Shadow

திருமணம் விமர்சனம்

Thirumanam-movie-review

வாழ்நாள் சம்பாத்தியத்தைக் கல்யாணத்தில் சுலபமாக இழந்துவிடுவது நம் பெருமைகளில் ஒன்று. கையில் பணமில்லாவிட்டாலும், பணத்தை எப்படியேனும் புரட்டி வாழ்நாளைக் கடனாளியாகக் கழிக்க அஞ்சாத தற்கொலை மனோபாவம் இல்லாத நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் மிகவும் அரிதானவை.

சேரன் முன் வைக்கும் திருத்தம், திருமண வைபவத்தில் அதீதமாக விரயமாகும் பொருளாதாரத்தைத் தவிர்க்கலாம் என்ற ஒன்றை மட்டுந்தான். தலைப்பில் தொனிக்கும் திருத்தங்’கள்’ என்ற பன்மை விகுதி ஒரு சினிமாட்டிக் எக்ஸாகிரேஷன் தான்.

சமூகத்தின் மீதான சேரனின் அதீத காதல் அவரது கலையார்வத்தையும் மிஞ்சிவிட்டது என்றே சொல்லவேண்டும். பெரியண்ணன் பாவனையில், தலைப்பிலேயே ‘திருத்தங்கள்’ என்று தன் சமூக அக்கறையை அடக்கமாட்டாமல் வெளிப்படுத்தியுள்ளார். சேரன் பேசிக் கொண்டேயிருக்கிறார். மாப்பிள்ளை வீட்டாரிடம் விவாதத்தை முன் வைக்காமல், இதுதான் சரியெனத் தான் நம்பும் விஷயத்தை இடம் பொருள் ஏவல் குறித்த லஜ்ஜையின்றி அறிவுடைநம்பி பேசிக் கொண்டே இருக்கிறார். வெட்டிங் கார்ட் டிசைன் தேர்ந்தெடுக்கக் குடும்பத்தோடு கடைக்குச் செல்லும் சேரன், அந்தக் கடை உரிமையாளரை முன்னால் நிறுத்திக் கொண்டு, ‘கல்யாண அழைப்பிதழில் எவ்ளோ செலவாகுது தெரியுமா?’ எனப் பாடம் எடுக்கிறார். அவரது அக்கறை புரிந்தாலும், ஜமீன் குடும்பத்தின் ஈகோவின் மீது முக தாட்சண்யமின்றி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்தவண்ணமே உள்ளார்.

ஒரு கட்டத்தில் கடுப்பாகும் மனோன்மணியாக வரும் சுகன்யா, மணப்பெண்ணை மட்டும் அனுப்பினால் போதும் என்கிறார் கோபமாக. செலவே இல்லாமல் ஜமீன் வீட்டுக்குத் தன் தங்கையை அனுப்பும் வாய்ப்பு கிடைத்தும், சேரன் தன் பிடிவாதத்தைத் தளர்த்துகிறார் இல்லை. ‘அண்ணனும் அம்மாவும் தான் முக்கியம். அதுக்காக தங்கச்சி தன் ஆசையைத் தூக்கிப் போட்டுடுச்சு. நாம கொஞ்சம் இறங்கி வர வேண்டாமா?’ என தம்பி ராமையா தான் சேரனைச் சமாதானப்படுத்துகிறார். சேரனால், ‘நானென்ன தப்பு செஞ்சேன்?’ என்று மட்டுமே கேட்க இயலுகிறது. தங்கையின் வாழ்க்கை, அவளது காதல் எல்லாம் சேரனுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. பொருளாதாரத்தை எப்படி உபயோகமாகச் செலவு செய்வது என்று மட்டுமே சதாசர்வ காலமும் அவரது சிந்தனை.

தங்கை வாழப் போகும் புது வீட்டின் மனிதர்களை ஆதுரமாகப் பார்க்காமல், ‘நீங்க பணக்காரங்க தான்; ஆனா நாங்க பணக்காரங்க இல்லையே!’ என்றே தொடர்ந்து சொல்கிறார். சேரனின் திருத்தம், மனிதரை அகம் சார்ந்து எப்படி அரவணைத்துக் கொள்வது, புரிந்து கொள்வது என்றில்லாமல், பொருளாதாரம் சார்ந்த ஒற்றைப் பரிமாணத்தில் இறுகிப் போகிறது.

காட்சிகள் இயல்பாய் நகரவில்லை. ‘வீட்டிலுள்ள பெண்களின் பேராசை தான் ஆண்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது’ என்று மிக அழுத்தமாகப் பதிகிறார். ‘கல்யாணத்திற்காக அநாவசிய செலவு செய்வதில்லை விருப்பமில்லை. ஆனால், தங்கையின் வாழ்விற்கான முதலீடாக 35 லட்சம் தரத் தயார்’ என்பதை வெளிப்படையாக உறவுகளிடம் பேச விரும்பாதவராய் சேரன். எதையும் தனிக்காட்டு ராஜாவாக முடிவு செல்கிறார். தன் தங்கையிடம் எது பற்றியும் யோசனை கேட்பதில்லை. ‘கல்யாணம் என்பது தர்மம்’ என சேரனின் அம்மா சீமா நாயர் அழகாக விளக்குவதை, ‘அந்தத் தர்மம் பணக்காரர்களுக்குத்தான்’ என மறுக்கிறார். மேலும், சுகன்யாவின் குடும்பம் பணக்காரக் குடும்பம், அவர்களுக்கு அந்தத் தர்மத்தைக் கடைபிடிக்கும் உரிமையுண்டு என்பதையும் ஏற்க மறுக்கிறார். ‘தான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால்’ என்ற பிடிவாதக்கார குணமுடைய சேரனின் மனப்போக்கை, தன் தம்பியின் மகிழ்ச்சிக்காகப் பொறுத்துக் கொள்கிறார் சுகன்யா.

இரு குடும்பங்கள் ஒன்றோடு ஒன்று பிணைய, சேரனைப் போல் பிடிவாதமாக இல்லாமல், சுகன்யா போல் விட்டுக் கொடுத்துப் போகவேண்டும் என்பதுதான் படம் உணர்த்தும் உண்மையான திருத்தம். அப்படி ஒரு பிணைப்பினை உணர்த்தும் காட்சி படத்தின் இரண்டாம் பாதியில் சருகிறது. எம்.எஸ்.பாஸ்கரும், தம்பி ராமையாவும் தங்கள் குடும்பங்களைப் பற்றிப் பேசிக் கொள்ளும் காட்சி மிக அற்புதமாக உள்ளது. இடம், பொருள், ஏவல் பார்த்துக் குரலை உயர்த்தாமல், சரியான சமயத்தில் நிதானமாகப் பேசினால், புரிதலின்மையும் மனஸ்தாபங்களும் விலகும் என்பது சேரன் சொல்ல முனையாத இரண்டாவது திருத்தம்.