவலை
உங்களுக்கும் இது பிரதிபலிக்கும்
பின்னொருநாளில்
ஓய்வூத்தியத்தைப் பெற
நாட்களை எண்ணிக்கொண்டு
இருக்கும்பொழுது

நீயும் பேருந்திற்கு
காத்துக்கொண்டிருக்கும் பொழுது

நடக்கமுடியாமல் நாற்காலியில்
நாட்களை நகர்த்தும் பொழுது

வீட்டில் வெந்நீர் கேட்டு
பல நிமிடங்கள் கழித்துக்
கிடைக்கும்பொழுது
கழிவறைக்கு செல்ல
பிறரின் தயவை நாடி
நாதியற்று விட்டோமோ
என எண்ணும்பொழுது

ஒருவேளை எனக்கும்
அதே கதி தானோ ?
தோள்கள் சுருங்கி
கால்கள் வளைந்து
பார்வை மங்கி
மூக்கு கண்ணாடியின்
ஊடே உற்றுப்பார்ப்பதும்
மூன்றாவது காலாய்
வேறொரு கம்பை நம்பி,
காம்பீர நடையை
கடந்துசென்ற காலங்கள்
களவாடிப்போனதும்

– சே.ராஜப்ரியன்