Shadow

பாட்டல் ராதா விமர்சனம்

குடி நோய், ஒரு மனிதனை என்ன செய்யும், அவன் என்னென்னவெல்லாம் இழக்கிறான் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது படம். இது மற்ற நோய்களைப் போல் உடற்பாதிப்பையும், மன அழுத்தத்தையும், பொருளாதாரத்தையும் மட்டும் காவு வாங்காமல், அவற்றோடு சேர்த்து சமூகத்தில் மதிப்பையும் மரியாதையையும் மொத்தமாகக் காலி செய்துவிடும். அனைவராலும் ஒதுக்கப்படும் ஈனநிலைக்குத் தள்ளிவிடும். அப்படித் தள்ளப்படும் பாட்டல் ராதா என பெயரைப் பெற்ற ராதாமணியின் வீழ்ச்சியும் மீட்சியும்தான் படத்தின் கதை.

குடி நோயாளி வீட்டுக் குழந்தைகளின் கண்களில் தெரியும் பாரத்தை எதிர்கொள்வது மிகவும் கடினம். அந்த சிறிய மனங்கள் சுமக்கும் வலி மிகக் கொடுமையானது. ராதாமணியின் மகளை, ‘பாட்டல்’ என்ற பட்டப்பெயரில் அழைத்து, அச்சிறுமியைத் தனிமையில் தள்ளி விடுகின்றனர். ஓடி ஆடி விளையாட வேண்டிய பருவத்தில் நட்பில்லாமல் தனிமைப்படுத்திக் கொள்ளும் அவலம் எச்சிறார்க்கும் நிகழக்கூடாதது. ஒரு குழந்தையின் அகத்தைக் கொல்பவர்கள் என்றேனும் மீட்சி அடையலாம், ஆனால் அக்குழந்தையின் மனதில் தேங்கிவிடும் ஆறாத வடு அதற்குள் போதுமான பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

லொள்ளு சபா மாறன் படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளார். அவரது கமென்ட்கள் திரையரங்கில் சிரிப்பொலிக்கு உத்திரவாதமளிக்கிறது. படத்தின் முதற்பாதி மிகவும் கலகலப்பாகத் தொடங்குகிறது. போதை மீட்பு மையத்தில் இருந்து காட்சிகள் வெளிவந்து, நாயகன் குற்றவுணர்வுக்கு ஆளாகும் வரை படம் சற்றே தேக்கநிலைக்குச் செல்கிறது. குடிகாரராகப் பிரமாதமாக நடித்துள்ளார் குரு சோமசுந்தரம். வார்த்தைகளால் சுட்டுப் பொசுக்கப்படும்போது எழும் இயலாமையையும் அழுவாத்திரத்தையும் அழகாகத் தனது நடிப்பில் கொண்டு வந்துள்ளார் சஞ்சனா.

நாயகனின் குடியிருப்பு ஏரியை ஒட்டி அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜி, ஏரியைப் பறவைக் கோணத்தில் இருந்து, வெவ்வேறு கோணங்களிலும் ஒளியளவிலும் அழகாகக் காட்சிப்படுத்தப்படுத்தியுள்ளார். ஷான் ரோல்டனின் பின்னணி இசை குடிகாரரின் கொண்டாட்டத்தையும், அக்குடும்பத்தாரின் வேதனையையும் பிரதிபலிக்க உதவியுள்ளது.

போதை மீட்பு மையத்தை நடத்தும் அஷோக்காக ஜான் விஜய் நடித்துள்ளார். இப்படத்தின் நாயகன் என்றே அவரைச் சொல்லலாம். வழக்கமான அவரது பாணியைக் குறைத்து, இந்தக் கதாபாத்திரத்திற்கான துல்லியமான அளவு நடிப்பை ஜான் விஜயிடமிருந்து பெற்றுள்ளார் இயக்குநர் தினகரன் சிவலிங்கம். படம் சுபமாக முடிந்தாலும், போதை மீட்பு மையங்கள் குடிகாரரை வழிக்குக் கொண்டு வருவதற்காகக் காட்டும் கண்டிப்பை அச்சுறுத்தும் அளவிற்கு இடைவேளையில் கொண்டு போயிருக்கவேண்டாம். படத்திற்கு அது சுவாரசியத்தைக் கூட்டி, இரண்டாம் பாதியில் அதை அழகாக நேசபாவத்துடன் முடித்திருந்தாலும், இந்தப் படத்திற்கான மைய நோக்கத்தைக் கேள்விக்குறியாக்குவதாக அமைந்துள்ளது. உளப்பூர்வமாகக் குடிநோயில் இருந்து மீள நினைப்பவர்களுக்கு, குடி மீட்பு மையம் பற்றிய பதற்றத்தையே இத்தகைய காட்சிகள் விளைவிக்கும்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, குடி நோய்க்கும், போதை பழக்கத்திற்கு அடிமையாதலுக்கும் எதிரான விவாதங்கள் அதிகளவில் சமூகத்தில் தேவைப்படுகிறது. அவ்வகையில், இப்படம் சரியான நேரத்தில் வந்துள்ள முக்கியமான படமாகிறது.

(பாட்டல் ராதா ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் என ஃபேமிலி டிராமாவாகப் பயணிக்கிறது. பத்து வருடங்களுக்கு முன் வந்த திறந்திடு சீசே எனும் படம், இதே கருவை த்ரில்லராக வழங்கியிருந்து).