

ஸ்வீடன் நடிகரான டால்ஃப் லண்ட்க்ரென் நடிப்பில் ஹீ-மேன் திரைப்படம் 1987 இல் வெளிவந்ததற்குப் பின், மீண்டும் லைவ்- ஆக்ஷன் திரைப்படமாக ஹீ-மேன் வர நாப்பது வருடங்களாகியுள்ளது.
ரேண்டோர் ஆளுகின்ற எட்டர்னியாவைத் தாக்கி அழிக்கிறான் ஸ்கெலெட்டர். தன் மகன் ஆடன் க்ளெனைக் காப்பாற்ற, அவனை எட்டர்னியா கிரகத்தில் இருந்து வாளுடன் பூமிக்கு அனுப்பி வைக்கிறார் மகாராணி மர்லெனா. அவ்வாளை நீட்டி மந்திர வார்த்தைகளை உச்சரித்தால், சக்தியை அளிக்கவல்ல அற்புதமான அந்த வாளைத் தொலைத்து விடுகிறான் ஆடம். பதினைந்து வருடங்களாகப் பூமியில் அந்த வாளைத் தேடியும், எட்டர்னியா பற்றிய ஞாபகங்களை ஓவியமாக வரைந்தும் காலத்தைக் கடக்கிறான். ஒருநாள், இளைஞன் ஆடம்க்கு இழந்த வாள் கிடைக்க, ஆபத்துத் துரத்தத் தொடங்க, அதிலிருந்து தப்பித்து எட்டார்னியாவிற்குத் திரும்புகிறான். ஆடம் க்ளென் ஹீ-மேனாகி எப்படி ஸ்கெலெட்டரை வீழ்த்திகிறான் என்பதுதான் கதை.
பார்வையாளர்காலுக்கு எட்டர்னியா அந்நியமாக இருக்குமோ என ஹீ-மேன்க்குப் பூமியோடு ஒரு பந்தத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதற்காக மெனக்கெடுக்காமல் சூப்பர் மேனின் கதையை அப்படியே உபயோகித்துள்ளனர். முழுத் திரைக்கதையுமே திருப்பங்கள் இல்லாமல், யூகிக்கக் கூடிய எளிமையுடன் வடிவமைத்துள்ளனர். சூப்பர் ஹீரோ படங்களில் முக்கியமான தேவை ஒரு சூப்பர் வில்லன். அச்சுறுத்தும் தோற்றத்தில் அறிமுகமானாலும் ஸ்கெலெட்டரையும் கலகலப்பிற்கு உபயோகித்துள்ளனர். எட்டர்னியாவின் ஜெனரலாக நடித்துள்ள இட்ரிஸ் எல்பாவையும் நகைச்சுவைக்கே பயன்படுத்தியுள்ளனர். மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்ஸ் படங்களில், கலகலப்பையும் சீரியஸ்னஸையும் ஓர் அழகான கலவையாகக் (blend) கொண்டு வர மெனக்கெட்டிருப்பார்கள். இப்படம் தவறவிட்டுள்ள முக்கிய புள்ளி அது.
ஹீ-மேனாக நடித்துள்ள நிக்கோலஸ் கலிட்ஸைன், அப்பாத்திரத்திற்கு மிகக் கச்சிதமாகப் பொருந்துகிறார். எளிய திரைக்கதை என்றாலும், படத்திற்கு ஒரு அழகையும் மெருகையும் கொடுத்துள்ளார். அவரது வளர்ப்புப் புலி க்ரிஞ்சரை நகைச்சுவைக்குப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் ஏனோ கெளரவத்தோற்றத்தில் வந்து போகிறது. பிரிந்தவர்கள் சந்தித்துக் கொள்ளும் தருணங்களை எல்லாம் அழுத்தமான காட்சியாக்காமல், விரலிடுக்கில் கசியும் நீர் போல் நழுவவிட்டுள்ளார் இயக்குநர் ட்ராவிஸ் நைட். இப்படம் ஒரு முழு நீள ஃபேண்டஸிப்படமாக இல்லாமல், குழந்தைகளின் சிம்பிள் பெட் டைம் ஸ்டோரிக்கு விஷுவல் அளித்த உணர்வையே அளிக்கிறது.

