Shadow

1982 – லெபனான் திரைப்படம்

1982-lebanon-movie

ஜூன் 1982. விஸாம் எனும் பள்ளி மாணவன், எப்படியாவது தன் காதலை ஜோனாவிடம் சொல்லி விடவேண்டுமென நினைக்கின்றான். ஆனால், அச்சமயம் பலத்த வெடிச்சத்தம் கேட்கிறது. எல்லாமே தலைக்கீழாய் மாறுகிறது. லெபனான் இளைஞர்கள் இராணுவத்தில் பெருமளவு சேர, லெபனான் மண்ணில் இஸ்ரேலும் சிரியாவும் மோதிக் கொள்கின்றன.

பெரும்பாலான போர் படங்கள், குறிப்பாக அமெரிக்கத் திரைப்படங்கள், தங்கள் படை எப்படி போரில் வெற்றி ஈட்டியது என்பது பற்றியதாகவே இருக்கும். ‘தி பியானிஸ்ட்’ போன்ற வெகு சில விதிவிலக்குகளும் உண்டு. இதற்கு மாறாக ஐரோப்பியத் திரைப்படங்களோ, போரினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பினைப் பற்றித் தொடர்ந்து பேசி வருகின்றன. அவ்வகையில் மத்திய கிழக்கு நாடான லெபனானின் இயக்குநர்களும், போரின் பாதிப்பைப் பற்றிய உணர்ச்சிபூர்வமான படத்தை உருவாக்கி வருகிறார்கள். ‘கேப்பர்னாம் (Capernaum)’ என்ற அற்புதமான லெபனான் படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அப்படத்தில் நடித்த லபாகி, இப்படத்தில் யாஸ்மின் எனும் ஆசிரியையாகச் சிறப்பாக நடித்துள்ளார்.

சிறுவர்களிடம் அற்புதமான நடிப்பை வெளிக்கொண்டு வந்திருப்பார் இயக்குநர் ஒளலிட் மெளனஸ். இது அவரது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தனது பால்ய கால நினைவுகளைப் படமாக்கியுள்ள ஒளலிட், போரினை ஒரு சிறுவனின் கண்களில் காட்ட விரும்பியுள்ளார். விஸாம் பாத்திரத்திற்கு, 700 சிறுவர்களை ஆடிஷன் செய்து, மொஹமது டாலியைத் தேர்வு செய்துள்ளார். சிறுவர்கள்களின் குறும்புத்தனங்கள் இயல்பான நகைச்சுவைக் காட்சிகளாகத் திரையில் படர்ந்திருப்பது படத்தின் சிறப்புகளில் ஒன்று.

இப்படத்தை பெய்ரூட் நகர மக்களுக்கும், அவர்களது எதையும் போருத்துக் கொண்டு மீண்டெழும் குணத்திற்கும் டெடிகேட் செய்துள்ளார் இயக்குநர். ‘கிழக்கின் பாரீஸ்’ என அழைக்கப்படும் பெய்ரூட் தனது அமைதியை மீட்டெடுக்கும். அதன் அழகான மக்களையும் கலாச்சாரத்தையும், உலகம் மீண்டும் அறிந்து கொள்ளும் நாள் வரும் என நம்புவோம்.

படத்தின் முடிவில், வானில் இருந்து வெடிகுண்டு வீசப்படுகிறது. மேகங்கள் காளான் குடை போல் உருமாறுகின்றன. பெரியவர்கள் பரிதவிக்க, சிறுவன் விஸாமோ, தன்னுடைய சூப்பர் ஹீரோ மேகத்தில் இருந்து வந்து தங்களைக் காப்பாற்றப் போவதாகக் கற்பனை செய்து கொள்கிறான். பெரியவர்களின் உலகத்திற்கும், சிறுவர்களின் கள்ளமில்லா உலகத்திற்குமான இடைவெளியை மிக அழுத்தமாய்ப் பதிவதோடு, போரற்ற உலகத்திற்கான அவசியத்தையும் முகத்தில் வலுவாக அறைகிறது.

– அருணா வெங்கடாசலம்