

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ, ஜீ ஸ்குவாட் தயாரிப்பில், இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிக்கும் ’29’ திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் ‘Welcome To The World of 29’ என்ற பிரத்தியேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கார்த்திகேயன் சந்தானம், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. படம் மே 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், “இந்தப் படத்தின் கதை காதலைப் புதிய கோணத்தில் சிந்திக்க வைத்தது. நீண்ட காலமாக காதல் படங்களில் பணியாற்றியிருந்தாலும், இந்தக் கதை என்னுள் மறைந்திருந்த காதல் உணர்வை மீட்டது. இன்றைய வேகமான வாழ்க்கையில் நேர்மையான காதலைப் பேசும் படைப்பாக ’29’ இருக்கும். தமிழ் காதல் படங்களின் தனித்துவமான வரிசையில் இப்படம் இடம் பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், ”லோகேஷ் கனகராஜுக்கு சத்தியமாக இதுவரை இப்படத்தின் கதை தெரியாது. அவர் இதுவரை நம்பிக்கையின் பேரில் மட்டுமே தொடர்ந்து முதலீடு செய்து வந்திருக்கிறார். எங்கள் மீது அத்தகைய நம்பிக்கையை வைத்ததற்காக லோகேஷ் கனகராஜிற்கு இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இரண்டு இயக்குநர்கள் இணைகிறார்கள் என்றால், அந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு நிச்சயமாக இருக்கும். அதற்கு சரியான பதிலை அளிப்பது போல் இந்த 29 படம் இருக்கும்.
செவன் ஜி ரெயின்போ காலனி, விண்ணைத்தாண்டி வருவாயா, அலைப்பாயுதே போன்ற படங்களை ரசித்த ரசிகன் நான். அந்த வரிசையில் 29 நிச்சயமாக இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டனின் ஸோல்ஃபுல் மியூசிக் ரொம்ப பிளஸ்” என்றார்.
தயாரிப்பாளரும் இயக்குநருமான கார்த்திக் சுப்புராஜ், ”ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை தொடங்கும் போது குறும்படங்களை எல்லாம் ஒன்றிணைத்து ஆந்தாலஜி பாணியில் ஒரு படத்தை உருவாக்கினோம். ரத்னகுமார் இயக்கிய ‘மது’ எனும் குறும்படமும் இடம் பிடித்தது. அந்தக் குறும்படத்தைப் பார்க்கும் போதே ரத்னகுமாரின் எழுத்தும் இயக்கமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போதே அவரிடம் ஏதாவது திரைப்படத்திற்கான கதை இருக்கிறதா என்று கேட்டோம். அப்போதுதான் நாங்கள் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கலாம் என்று தீர்மானித்திருந்தோம். அப்போது ரத்னாவிடம் கதையைக் கேட்போம் என்று சொன்னேன். அவரும் இரண்டு, மூன்று ஐடியாக்களைச் சொன்னார். ஆனால் நான் தான் ‘மது’ எனும் குறும்படத்தையே முழு நீளக் காதல் திரைப்படமாக மாற்றித் தர முடியுமா என்று கேட்டேன். அதுதான் மேயாத மான்.
மேயாத மான் எங்களது முதல் படம் என்பதில் எங்களுக்குப் பெருமை. என்னைப் பொறுத்தவரை ரத்னகுமார் நல்ல எழுத்தாளர். அவருக்குள் பயங்கரமான ஹியூமர் இருக்கிறது. அவரிடம் சாதாரணமாகப் பேசினாலே சிரித்துக் கொண்டே இருப்போம். ஜாலியாக இருக்கும். ஒரு விசயத்தை அவர் பார்க்கும் விதமே வேறு வகையாக இருக்கும். அதை அவர் சொல்லும் போது காமெடியாக இருக்கும்.
நாம் நிறைய காதல் படங்களைப் பார்க்கிறோம். ஆனால் ஒரு சில படங்கள் தான் எவர்கிரீனாக நினைவில் நிற்கும். எனக்குச் செல்வராகவன் சாரின் படங்கள் மிகவும் பிடிக்கும். அதிலும் 7 ஜி ரெயின்போ காலனி என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் ஆன படம். அந்த லவ் எத்தனை வருஷம் ஆனாலும் நம்மால் மறக்க முடியாது. அதேபோல் கௌதம் மேனன் காதல் கதைகளை அவருடைய ஸ்டைலிஷ் ஆன மேக்கிங்கில் சொல்வார்.
அதே போன்று வித்தியாசமான தனித்துவமான காதல் கதை தான் ரத்ன குமாரின் 29. லோகேஷ் கனகராஜைப் போல் ரத்ன குமாரும் லவ்விற்காக ஒரு யுனிவர்ஸை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
இயக்குநர் ரத்னகுமார், ”மேயாத மான் படத்தினை முடித்த பிறகு ஒரு நாள் வீட்டில் இருந்த போது இரவு நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்தது பேஸ்புக்கில் ‘வாட்ஸ் இன் மைண்ட்’ என்றுதான் ஒரு விசயத்தைப் போஸ்ட் செய்தேன். என் ரூமில் மழையின் சத்தம் மட்டும்தான் கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு குடையில் ஒரு பையனும் பெண்ணும் நின்று கொண்டிருக்கிறார்கள். மழை பெய்து கொண்டிருக்கிறது. அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்ற ரீதியில் ஒரு உரையாடலை எழுதி, போஸ்ட் செய்தேன். மறுநாள் அதற்கு ஏகப்பட்ட லைக்ஸ், கமெண்ட்ஸ் வந்திருந்தது . அதில், ‘அந்த இரண்டு கேரக்டர் அதற்குப் பிறகு என்ன செய்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்’ என்று சிலர் பதிவிட்டனர். அப்போது அந்த கேரக்டருக்கு நான் பெயர் கூட வைக்கவில்லை. ஏனென்றால் அதை வாசிக்கும் ஒவ்வொருவரும் தங்களை நினைத்து கொள்வார்கள் என்று விட்டுவிட்டேன். சரி என்று மற்றொரு நாள் அவர்கள் அடுத்ததாக எங்கே சந்தித்து இருப்பார்கள் என்று ஒரு இடத்தை தேர்வு செய்தேன். அதுதான் இப்போது நீங்கள் இங்கு பார்த்த கிளிம்ப்ஸ்.
இதைத்தான் நான் இரண்டாவது முறையாக எழுதி பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன். எனக்குள் தோன்றியதை பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன். அப்போது ஒரு நண்பர் எனக்கு போன் செய்து, ‘எதுக்கு இப்போது நீ ஃபேஸ்புக்கில் இப்படி போஸ்ட் ஏன் போடுகிறாய்? இதற்குள் ஒரு நல்ல கதை இருக்கிறது. இரண்டு கேரக்டர்ஸ் ஒரு சிறிய குட்டி ஸ்பேஸ்க்குள் கனெக்ட் பண்ண முடிகிறது. இதனை ஒரு படமாக உருவாக்கலாம். நீ உருவாக்கவில்லை என்றால் வேறு யாரேனும் இதனைப் படமாக உருவாக்கி விடுவார்கள். தயவு செய்து அதனை டெலீட் செய்து விடு’ என்றார்.
இதேதான் நான் என்னுடைய மது குறும்படத்தை யூடிபில் போஸ்ட் செய்த போதும் நடந்தது. அந்த மது மேயாத மான் படமாக ஆனதைப் போல், பேஸ்புக்கில் போஸ்ட் போட்ட விசயங்கள் தற்போது 29 எனும் படமாக உங்களிடம் வந்திருக்கிறது. நான் கதை எழுத உட்கார்ந்த இப்போது என் மனதிற்குள் தோன்றிய இரண்டு கற்பனை கதாபாத்திரங்களின் பயணம் தான் இந்தப் படம்.
அடையாளத்தை நாம் வாங்க முடியாது அதுவாக அமைவது தான். ‘நான் யார்?’ என்ற கேள்வி எனக்குள் வரும்போது தான் நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பேஸ்புக்கில் போட்ட போஸ்ட் தான் ஒரு கதையாக உருவாகி, ‘நீ யாரு?’ என்று கேட்டால், தெரியவில்லை என்று சொல்லும் அளவிற்கு நோக்கமே இல்லாத ஒரு 29 வயது பையன். அவருடைய வாழ்க்கையில் 20 களில் இருக்கும் ஒரு பெண் வருகிறாள். அந்தப் பெண்ணும் அவனும் இணைந்து பயணிக்கும் போது தான், தான் யார் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். இது ஒரு படமாகத் தயாரானது. எனக்கு 29 வயதில் தான் நிறைய விசயங்கள் நடந்ததால், இப்படத்தின் டைட்டில் 29 என்பதாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தேன்” என்றார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ”29 எனும் இந்த படம் ஜீ ஸ்குவாட் நிறுவனமும், ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் திரைப்படம். என்னுடைய தயாரிப்பில் இது முதல் படம். இதற்கு முன் ‘ஃபைட் கிளப்’ எனும் ஒரு படமும், ‘மைக்கேல்’ எனும் ஒரு படத்தையும் வழங்கி இருக்கிறேன் அதுவும் நண்பர்களுக்காகத் தான் வழங்கினேன். இந்தப் படத்தை தயாரிப்பதற்கு முழு முதல் காரணம் என் நண்பர் ரத்னகுமார் தான்.
2013 ஆம் ஆண்டில் முதல் படத்தை இயக்குவதற்காக அலைந்து கொண்டிருந்த போது, இங்கு இப்போது இருக்கும் எல்லா இயக்குநர்களும் ஒன்றாக தான் சுற்றிக் கொண்டிருந்தோம். அப்போது நானும், ரத்ன குமாரும் குறும்படத்தை இயக்கி விட்டு தெருத்தெருவாக சுற்றிக் கொண்டிருந்தோம். 2012 ஆம் ஆண்டில் பீட்சா படம் வெளியானது. அந்தப் படம் எங்களுடைய கனவுகளுக்கெல்லாம் மிகப்பெரிய கதவைத் திறந்து வைத்தது. எனக்கு மட்டுமல்ல இன்றைக்கு இருக்கும் மிகப்பெரிய இயக்குநர்களுக்கு எல்லாம் அது மிகப் பெரிய கதவை திறந்து வைத்தது.
அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் பெஞ்ச் டாக்கீஸ் எனும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அப்போது குறும்படங்களை எல்லாம் ஒன்றிணைத்து ஒரு ஆந்தாலஜி படத்தை உருவாக்கினார். அந்த அவியல் எனும் ஆந்தாலாஜி படத்தில் என்னுடைய களம் எனும் குறும்படமும் இருந்தது. கார்த்திக் சுப்புராஜ் ரத்ன குமாரை மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. என்னையும் தொழில்நுட்ப ரீதியாக அவியல் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். அப்போதிலிருந்து தற்போது வரை அனைவரும் நண்பர்களாகத் தான் இருக்கிறோம்.
நான் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியதற்கு காரணமே இதுதான். நாம் வளரும்போது நம்முடன் இருந்தவர்களையும் வளர்த்து விட வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினேன். இதற்கும் இன்ஸ்பிரேஷன் கமல் சார் தான். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் தான் முதலீடு செய்ய வேண்டும் என்பதை அவர்தான் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். அவரிடமிருந்து தான் இந்தப் பாடத்தை நாங்களும் கற்றுக் கொண்டோம்.
நான் இதுவரை இந்த படத்தை பார்க்கவும் இல்லை. கதையை கேட்கவும் இல்லை. எல்லாம் ரத்னகுமார் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான். அவர் மீது வைத்திருக்கும் குருட்டு நம்பிக்கையால் அவர் பொறுப்புணர்வுடன் படத்தை இயக்கியிருப்பார். இந்தப் படத்தை மே எட்டாம் தேதி ரசிகர்களுடன் திரையரங்கில் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்” என்றார்.


