Shadow

ஸ்பெஷல் ஆப்ஸ் – விமர்சனம்

Special-Ops-review

டிசம்பர் 13, 2001இல், பார்லியமென்ட்டில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயற்பட்டவனைப் பத்தொன்பது வருடங்களாகத் தேடி வருகிறார் ரா (RAW) அதிகாரியான ஹிம்மத் சிங். சிறப்பு ஆப்ரேஷன் எனப் பொருள்படும் வகையில், ‘ஸ்பெஷல் ஆப்ஸ்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸை, பிரபல ஹிந்திப் பட இயக்குநரான நீரஜ் பாண்டேவின் ‘ஃப்ரைடே ஸ்டோரிடெல்லர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், நீரஜ், இயக்குநர் ஷிவம் நாயருடன் இணைந்து இயக்கியும் உள்ளார். இந்தியாவில் நடப்பதை ஷிவம் நாயரும், வெளிநாடுகளில் நடக்கும் பகுதிகளை நீரஜ் பாண்டேவும் தங்களுக்குள் பிரித்துக் கொண்டுள்ளனர்.

எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த இணையத் தொடர், 2001க்குப் பிறகு நடந்த முக்கியமான தீவிரவாதத் தாக்குதல்களை எல்லாம் தொட்டுச் செல்கிறது. பார்லியமென்ட் தாக்குதலை மட்டும் அப்படியே திரையில் மறு உருவாக்கம் செய்ய முனைந்துள்ளனர். அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து கிடைக்கும், சிறு துப்பைக் கொண்டு, இக்லாக் கானைத் தேடி வருகிறார் ஹிம்மத் சிங். அந்த ஆளைப் பற்றி வேறெந்தத் தகவலும் கிடைத்த காரணத்தால், இக்லாக் கான் என்பவன் ஹிம்மத்தின் கட்டுக்கதை என ஏளனம் செய்கின்றனர். இல்லாதவனைத் தேடி, கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளார் என ஹிம்மத் சிங் மீது விசாரணைக் கமிஷன் நடகிறது. அந்த விசாரணையில் இருந்து மெதுவாகக் கதை விரிகிறது. ரா எப்படிச் செயல்படுகிறது என்றும், அத்துறையின் உளவாளிகள் அந்நிய மண்ணில் வருடக்கணக்காக வாழ்ந்து, எப்படித் தங்கள் டார்கெட்டை நோக்கி இம்மி இம்மியாக நகர்கின்றனர் என சுவாரசியமாகத் தொடரைக் கொண்டு போயுள்ளனர்.

வெட்னஸ்டே (உன்னைப்போல் ஒருவன்), ஸ்பெஷல் 26 (தானா சேர்ந்த கூட்டம்) முதலிய படங்களை இயக்கியவர் நீரஜ் பாண்டே. தீபக் கிங்ரானி, பெனாசி அலி ஃபிதா ஆகியோருடன் இணைந்து, உண்மைச் சம்பவங்களைத் தழுவி திரைக்கதை அமைத்துள்ளார் நீரஜ். குறிப்பாக, ஹிம்மத் சிங்கிற்கும் அவரது மகளுக்குமான தலைமுறை இடைவெளி, அதிமுக்கியமான தன் பணிகளுக்கு இடையுமே தன் மகளின் சேஃப்டியில் ஹிம்மத் காட்டும் அக்கறை, ஐபி (IB) அதிகாரிக்கும் அவருக்கு ஏற்படும் உரசலான நட்பு என நீரஜ் பாண்டேவின் டீட்டெயிலிங் ரசிக்க வைக்கின்றன. விசாரணைப் பகுதிகள் ஸ்லோவாகப் போவது போல் தெரிந்தாலும், அதை நேர்த்தியான வசனங்கள் மூலம் சமாளித்துள்ளார். மேலும், ஹிம்மத் சிங்காக நடித்துள்ள கே கே மேனன் பிரமாதமாக நடித்துள்ளார். முக்கியமாக அவருக்கு டப்பிங் கொடுத்தவர் அந்தக் கதாபாத்திரத்திற்கு அழகான உயிர் கொடுத்துள்ளார். துருக்கி, ஜோர்டான், அஜெர்பைஜான் போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளதால், ஆங்கில வெப் சீரிஸ்க்கு இணையான பிரம்மாண்டத்தையும், விஷுவல் அழகையும் கொண்டு வந்துள்ளார் நீரஜ் பாண்டே.

இன்ஸ்பெக்டர் அப்பாஸ் ஷேக்காக நடித்துள்ள வினய், ஃபாரூக்காக நடித்துள்ள கரன் தக்கர், ஹஃபிஸாக நடித்துள்ள சஜத் டெலாஃப்ரூஸ் ஆகியோர் கலக்கியுள்ளனர். ஹஃபிஸின் கூர்மையான பார்வைகள், கேள்விகள், எதிராளிகளை மதிப்பிடும் நுண்திறன் ஆகியவற்றை மிகக் கூலாக தன் நடிப்பில் கொண்டு வந்துள்ளார். அந்நிய மண்ணில் வாழும் உளவாளிகளின் காதலைத் தொட்டுவிட்டு, ஆனால் அதைப் பற்றி எதுவுமே காட்டாமல், குழப்பமாக விட்டுள்ளனர். சொந்த நாட்டையும், சுய அடையாளத்தையும் துறந்து, சின்னஞ்சிறு க்ளூக்காக வருடக்கணக்கில் காத்திருக்கும் அவர்களின் மனநிலையைதொ தொடர் சரியாகப் பிரதிபலிக்கவில்லை.

இக்லாக் கான் என்ற மனிதர் உண்மையா பொய்யா எனக் கடைசி அத்தியாயம் வரை விறுவிறுப்புடன் கொண்டு சென்றுள்ளனர். கிடைக்கும் சின்னஞ்சிறு துப்பிற்காகச் செலவிடும் பெரிய தொகையும், செலவழிக்கப்படும் நேரமும் பலமுறை பயனற்றுப் போய்விடும். ஆனால், சரியான சமயத்தில் விசாரிக்கப்படாத க்ளூக்கள் மிகப் பெரிய ஆபத்தைக் கொண்டு வந்துவிடும். ஹிம்மத் சிங்கிற்குக் கடல் வழியாக மும்பையில் நடக்கப் போகும் தாக்குதல் பற்றித் தெரிய வந்தும், அதை ப்ராசஸ் செய்ய இயலாமல் கோட்டை விடுகின்றனர். ‘இன்ட்டலிஜென்ஸ் ஃபெயிலியர்’ என உளவுத்துறை மீது பிற துறைகளின் கைகள் சுலபமாக நீளும்.

உளவுத்துறையின் வேலை என்பது, குப்பைத் தொட்டியில் ஒரே ஒரு கடுகைத் தேடுவது போன்றதாகும். வந்து குவியும் அத்தனை டேட்டாகளில் இருந்து, எது உண்மை, எது பொய்யென அலசி, உண்மையென சந்தேகிக்கும் பட்சத்தில் அதை IB-க்கு அனுப்ப வேண்டும், IB அதை டிகோட் செய்யவேண்டும். அது உப்பு சப்பில்லாத துப்பாக இருந்தால், IB, ரா மீது எரிந்து விழும். துப்பு, உண்மையாக இருக்கும்பட்சத்தில், குண்டுவெடிப்பு போன்ற அசாம்பாவிதம் நிகழும் முன் தடுக்கவேண்டும். இப்படி எல்லாத் துறையின் கூட்டு முயற்சியையும், பதற்றத்தையும், இடையில் ஏற்படும் அரசியல் தலையீடு தரும் எரிச்சலையும் இறுதி அத்தியாயத்தில் உணர முடிகின்றது.