32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“என்னை விடச் சிறந்த நடிகர்…” – சிவக்குமார் | RETRO

Dinesh R சேலம் Published: 20/04/2025 3 நிமிட வாசிப்பு Updated: 22/04/2025 சினிமா
எழுத்து அளவு:

சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரத்தியேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களுடன் படக் குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ், ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் ஆக்சன் எண்டர்டெய்னராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இவ்விழாவில் பேசிய நடிகர் சிவகுமார், “சூர்யாவுக்கு 17 வயசு. செயின்ட் பீட்ஸ் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது எங்கள் வீட்டிற்கு உறவினரான ஒரு ஜோதிடர் வந்தார். எனது இரண்டு மகன்களின் ஜாதகத்தையும் கேட்டார். இரண்டு மகன்களின் ஜாதகத்தையும் பார்த்த பிறகு, உங்களுடைய மகன் கலைதுறையில் மிக உச்சத்திற்கு வருவார் எனச் சொன்னார். ‘சூர்யாவா? கார்த்தியா?’ என கேட்டேன். அவர் பெரியவன் சூர்யா தான் என்று சொன்னார்.

‘காலையிலிருந்து மாலை வரை மொத்தமாகவே நான்கு வார்த்தை தான் பேசுவான் சூர்யா. அவன் கலைத்துறையில் வெற்றி பெறுவான் என்கிறீர்களே!’ என்றேன். அதன் பிறகு, ‘இயக்குநராக வருவாரா? ஒளிப்பதிவாளராக வருவாரா?’ எனக் கேட்டபோது, ‘இல்லை முகத்தைத் தொழிலாகக் கொண்டிருப்பார்’ என்றார். அப்போது நான், ‘நடிகராக வருவாரா?’ எனக் கேட்டபோது, அவர் ‘ஆம்’ என்றார். ‘அதுமட்டுமல்ல உங்களை விடச் சிறந்த நடிகர் என்ற பெயரையும் சம்பாதிப்பார். உங்களைவிட நிறைய விருதுகளையும் வாங்குவார். உங்களைவிட நிறைய சம்பாதிப்பார்’ என்றார். சூர்யாவே இதைக் கேட்டுவிட்டு சின்ன புன்னகையுடன் கடந்து சென்று விட்டார்.

அதன் பிறகு லயோலா கல்லூரியில் இணைந்தார். அதன் பிறகு தனியார் கம்பெனியில் வேலை செய்தார். அந்தத் தருணத்தில் நாங்கள் ஒரு கலை விழா நிகழ்ச்சிக்காக மலேசியாவிற்குச் சென்றோம். அப்போது இயக்குநர் வசந்தும் உடன் வந்தார். அதன் பிறகு சென்னை விமான நிலையத்தில் வைத்து ஒரு முறை இயக்குநர் வசந்த் சூர்யாவைப் பார்த்திருக்கிறார். இரண்டு நாள் கழித்து, இயக்குநர் வசந்த் எனக்கு ஃபோன் செய்து, ‘உங்க பையன் சூர்யாவிற்கு சினிமாவில் நடிப்பதற்கு ஆசை இருக்கிறதா?’ எனக் கேட்டார். ‘இல்லை’ என்று நான் சொல்லிவிட்டேன். ‘நான் அவரிடம் பேசலாமா?’ எனக் கேட்டார். அதன் பிறகு இயக்குநர் வசந்த் சூர்யாவை நேரில் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு அவருக்கு மேக்கப் டெஸ்ட் நடைபெற்றது. ‘நேருக்கு நேர்’ படம் வெளியானது. அதில் இடம்பெறும் ஒரு பாடலில் சூர்யாவின் க்ளோஸ்-அப் காட்சி இருந்தது. அந்தக் காட்சியில் தெரிந்த சூர்யாவின் கண்களைப் பார்த்த இயக்குநர் ஒருவர், ‘இது தமிழ்நாட்டின் வாழும் பெண்களின் தூக்கத்தைக் கெடுக்கும்’ எனக் குறிப்பிட்டார். சினிமாவைப் பற்றிக் கனவில் கூட நினைக்காத சூர்யாவை இன்று நடிகராக உயர்த்திய இயக்குநர் மணிரத்னத்தையும், இயக்குநர் வசந்தையும் பாதம் தொட்டு வணங்குகிறேன். அதன் பிறகு இயக்குநர் பாலா, ‘நந்தா’ என்றொரு படத்தைக் கொடுத்து, சூர்யா சிறந்த நடிகர் என்பதை நிரூபித்தார். அவருக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வீட்டில் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் நடனமாடுவார். அதன் பிறகு நான்கு மணிக்கு எழுந்து கடற்கரைக்குச் சென்று உடற்பயிற்சியில் ஈடுபடுவார். சூர்யாவிற்கு முன் சிக்ஸ்பேக் வைத்துக் கொண்ட நடிகர் யாருமில்லை. தற்போது 28 வருடமாகிவிட்டது. இவரை உருவாக்கிய அனைத்து இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ரெட்ரோ திரைப்படம், எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.