Search

பொன்மொழியில் புதைந்துள்ள உண்மைகள்

பெண் புத்தி பின் புத்தி

இதற்கு பெரும்பாலனோர் கொண்டுள்ள பொருள் பெண் தவறாக/பிற்போக்காக/மடமையாக/ சிந்திப்பாள் என புரிந்து கொண்டுள்ளனர்.

இதற்கு சரியான பொருள் பெண் எப்பொழுதும் எதிர்காலம்/பின்னால் வரக்கூடிய/முன் எச்சரிக்கையாக/ யோசிப்பவள் என்பதுதான் அர்த்தம்.

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும்

இதற்கு பெரும்பாலனோர் கொண்டுள்ள பொருள் வேறு ஒருத்தருடைய குழந்தையை ஊட்டி வளர்த்தால் தன்னுடைய பிள்ளை தானாக வளரும் என புரிந்து கொண்டுள்ளனர்.

ஆனால் தன்னுடைய மனைவி என்பவள் வேறுஒருத்தனுடைய குழந்தை ஆகையால் தன் மனைவியை நன்றாக(கர்ப்ப காலம்/ எப்பொழுதுமே) ஊட்டி வளர்த்தால் அவள் அவனுடைய குழந்தையாய் நன்றாக கவனித்துக் கொள்வாள். எப்படியோ யாருடைய குழந்தையாக இருந்தாலும் சரி ஊட்டி வளருங்கள் அது யாராக இருந்தாலும்.

போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை..  வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை 

போலீஸையும் வாத்தியாரையும் பழிக்க இந்தப் பொன்மொழியை உபயோகிப்பார்கள். ஆனால் உண்மையில் இதனுடைய பொருளே வேறு!

குற்றவாளிகளின் போக்குகளைக் கற்றவனுக்கு போலீஸ் வேலை. முனோர்களின் வாக்கு அனைத்தையும் கற்றவனுக்கு வாத்தியார் வேலை.

ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணு

ஆயிரம் “பொய்” சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம் என்று நம்மவர்கள் பொய்யாகப் புரிந்து கொண்டுள்ளனர். 

இதனுடைய பொருள் ‘ஆயிரம் பேருக்கு போய் சொல்லி (அழைப்பது) ஒரு கல்யாணம் பண்ணு’ என்பதேயாகும்.

ஆயிரம் பேரை கொன்றால் அரைவைத்தியனாகலாம்

இதற்கு நம்மவர்கள் ஆயிரம் பேரை (மனிதர்கள்) கொன்றால் பாதி மருத்துவராக ஆகி விடலாம் என எண்ணி வரும் நோயாளிகளை கொன்றுகொண்டிருக்கிறார்கள்.

இதனுடைய மூலப் பொருள் ஆயிரம் வேரைக் (மூலிகைகள் /தாவரங்கள்) கொன்றால் அரைவைத்தியனாகலாம். அந்தக் காலத்தில் மூலிகை வைத்தியம் மேற்கொண்ட பொழுது சொல்லி வைத்ததுதான் இது.

பிள்ளைய பெத்தா கண்ணீரு.. தென்னைய பெத்தா இளநீரு

பிள்ளைகள் பெற்றோர்களுக்கு சோறு போடாமல் இருப்பது, கொடுமைபடுத்துவது, சரியாகக் கவனிக்காமல் இருப்பது, முதியோர் இல்லத்திற்கு கொண்டு சென்று விடுவது என்பதுடன் அர்த்தப்படுத்திக் கொள்கின்றனர். இப்போ அதிகபட்சம் அப்படிதான் நடக்கின்றது. அது வேறு கதை.

ஆனால் இதற்கு உண்மையில் என்ன பொருள் என்றால்..  தாய் குழந்தை பெறும்பொழுது ( பிரசவத்தின் பொழுது ) வலி தாங்க முடியாமல் அழுவாள். அதனால் கண்ணீர் வடிப்பாள். தென்னை மரம் நட்டால் இளநீர் கிடைக்கும்.

பந்திக்கு முந்திப்போ படைக்கு பிந்திப்போ

‘போர் நடக்கும் பொழுது பின்வாங்கிக்கொள்.பந்திக்கு முந்திக்கொள்.உணவுபண்டங்கள் தீர்ந்துவிடும். ஆகையனால் பந்திக்கு முதலாளாகப் போ’ என இதையும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளோம்.

இதன் உண்மைப் பொருள்,  போரில் வீரன் அம்பை வில்லில் நணேற்றும்பொழுது அவனுடைய கைகள் பின்னோக்கி வேகமாக இழுத்து விடும். பந்தியில் உண்ணும்பொழுது முன்பக்கமிருந்துதான் நாம் உணவுகளை நம் கைகளால் அள்ளி உண்போம்.

– சே. ராஜப்ரியன்




Leave a Reply

சமீபத்திய பதிவுகள்

காணொளிகள்

கேலரி