
தமிழ்ச்செல்வனுக்கு காவ்யா மீது கண்டதும் காதல் எழுகிறது. அவளை தினம் பார்ப்பதற்காக கொரியர் கம்பெனியில் வேலை செய்கிறான். சமூகச் செயற்பாட்டாளர் சத்யமூர்த்திக்குக் கொரியர் கொடுக்கப் போகும் பொழுது ஒரு பிரச்சனை எழுகிறது. அதென்ன கொரியர்? யாரால் பிரச்சனை? அதில் சிக்கிக் கொள்ளும் தமிழ்ச்செல்வன் எப்படி மீள்கிறான் என்பதுடன் படம் நிறைவுறுகிறது.
தமிழ்ப் படங்களில் சமூகச் செயற்பாட்டாளராக அதிகம் முறை நடித்தது யாரென ஏதேனும் ஆய்வு மேற்கொண்டால், கண்டிப்பாக நாசர் என்றே முடிவு வருமெனத் தோன்றுகிறது. மிகச் சமீபத்தில் வெளியான அர்த்தநாரி, கபாலி முதல் ஏகப்பட்ட படங்களைச் சான்றாக அடுக்கிக் கொண்டே போகலாம். சுந்தர்.சி நடித்த ‘ஆயுதம் செய்வோம்’ மற்றொரு நல்ல உதாரணம். நாசரை இந்தப் புனித பிம்பத்தில் இருந்து மீட்டு, ‘அவ்வை சண்முகி’ படத்தில் வரும் பாஷா பாய் போல் குணசித்திர வேடங்களிலும் மீண்டும் அவரைத் தமிழ்த் திரையுலகம் நடிக்க வைக்க வேண்டும்.
‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்குப் பிறகு தொடங்கப்பட்ட ஜெய் படம். படம் தொடங்கப்பட்டு ஐந்து வருடங்கள் ஆகிறது. தில்லுக்கு துட்டு என பக்கா நாயகனாக ஃபார்ம் ஆகி விட்ட சந்தானத்தை பழைய கலாய்க்கும் எனர்ஜியோடு பார்க்க, இந்தத் தயாரிப்புத் தாமதம் வழிவகை செய்துள்ளது. ‘வாய தொறக்கிற புள்ளத்தான் வாழக்கா பஜ்ஜி சாப்பிடும்’ என அவரது பாணி கவுன்ட்டர் வசனங்கள் படம் முழுக்கக் கலகலக்க வைக்கிறது. அதற்குத் தோதாக ஏ.சி.சக்திவேல் எனும் பாத்திரத்தில் வி.டி.வி.கணேஷும் சந்தானத்தின் கலாய்க்கு வகையாக அமைந்துள்ளார். சுவாமிநாதன், மனோகர், ஈஸ்டர் எனப் போதாக்குறைக்கு ‘லொள்ளு சபா’ டீமும் படத்தில் வருகின்றனர். அதை விட அசத்தலான இன்னொரு விஷயமும் படத்தில் உண்டு. ‘நுரையீரல் பஞ்சு போன்று மென்மையானது’ எனப் ஸ்பாஞ்சைக் கசக்கி, கரகரப்பான குரலில் அழுக்கு சாறு பிழியும் விளம்பரத்தை ரொம்ப நாளுக்குப் பிறகு திரையில் காண முடிகிறது.
தமிழ்ச்செல்வனாக ஜெய். ஜெய்யிடமிருந்து எப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்ப்போமோ, அப்படி அவருக்குப் பொருத்தும்படியான பாத்திரத்தில் தோன்றியுள்ளார். அவருக்கு ஜோடியாக, காவ்யா எனும் பாத்திரத்தில் யாமி கெளதம். ஏற்கெனவே ராதாமோகனின் கெளரவம் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போலவே நாயகிக்குச் சொல்லிக் கொள்ளும்படியான பாத்திரம் படத்தில் இல்லை.
கர்ப்பிணிப் பெண்களின் கருவில் இருந்து குருத்தணுவைத் (Stem cells) திருடி மருத்துவ ஆய்வு மேற்கொள்ளும் மருத்துவராக அசுடோஷ் ராணா. ஒரு கொரியரைக் கைப்பற்ற அவர் ஆட்கள் காட்டும் பதற்றமும், வகுக்கும் வியூகமும் படத்தின் இரண்டாம் பாதியை விறுவிறுப்பாக்கிறது. எனினும் படமாக ஒரு முழுமையுணர்வையோ நிறைவையோ தராமல் இடறுகிறது.
படம் காலத்தே வெளிவந்து வெற்றி பெற்றிருந்தால், ‘தமிழ்ச்செல்வனும் வருவாய்த்துறையும்’, ‘தமிழ்ச்செல்வனும் பொதுப்பணித்துறையும்’ எனப் படங்கள் எடுக்கத் திட்டமிட்டிருந்தார் ‘ஃபோட்டான் கதாஸ்’ நிறுவனரான கெளதம் மேனன். சின்ன திரை நடிகரான பிரேம்சாய், பெரிய திரையில் இயக்குநராகப் பரிமாணம் பெற்றுள்ளார். முதல் படத்தையே, தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் இயக்கியுள்ளார். சத்யா பொன்மாரின் ஒளிப்பதிவில், திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் ஈர்க்கின்றன.