Shadow

மனித மனம்

நான்கு ரவுடிகள் தீபாவை துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தனர் ….எதேச்சையாக அந்த தெரு பக்கம் வந்த சுரேந்தர் பார்த்த மாத்திரத்திலேயே துரத்தப்படுவது தன்னுடன் வேலை பார்க்கும் தீபாதான் என்பதை தெளிந்து அந்த ரவுடி கும்பலை விரட்டிப்பிடித்து அடித்து துவைக்கையில் கேட்டது அலாரம் டைம் பீஸின் மணியொலி …கலைந்தது கனவு….

அலாரத்தை ஆப் செய்ய முயன்றபோதுதான் கௌரி முனங்கினாள் ,”ஏங்க அலாரம் அடிக்கல போன் அடிக்குது ..ஏந்தான் இப்டி இருக்கீங்களோ “என்று அந்த உறக்கத்திலேயும் தெளிவாக கடிந்து விட்டு மீண்டும் உறங்கிவிட்டாள் …

“அட ஆமா போன் அடிக்குது “
“ஹலோ…..”
“டேய் சுரேந்தரு அப்பா பேசுறேன் டா “
“என்னப்பா இந்த நேரத்ல என்ன ஆச்சு ?”
“ஒண்ணுமில்ல ….அம்மாக்கு கொஞ்சம் ஒடம்பு சரியில்ல…நீ கொஞ்சம் வந்தா தேவலைன்னு தோனுச்சு ..இப்போவே சொன்னாதான நாளைக்காவது வரமுடியும் …அதான் சொன்னேன்…”
“சரிப்பா வரேன் …அம்மாவ அதுவர பத்தரமா பாத்துக்கோ”
“வரும்போது விச்சு குட்டியையும் ,கெளரியையும் கூட்டிட்டு வாடா..பாத்து ஒரு வருசம் ஆகுது “
“சரிப்பா “
“சரி அப்ப நான் போன வச்சிரட்டுமா ?”
“சரிப்பா ..அம்மாவ பாத்துக்கோ …நீயும் ஒடம்ப பாத்துக்கோ …போன வக்கிறேன் “

திரும்ப தூங்க முயன்றான் …உறக்கம் வர வில்லை ….யோசனையாகவே இருந்தது…அவனுக்கும் அம்மாவையும் அப்பாவையும் பார்க்க வேண்டும் போல் இருந்தது ….இவனுக்கும் கெளரிக்கும் மாதம் ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுத்துகொள்ள இயலும் ..மேலும் விடுப்பு வேண்டியிருப்பின் சம்பளத்தில் சிறு பகுதியை இழக்க நேரிடும் ..அதுவும் விச்சு பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்ததில் இருந்து ஊர்பக்கம் செல்வதே அரிதாகி விட்டது …அம்மாவும் அப்பாவும் தங்களது புளியங்குடி சொந்த வீட்டை விட்டு வரமாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர்…அவர்கள் நினைப்பதில் ஒருவகை நியாயம் இருக்கத்தான் செய்கிறது …பல ஆண்டுகள் பத்துக்கு பத்து அளவு வாடகை வீட்டில் குடியிருந்துகொண்டு ஆசை ஆசையாய் பார்த்து பார்த்து அவர்கள் கட்டிய வீடு அது…அதை விட்டு சென்னையில் சுரேந்தருடன் தங்க அவர்களுக்கு மனம் இல்லை…வீடு ஒரு புறம் காரணமாய் இருக்க கௌரியும் அவர்களின் தனிமை விருப்பத்திற்கு காரணமாய் அமைந்தாள்…
சிந்தனை ஓட்டத்தை நிறுத்திவிட்டு அந்நாளை தொடங்க ஆயத்தமானான் சுரேந்தர் ….

நேற்று இரவு பிரிஜில் வைத்த இட்லியையும் சாம்பாரையும் கடமை உணர்வுடன் விழுங்கிக்கொண்டு இருந்தான் …

“என்னங்க காலைல போன் வந்துதே …யாரு ?”
“நானே உன்கிட்ட சொல்ணும்னு இருந்தேன் …அப்பா பேசினாரு “
“ஓஹோ …என்ன சொன்னாங்க ?”
“அம்மாக்கு ஒடம்பு சரியில்லயாம் …நம்மள வரச்சொன்னாரு “
“அவர் சொல்றது சரிதான் …ஆனா திடுதிப்புன்னு லீவு எடுக்க முடியாது ..அதும் புது மேனேஜர் ஸ்ட்ரிக்ட் …விச்சுக்கு ஹாப் இயர்லி லீவ் தான ..நீங்களும் அவனும் போயிட்டு வாங்க …”
“விச்சு ஒன்ன விட்டுட்டு இருக்க மாட்டான் ..அவன என்னால தனியா சமாளிக்க முடியாது “.
“சரி வுடு .நான் மட்டும் போயிட்டு வரேன் …சாந்தரம் ஆபிஸ்ல இருந்து வந்த உடனே சாப்புட்டு நைட் பஸ்ஸ புடிக்குறேன் “
“சரிங்க “
காலை பதினோரு மணி அளவில் கெளரிக்கு போன் வந்தது.கெளரியின் தாய்க்கு உடம்பு முடியவில்லை என்பதே தகவல்…

“ஹலோ நான் கௌரி பேசுறேங்க ..அப்பா போன் பண்ணாரு …அம்மாக்கு ஒடம்பு முடியலையாம்…வரச்சொன்னாரு …நானும் விச்சுவும் இப்போ உடனே கெளம்புறோம் …இப்ப பஸ் ஏறுனாதான் நைட் போறதுக்கு சரியா இருக்கும் …சாவிய பக்கத்துக்கு வீட்ல குடுத்துட்டு போறேன் ..போகும்போது எதுக்கும் கேஸ் ,சுவிட்ச் ,டேப்லாம் ஒரு வாட்டி செக் பண்ணிட்டு போங்க …அத்தையும் மாமாவையும் கேட்டதா சொல்லுங்க ..நானும் போன் பண்றேன் ..போன வக்றேன் சரியா ?”

சரி என்று மனதில் வலியில்லாமல் சொல்ல வெகுவாகப் பழகி இருந்தான் சுரேந்தர்.

– சுபலலிதா