
‘கோதி பண்ணா சாதார்ணா மைக்கட்டு (Godhi Banana Sadharna Mykattu)’ என்ற படம் கன்னடத்தில், 2016 இல் வெளிவந்தது. ‘கோதுமை நிறம் சாதாரண உடற்கட்டு’ என்பது அந்தக் கன்னடப்படத் தலைப்பின் பொருள். இயக்குநர் ராதாமோகன், ’60 வயது மாநிறம்’ எனத் தமிழில் மீள் உருவாக்கம் செய்துள்ளார்.
அல்சைமர் நோயால் பாதிக்கப்படும் 60 வயது கோவிந்தராஜ் காணாமல் போய்விடுகிறார். அவரையொரு பராமரிப்பு இல்லத்தில் சேர்த்துவிட்டிருக்கும் அவரது மகன் சிவா, தனது அலட்சியத்தால் தந்தையைத் தொலைத்துவிட்டோமெனத் தேடி அலைகிறான். சிவாவின் தந்தை எங்குப் போனார், எப்படிக் கிடைத்தார் என்பதுதான் படத்தின் கதை.
ராதாமோகன் மீண்டும் ஒருமுறை தன் மேஜிக்கை நிகழ்த்திக் காட்டியுள்ளார். ராதாமோகனின் ஆஸ்தான நடிகரான குமரவேல் அறிமுகமான நொடி முதல் படம் கலகலப்பாகிறது. கொலைக்காரர்களான சமுத்திரக்கனியிடமும், அவரது அசிஸ்டென்ட்டிடமும் மாட்டிக் கொள்ளும் குமரவேலின் கவுன்ட்டர்கள் அட்டகாசம். விஜியின் வசனங்கள் படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளதோடு, அன்பு, நேசித்தல், குடும்பம் முதலியவற்றின் மீதான நம்பிக்கையையும் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
‘நம்ம ஒவ்வொருத்தருக்குள்ளும் வெள்ளை நாய், கருப்பு நாய் என இரண்டிருக்கும். அது உள்ளுக்குள் எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருக்கும். இதுல எந்த நாய் ஜெயிக்கும் தெரியுமா?’ எனக் கேட்டு, அதற்கான பதிலை மறந்துவிடுகிறார் கோவிந்தராஜ். பிரகாஷ்ராஜ், மறதியால் பாதிக்கப்பட்ட கோவிந்தராஜ் கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார். படத்தை அழகாக்குவது, மனிதர்களின் மனமாற்றங்களே! அமெரக்க வேலைக்கு அதிக முக்கியத்துவம் தரும் சிவா, தந்தையைப் பிரிந்து தவிக்கும் நேரத்தில் அவரைப் புரிந்து கொள்கிறான். கேள்விகளின்றிக் கொலை செய்யப் பழக்கப்பட்ட, சமுத்திரக்கனிக்குள் நிகழும் மாற்றம் கவனிக்கத்தக்கது. சமுத்திரக்கனி கோபத்தில் கொலை செய்ய முயலும் பொழுது, ‘சிவா, எந்த நாய் ஜெயிக்கும் தெரியுமா?’ என்று திடீரென ஞாபகம் வந்து கேட்கும் இடம் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன. அவரது அந்தப் பதில்தான் படத்தின் மையக்கரு.
மருத்துவர் அர்ச்சனாவாக இந்துஜாவும், தந்தையைத் தொலைத்துவிடும் சிவாவாக விக்ரம் பிரபுவும் நடித்துள்ளனர். அவர்களுக்குள் மெல்ல மலரும் காதலை, இன்னும் கவித்துவமாகக் காட்சிப்படுத்தியிருக்கலாம் ஒளிப்பதிவாளர் விவேகானந்த். உறவுகளைப் பிரதானப்படுத்தும் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார் இளையராஜா.
கலகலப்பாக்குவதோடு, அதே சமயம் மனதையும் கனக்க வைக்கிறது 60 வயது மாநிறம். நிறைவைத் தரும் ஃபீல் குட் படத்திற்கு உத்திரவாதமளித்துள்ளார் இயக்குநர் ராதாமோகன்.