

ஜீ5 -இல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தடயம் இணைய தொடர் வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
தமிழில் உருவாகும் க்ரைம் த்ரில்லர் கதைகளிலிருந்து மாறுபட்டு, உண்மைச் சம்பவங்களின் பின்னணியுடன், பரபரப்பும் மர்மமும் நிறைந்த அனுபவத்தை வழங்கும் இந்தத் தொடர், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இவ்வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வினில், ஜீ5 சார்பில் பேசிய கௌஷிக் நரசிம்மன், “பொதுவாக ஒரு சீரிஸ் வெளியான பிறகு, அதன் முழு வரவேற்பையும் பல வாரங்கள் கடந்த பிறகுதான் நாம் பார்க்க முடியும். ஆனால் தடயம் சீரிஸில், இன்னும் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அதுவும் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை எட்டியுள்ளது. இது மிகப் பெரிய சாதனை என்று நான் நினைக்கிறேன்.
இதற்கு முன்பு ஜீ5 தளத்தில் பல சீரிஸ்கள் வெளியானது. விலங்கு, அயலி போன்ற சீரிஸ்கள் நல்ல வரவேற்பைப் பெற்றவை. ஆனால் அவற்றை ஒப்பிடும்போது மிகக் குறுகிய காலத்திலேயே இந்த அளவிலான பார்வை நிமிடங்களை ‘தடயம்’ எட்டியுள்ளது. ஒரு வாரத்திலேயே இப்படிப்பட்ட சாதனைகள் உருவாகியுள்ளது என்பது மிகப்பெரிய விஷயம்” என்றார்.
இயக்குநர் நவீன்குமார் பழனிவேல், “இந்த சீரிஸில் பல முக்கிய தருணங்களில் இசை மிகவும் பெரிய பலமாக இருந்தது. அதேபோல் எங்களுடன் பணியாற்றிய அனைத்து துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் என் டீம் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. குறைந்த காலக்கெடுவில் — சுமார் 20 நாட்களுக்குள் — இந்தப் பணியை முடிக்க வேண்டிய சூழல் இருந்தது. அதனால் சில நேரங்களில் நான் கடுமையாக நடந்துகொண்டிருக்கலாம். அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இருந்தாலும் நீங்கள் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்தப் படைப்பை முடித்ததற்கு நன்றி. சில குறைகள் இருந்தால் அதை அடுத்த படைப்புகளில் சரி செய்து இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன்” என்றார்.
தொடரில் வில்லனாக நடித்த ராஜ் திரன்தாஸ், “இந்த அளவிலான வரவேற்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையில் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பாராட்டுs செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன” என்றார் மகிழ்ச்சியாக.
சமுத்திரகனி, “ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடி ஏங்கிக்கொண்டே இருக்கும். ‘தடயம்’ அந்த நிறைவை மிகவும் ஆழமாக மனசுக்குள் கொண்டு வந்து பல விஷயங்களை சரி செய்த மாதிரி உணர்வைத் தருகிறது. அதுதான் இந்த வெற்றியின் மகிழ்ச்சி. நான் சின்னத்திரையில் கிட்டத்தட்ட 3000 எபிசோடுகள் இயக்கியிருக்கிறேன். ஆனால் அந்தப் பயணத்தில் இவ்வளவு நேர்மையாகப் பாராட்டுகளைக் கேட்கும் வாய்ப்பு அரிது. இன்று அந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது. அவரும், அஜய், நவீன், KK சார் உள்ளிட்ட பலர் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறார்கள். அனைவரின் உழைப்பும் சேர்ந்து தான் இந்த வெற்றியை கொடுத்திருக்கிறது. ஒரு அப்பாவிடம் இருந்து பிள்ளைக்கு கிடைக்கும் அங்கீகாரம் மிகப் பெரிய விஷயம். அந்த அங்கீகாரம் அஜய்க்கு இவ்வளவு சீக்கிரம் கிடைத்திருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த வெற்றி இங்கேயே நிற்காமல் இன்னும் பல தூரம் எங்களை அழைத்து செல்லும் என்று நம்புகிறேன்” என்றார்.


