Shadow

90 ML விமர்சனம்

90ML-movie-review

தமிழில் வந்துள்ள மிக முக்கியமான படம். இப்படியொரு படம் வருவது மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே அளிக்கிறது.

தண்ணியடிப்பது, தண்ணியடித்துவிட்டுக் காதலியிடம் காதலின் மாண்பையும் மகத்துவத்தையும் பிதற்றுவது, காதலியின் வீட்டிற்குச் சென்று கலாட்டா செய்வது, காதலியின் அப்பாவை ஒருமையில் பேசுவது, ஆற்றோரத்திலோ கடலோரத்திலோ ‘பொண்ணுங்கள லவ் பண்ணக்கூடாது’ என போதையில் நண்பர்களுக்குப் போதிப்பது என்பதெல்லாம் தமிழ்ப்பட நாயகர்கள் காலந்தோறும் கடைபிடித்து வரும் கலாச்சாரம். வாரத்துக்கு ஒரு படமாவது, பாரில் குத்துப்பாட்டு இல்லாமல் வருவதில்லை. சிகரெட் பிடிப்பது ஹீரோயிசம், தண்ணியடிப்பது ஆண்களின் பிறப்புரிமை என்பது சமூகத்தில் அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது.

ஆனால், பெண்கள் குடித்தால் மட்டும் கலாச்சாரம் என்னாவது என்ற பதற்றம் ஆண்களுக்குத் தொற்றிக் கொள்கிறது. ஆண்கள் குடிப்பது தவறில்லை; பெண்கள் குடித்தால் மட்டும் உலகம் அழிந்துவிடும் – அது மனித குல நாசத்திற்கு வழிவகுக்கும் என்ற சார்புப்பதற்றம் உடையவர்களுக்கான படமில்லை இது.

படத்தில், பெண்கள் குடித்துக் கொண்டேயிருப்பது போல் ஒரு தோற்றம் தோன்றுகிறது. ஆனால், ஒரு வருடத்தில் நான்கே முறைதான் கெட்-டுகெதர் செய்து பார்ட்டி செய்கிறார்கள். அதில் நான்காவது ரெளண்டான ‘மரணமட்ட’-இல், குடிக்காமல் ஹெல்த் கான்ஷியஸ் ஆகித் திருந்தியும் விடுகிறார்கள். கிளப்பில் தன்னை மறந்து மகிழ்ச்சியாக நடனம் மட்டுமே ஆடுகிறார்கள்.

திரைப்படங்களில், ஆண்கள் குடிக்கும் ஒவ்வொரு முறையும் குடித்துவிட்டு ஏதேனும் பிரச்சனையில் சிக்கிக் கொள்வார்கள். ஆனால், இந்தப் பெண்கள் ஒன்றாய்ச் சேர்ந்து குடிக்கும் மூன்று முறையும், தங்கள் தோழிகளின் பிரச்சனைக்குத் தீர்வு காண்கிறார்கள். அதில் முக்கியமானது, அரசு செக்‌ஷன் 377 சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தும், அதை அங்கீகரிக்கத் தயங்கும் பெற்றோர்களிடம் ஓவியா பேசிப் புரியவைப்பது. அழகிய அசுராவான இயக்குநர் அனிதா உதீப்க்கு வாழ்த்துகள். பெரியார் பிறந்த மண், பகுத்தறிவில் முன்னகர்ந்த இந்திய மாநிலம் எனப் பெருமைப்பட்டுக் கொண்டாலும், சாதீயம் போன்ற பிற்போக்குத்தனம் முற்றிலுமாகத் தமிழ்நாட்டில் விலகியபாடில்லை. அதிலும் பெண்களை ஒடுக்க என்றால், கொள்கைகளால் பிரிந்திருப்பவர்கள் கூடக் கலாச்சாரத்தைக் காக்க ஒன்றிணைந்து கொள்வார்கள். எதற்கும் அலட்டிக்காத அனிதா உதீப்பின் தைரியத்திற்குச் சிரம்தாழ்ந்த வணக்கங்கள். சிலம்பரசனின் இசை இந்தப் படத்திற்கு நல்லதொரு அடையாளமாகத் திகழ்கிறது.

கலாச்சாரத்தை ஆண்கள் எப்படிக் காப்பார்கள் என்றால், விருப்பமில்லாத கல்யாணத்தை அம்மாவின் வற்புறுத்துலுக்காகச் செய்து கொண்டு காப்பாற்றுவார்கள். ஆனால், ஆண்களைக் கோழைகளாகச் சித்தரித்துவிடக்கூடாது. ஏனெனில் பழைய காதலியை மறக்க முடியாமல் உள்ளுக்குள் உருகும் உத்தமர்கள் அவர்கள். ‘ப்பாஆஆ.. எவ்ளோ நல்லவன்?’ என அந்தக் கோழையைக் கொண்டாடவேண்டும். அவனைப் பொறுத்துக் கொள்ள வேண்டியது மனைவியின் கடமையாக இருக்கவேண்டும் என்பது தான கலாச்சாரமாக இருந்துவருகிறது. ஆனால், தனி மனிதனை விட சமூகம் முக்கியமில்லை என்ற rebellious character ரீட்டாவாக ஓவியா நடித்துள்ளார். அவரது வாழ்க்கை எப்படியிருக்கவேண்டும் என்ற முடிவை அவர் மட்டும் எடுக்கிறார்.

முடிவை எடுக்கும் உரிமையை ஒரு தனி மனிதனுக்கு, இந்தக் குடும்ப அமைப்பு என்றுமே வழங்குவதில்லை. தனி மனிதனின் விருப்பு, வெறுப்பைப் பொருட்படுத்தாத கோரமனம் கொண்டது குடும்ப அமைப்பு. சாதி, மத, இனப் பெருமை, கெளரவம், சமூக அந்தஸ்து, பொருளாதாரம் என ஆயிரம் காரணங்களைத் தனி மனிதன் முன் வீசி, அவனை அடிப்பணிய வைத்துவிடும் குடும்ப அமைப்பு. வீட்டிற்குள் நுண்ணியமாகத் தொடங்கும் குடும்ப வன்முறை, கெளரவக் கொலை என எந்தளவுக்கும் செல்லக்கூடியது. சமூகத்திற்காக வாழும் போக்கினை உடையது குடும்ப அமைப்பு. ஒரு தனிமனிதனுக்கு, இந்த வன்முறையான குடும்ப அமைப்பில் இருந்து வெளிவந்து தனக்காக மட்டுமே வாழும் சுதந்திரம் இல்லையா? சுதந்திர விரும்பியான ரீட்டா அப்படியொரு பெண்தான். ஆனால், குடும்ப அமைப்பில் பிணைப்புடன் இருக்க விரும்பும் தாமரை, பார்வதி, சுகன்யா ஆகியோருக்கு அந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகிறார் ஓவியா. குடும்ப அமைப்பிற்குள் தன்னைப் பிணைத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு உதவுகிறார். மசூம் ஷங்கர்க்குப் பொருளாதாரச்ச் சுதந்திரத்திற்கும் வழி வகுக்கிறார்.

தன் வாழ்க்கையைத் தன் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்துக் கொள்ளும் உரிமை ஒவ்வொரு தனிமனிதருக்கும் உண்டு; அம்மனிதர்களில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் அடக்கம் என்பதுதான் 90 எம்.எல். முன்வைக்கும் அழுத்தமான பார்வை.