32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஆருத்ரா – பெற்றோர்களே சிறுமிகளுக்கு அரண்

Dinesh R சேலம் Published: 12/08/2018 3 நிமிட வாசிப்பு Updated: 25/08/2018 சினிமா
எழுத்து அளவு:

Aaruthra-Pa.Vijay

வில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா.விஜய் நாயகனாக நடித்துத் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்தப் படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா.விஜய் பேசுகையில், “இரண்டு வருட உழைப்பில் உருவாகியிருக்கிறது இந்த ஆருத்ரா. 1996 ஆம் ஆண்டில் என்னுடைய குருநாதர் கே.பாக்யராஜ் அவர்களின் ஆசியுடன் ஞானப்பழம் என்ற படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகமானேன். இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு பிறகும், கடந்த வாரம் வெளியான மோகினி என்ற படத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறேன். அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன” என்ற படத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறேன். கவியரசு கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற பிரம்மாண்டமான பாடலாசிரியர்கள் வாழும் இந்தத் திரையுலகில் 22 ஆண்டு பயணமென்பது எளிதானதல்ல. இதற்குக் காரணமான என்னுடைய குருவிற்கும், ஆதரவளித்து அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய தேதியில் படம் தயாரிப்பதை விட, அந்தப் படத்தை நல்லமுறையில் ரசிகர்களைச் சென்றடைய வைப்பது சவாலான காரியமாகும். அந்த விசயத்தில் எனக்குப் பேருதவி புரிந்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மற்றும் ஹேமா ருக்மணி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போதுள்ள சூழலில் ஒரு படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் சந்திக்கும் அவலங்கள் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. பணம் இங்கு ஒரு பிரச்சினையல்ல. அதனை யாரிடமாவது கடன் வாங்கிவிடலாம். ஆனால் ஒரு படத்தைத் தயாரிப்பதற்குத் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் சவால்கள்,நெருக்கடிகள் அதிகம். இது குறித்து விரிவான விவாதம் நடத்தப்படவேண்டும்.

இந்தப் படத்தின் கதையைப் பற்றி ஒரிரு வரிகளில் சொல்லவேண்டும் என்றால், ‘கருவறைக்குள் இருக்கும் பெண்குழந்தைக்கு கூடப் பாதுகாப்பில்லாத வெறியர்கள் இருக்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அரசு, சட்டம், காவல் துறை எதுவும் துணைக்கு வராது. இம்மூன்றுமாக பெற்றோர்களாகிய நாம் மாறினால் தான் நம்முடைய பெண் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்’ என்ற விசயத்தை தான் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறேன்.

இன்றைய சமூகத்தில் இளஞ்சிறுமிகள் மீது திணிக்கப்படும் பாலியல் வன்முறை என்பது உலகளவில் இந்தியா பற்றிய ஒரு தவறான பார்வையைப் பதிவு செய்திருக்கிறது.

சேலம் மாவட்டத்தில் கொல்லிமலை என்ற பகுதியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு தான் இந்த கதையை எழுதினோம். நிர்பயா, ஆசிஃபா, ஹாசினி, அயனாவரம் சிறுமி என இந்தக் களையப்படவேண்டிய குற்றங்கள் தொடரும் இந்த சமயத்தில் இந்தப் படம் வெளியாவது பொருத்தமானது என்று நினைக்கிறேன். இது போன்ற சம்பவத்தின் பின்னணியில் பெற்றோர்களின் பங்களிப்பும் இருக்கிறது என்பதை நான் நேரடியாக உணர்ந்தேன். ஏனெனில் நகரம் சார்ந்த பகுதிகளில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைக் கண்காணிப்பதை விட கையில் இருக்கும் செல்ஃபோனில் வாட்ஸ்அப்பைப் பார்வையிடுவதற்காகத் தலைகுனிந்து இருக்கும் நேரத்தை அதிகமாக செலவிடுகிறார்கள்.

இந்தப் படத்தினை தணிக்கை செய்வதற்காகத் தணிக்கைக் குழு அதிகாரிகள் பார்த்தனர். பார்த்து முடிந்தவுடன் பொதுவாக பத்து அல்லது பதினைந்து நிமிடத்தில் இயக்குநரை அழைத்து என்ன சான்றிதழ் என்று சொல்வார்கள். ஆனால் நாங்கள் வெளியே காத்திருக்கிறோம். அரை மணி நேரம் ஆகிவிட்டது. அதற்குப் பிறகும் அழைப்பு வரவில்லை. பிறகு அழைப்பு வந்தது. சென்றோம். ஆனால் அவர்கள் எதையும் பேசவில்லை. அவர்களிடம் யூ, யூ/ஏ, ஏ என எந்த சான்றிதழ் தரபோகிறீர்கள் என்ற கேட்டேன். எதுவும் பதிலளிக்காமல் ரீவைசிங் கமிட்டிக்கு பரிந்துரைத்தார்கள். பிறகு அவர்கள் பார்த்து, ஒரு சில காட்சிகளில் உள்ள வன்முறையை மட்டும் குறைத்துக் கொண்டு யூ/ஏ என்ற சான்றிதழ் அளித்தார்கள். ஆனால் மிகச்சிறந்த பதிவு என்று வாழ்த்தினார்கள். இதுவே படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.