
சிட்டி லைட் பிக்சர்ல், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி” ஆகும். க்ரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, “சுசீந்திரன் அண்ணாவின் முதல் படத்தில் பாடல் எழுதினேன். இடையில் பல காலம் எழுதவில்லை, இப்போது இப்படத்தில் பாடல் எழுதியுள்ளேன். எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும் மிகத் தன்மையான மனிதனாக இமான் இருக்கிறார். இதில் எல்லாப் பாடல்களும் நான் எழுதியுள்ளேன். ஒரு பாடல் மட்டும் யுகபாரதி எழுதியுள்ளார். மனித மனங்களின் உணர்வுகளை மிக ஆழமாகப் பேசுகிறது இந்த ட்ரெய்லர்” என்றார்.
நடிகை வினோதினி வைத்தியநாதன், “இது நன்றி தெரிவிக்கும் மேடை, அறிமுக தயாரிப்பாளர் விக்னேஷ், இந்த வயதில் இப்படி ஒரு கதையைத் தயாரிக்க நினைத்ததற்கு நன்றி. இப்படத்தை முன்னெடுத்துச் செல்லும் தனஞ்செயன் சாருக்கு நன்றி. ஈஸ்வரன் படத்திற்குப் பிறகு, சுசீந்திரன் சாரின் கம்பெனி ஆர்டிஸ்டாக நான் மாறிவிட்டேன். இந்தப் படத்தில் சின்ன கதாபாத்திரம் என்றாலும் மிக நல்ல கதாபாத்திரம். சுசீந்திரன் சார், காதலைக் கையாள்வதைப் பார்க்கப் பிரமிப்பாக இருக்கும். இளமையாக இனிமையாக இப்படத்தில் காதலைக் காட்டியுள்ளார். இமான் இசை, கார்த்திக் நேத்தா வரிகளில் பாடல்கள் இந்தக்கால இளைஞர்களைக் கவரும்” என்றார்.
இயக்குநர் நடிகர் பாக்யராஜ் கண்ணன், “2K கிட்ஸ் படத்தில், நான் 90 கிட்ஸாக நடித்துள்ளேன். சுசி சார் போன் செய்து பிரதர் ஃப்ரீயா எனக் கேட்டார். நடிக்க வரலாமே என்றார். என்னை நம்பிக் கூப்பிடுகிறாரே என உடனே நடிக்கப் போய் விட்டேன். அவ்வளவு அழகாகப் படத்தை எடுத்துள்ளார். இந்தப் படத்திற்கு ஆபிஸே போடவில்லை, என்னை ஸ்டியோவிற்கு கூப்பிட்டு, அங்கு தான் டெஸ்ட் எடுத்தார் இயக்குநர். படம் முழுக்க ஃபன்னாக இருந்தது. விக்னேஷ் பிரதர் இவ்வளவு பெரிய படத்தை, நல்ல கதையை நம்பி எடுத்துள்ளார். சுசி சார் எதோ குளத்து வேலைக்கு ஆள் பிடிப்பது போல், ஆட்களைக் கூட்டிட்டுப்போய் காலை 6 மணிக்கெல்லாம் ஷாட் வைப்பார். பிரேக் பாஸ்ட்டுக்கு முன்னால் ஒரு சீனை முடித்து விடுவார். அதற்குக் காரணம் ஒளிப்பதிவாளர் ஆனந்த் பிரதர் தான். எல்லோரும் கடினமாக உழைத்துள்ளனர்” என்றார்.
நடிகர் பாலசரவணன், “2கே கிட் படத்தில் எனக்கு என்ன வேலை என என் வீட்டிலும் கேட்டார்கள். நான் 2கே கிட்டாக நடிக்கிறேன் என சொல்லவே இல்லை. இப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைக்குமென நான் நினைக்கவே இல்லை. நாயகன் ஜெகவீர் மிக ஆதரவாக இருந்தார். இப்படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார். மீனாட்சி மிக நன்றாக நடித்துள்ளார்” என்றார்.
நடிகர் அருள்தாஸ், “தம்பி சுசி தான் இந்த மேடைக்கு வரக் காரணம். நான் நடிகனானது நான் மகான் அல்ல படத்தில் தான். என் பொருளாதாரம் உயர்ந்து, இந்த நிலைக்கு நல்ல நடிகனாக வரக் காரணம் சுசி தான். அடுத்தடுத்து தொடர்ந்து வாய்ப்பு தந்து, என்னை மக்களிடம் கொண்டு சேர்த்தது, நான் நன்றாக இருக்கக் காரணம் சுசிதான். சுசி எப்போது கூப்பிட்டாலும், எத்தனை சின்ன பாத்திரம் என்றாலும் நான் போய் விடுவேன். சுசிக்குத் தொழில் சுத்தமாகத் தெரியும், அவர் மிகத் திறமைசாலி, அதனால் தான் அவனால் இத்தனை சீக்கிரம் படத்தை முடிக்க முடிகிறது.
சமீபத்தில் பாட்டில் ராதா பட மேடையில் மிஷ்கின் பேசியது மிக ஆபாசமாக இருந்தது. அதைப் பார்த்து மிக வருத்தமாக இருந்தது. தமிழ்த் திரைத்துறை உலகம் முழுக்க மதிக்கக் கூடியது. அதை ஆபாசமாக்கக் கூடாது. அவரை பல மேடைகளில் பார்த்து வருகிறேன். தமிழ் ஆளுமைகள் நிறைந்த மேடையில், மிக அநாகரிகமாகப் பேசியது மிக வருத்தமாக இருந்தது. இயக்குநர் பாலாவை, ஐயா இளையராஜா அவர்களை வாடா போடா என்கிறார். யார் இவர்? எல்லோரையும் வாடா, போடா எனப் பேச? மிஷ்கின் மேடை நாகரீகம் அறிந்து பேச வேண்டும்” என்றார்.
இயக்குநர் எழில், “இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்களும் அத்தனை அற்புதமாக இருந்தது. இத்தனை நடிகர்களை வைத்து, எப்படி இதை எடுத்தார் என ஆச்சரியமாக உள்ளது. 2கே கிட்ஸை வைத்து என்ன கதை சொல்லப் போகிறார் என்கிற ஆவலும் உள்ளது. இன்றைய இளைஞர்களின் உலகம் புதிதாக இருக்கிறது, அதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அதைப் புரிந்து கொண்டு, அவர்கள் உலகத்திற்குள் நுழைந்து, அடுத்த கட்டத்திற்கு ஒரு படத்தைச் செய்துள்ளார் சுசீந்திரன்” என்றார்.
இசையமைப்பாளர் இமான், “சுசி சாருடன் இது எனக்கு 9 ஆவது படம். ஒரு இயக்குநருடன் நான் தொடர்ந்து படங்கள் செய்வேன். ஆனால் அது ஒரே மாதிரி படமாகத்தான் இருக்கும், ஆனால் சுசி சார் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஜானரில் அசத்துவார். இந்தப் படத்தில் 2கே கிட்ஸ் உலகத்தை மிக இயல்பாக அழகாகக் காட்டியுள்ளார். எல்லோரும் ரசிக்கும்படியான படமாக இப்படம் இருக்கும். இந்தத் தலைமுறை இளைஞர்களிடம் உரையாடி, அவர்களின் உலகைக் காட்சிப்படுத்தியுள்ளார். கேமரா மிக உயர்தரமாகக் காட்சிகளைக் காட்சிப்படுத்தியுள்ளது. விஷுவல் நன்றாக இருக்கும் போது தான், இசையும் நன்றாக வரும். பாடல்கள் மிக இளமையாக வந்துள்ளது. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவிற்கு என் நன்றி. இப்படத்தின் இசை முதல் முறையாக என் ஆடியோ லேபிள் நிறுவனம் மூலம் வருகிறது” என்றார் மகிழ்ச்சியாக.