

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தின் கலையரங்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் முன்னிலையில் கோலாகலமாக திருவிழா போல் சிறப்பாக நடைபெற்றது. ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்குகிறது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், ”மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்த வாத்தி படத்திற்குப் பிறகு, மீண்டும் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்சி, சாய் சௌஜன்யாக்கு நன்றி.
‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படம் மிகவும் ஸ்பெஷலானது. சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்திற்குப் பிறகு நானும் அவரும் இணைந்து பணியாற்றிருக்கிறோம். ‘சூரரைப் போற்று’ திரைப்படம் – எங்கள் இருவருக்கும் முதன்முறையாகத் தேசிய விருதை வழங்கிய படம். அந்த அளவிற்கு அதிர்ஷ்டம் அளித்த கூட்டணி.
அதன் பிறகு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் உருவான ‘வாத்தி’ திரைப்படத்திற்கும் எனக்குத் தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு அவரது இயக்கத்தில் ‘லக்கி பாஸ்கர்’ என்ற ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தில் இணைந்தோம். அதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்திருக்கிறோம். இதனால் இந்தப் படத்தில் என்னுடன் இரண்டு ஸ்பெஷல் ஃபோர்ஸஸ் இருக்கிறார்கள்.
இந்தப் படம் நீங்கள் மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தினர் அனைவருடனும் இணைந்து பார்க்க வேண்டிய படம். ஒரு பீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர். சூர்யாவின் ரசிகர்களுக்கு இந்தப் படம் மிகப்பெரிய விருந்தாக இருக்கும். இன்று சூர்யாவின் ரசிகர்களுக்காக அவர்கள் விரும்பிய ‘தி ஒன் (The One)’ பாடலை வெளியிடுகிறோம். அது சூர்யாவின் அன்பான ரசிகர்களுக்கான ஆக்ரோஷமான பாடல்.
நடிகை மமிதா பைஜுவை நான் ஐந்து ஆண்டுகளாக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். மிகவும் அன்பானவர். ‘பட்டாம்பூச்சி’ பாடலை அவர் தன்னுடைய நடனத்தின் மூலம் மெருகேற்றியுள்ளார். இந்தப் பாடல் வெளியான பிறகு அவருடைய நடனத்திற்கு கிரேஸ் அதிகமாகிவிட்டது. சமூக ஊடகங்களில் அவருடைய நடன அசைவுகளை ரீ-கிரியேட் செய்து வருகிறார்கள். இந்தப் படத்தில் அவர் தன்னுடைய கடின உழைப்பை வழங்கியிருக்கிறார்.
சூர்யா சார், இந்த படத்தில் எமோஷனலாக, அழகாக, அற்புதமாக நடித்திருக்கிறார். இது அனைவருக்கும் பிடிக்கும். சூர்யாவின் ரசிகர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்தப் படத்தைப் பார்க்கலாம். இந்தப் படம் ஒரு இதயபூர்வமான படமாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்சி, ”இது என்னுடைய இரண்டாவது தமிழ் படம். நாங்கள் இந்தத் திரைப்படத்தைக் கோவையில் தான் தொடங்கினோம். இங்கு வருகை தந்து, இங்கிருந்து பழனிக்குச் சென்று, முருகனைத் தரிசித்து விட்டு, அதன் பிறகு கோவையில் தான் படப்பிடிப்பைத் தொடங்கினோம். படத்தினை விளம்பரப்படுத்தும் முதல் நிகழ்வையும் கோவையில் தான் தொடங்கி இருக்கிறோம். என்னைப் பொறுத்தவரை கோயம்பத்தூர் மிகவும் வெற்றிகரமான வெற்றியை வழங்கக் கூடிய இடம்.
என் மீதும், இயக்குநர் வெங்கி மீதும் நம்பிக்கை வைத்ததற்காக சூர்யாவிற்கு நன்றி. இந்தப் படத்தில் சூர்யா மிக இளமையாக நடித்திருக்கிறார். சூர்யாவின் ரசிகர்களுக்கு நான் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நீங்கள் இந்தப் படத்தில் ஒரு ‘சஞ்சய் ராமசாமி’யைப் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் சூர்யாவைப் பார்க்கலாம்.
நான் தெலுங்கு தாய் மொழியைக் கொண்டிருந்தாலும் எனக்கு ஏராளமான தமிழ் மக்கள் நண்பர்கள். தமிழ் மக்கள் அனைவரும் எங்களது தயாரிப்பில் உருவான ‘அலகொண்ட வைகுந்தபுரம்’ படத்தை கொண்டாடினார்கள். நான் இதை ஒரு ஒப்பீட்டுக்காகச் சொல்லவில்லை. நாங்கள் இந்த படத்தின் மீது அந்த அளவிற்கு நம்பிக்கை வைத்திருக்கிறோம். அந்த வகையில் இந்தப் படம் தமிழில் உருவாகி இருக்கும் ஒரு ‘அலா வைகுந்தபுரம்லோ’ எனச் சொல்வேன். அந்த அளவிற்கு இந்தப் படத்தின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
ஜென் ஸீ இளைஞர்களுக்குப் பிடித்த நடிகையாக மமீதா பைஜூ இருக்கிறார். அவர்களின் பேரன்பினை சம்பாதித்து இருக்கிறார். இந்தப் படத்தின் முதல் பாதியில் சூர்யா, மமிதா, ராதிகா சரத்குமார் ஆகியோர் இடம்பெறும் ஒரு காமெடி காட்சி வரும். இந்தக் காட்சியைப் பார்க்கும் ரசிகர்கள் ஒவ்வொருவரும் அது உங்களுடைய உணர்வுகளை எப்படிப் பாதித்தது என்பதை, உங்களது நினைவுகளை எப்படி கிளறியது என்பதை, அனைவரும் தங்களது சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
எங்கள் நிறுவனத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் மூன்றாவது திரைப்படம். ஹாட்ரிக் வெற்றியைப் பெறும். சூர்யாவின் ரசிகர்களுக்காக அவருக்கான பின்னணி இசையை மிகச் சிறப்பாகத் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் வெங்கி அட்லூரி, ” இந்தப் படத்தின் பணிகளைப் பழனி முருகனின் ஆசியுடன் கோவையில் தான் தொடங்கினோம் எனத் தயாரிப்பாளர் குறிப்பிட்டார். ஏனெனில் இந்த இடம், இந்த ஊர், இந்த மக்கள் என அனைவரும் சூர்யா சாரின் சொந்தங்கள்.
இந்தப் படத்தின் இந்த நிகழ்வை இந்தியாவில் எந்த நகரத்தில் வேண்டுமானாலும் எங்களால் நடத்தி இருக்க முடியும். ஆனால் சூர்யாவின் சொந்த மண்ணில், அவருடைய அன்பான ரசிகர்களுக்காக, இங்கு நடத்தத் தீர்மானித்தோம். உங்களின் வருகையால் இந்த நிகழ்ச்சி திருவிழா போல் அமைந்து, எங்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
இந்தப் படத்தின் கதையை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் ராஜசேகரிடம் சொன்னபோது, அவர் கதையைக் கேட்டு சில இடங்களில் கண்ணீர் விட்டார். உடனடியாக சூர்யாவைச் சந்தித்து கதை சொல்வதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார். இதற்காக ராஜசேகருக்கு நன்றி.
அதன் பிறகு சூர்யாவைச் சந்தித்து முழுக் கதையையும் விவரித்தேன். அதைக் கேட்டு விட்டு உடனடியாக எனக்கு ஆசி வழங்கி, இப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறோம் என்றார். 2023 ஆம் ஆண்டில் சூர்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என பிரார்த்தனை செய்தேன். அதன் பிறகு அவருடன் இந்தப் படத்தில் இணைந்து அழகான படத்தில் பணியாற்று இருக்கிறேன்.
படப்பிடிப்புத் தளத்தில் அனைவருக்கும் சின்ன தங்கச்சியாக மமிதா பைஜு துறுதுறு என்று இருந்தார். அவர் வந்தால் படப்பிடிப்புத் தளமே உற்சாகமாக மாறிவிடும். அவர் இருந்தால் நடிகை என்கிற எண்ணம் இல்லாமல் குடும்பத்தினரோடு இருக்கிறோம் என்று உணர்வை ஏற்படுத்தி விடுவார். அவர் நம் குடும்பத்தை சார்ந்த ஒரு உறுப்பினர் போல் அனைவர் மீதும் அக்கறை காட்டுவார். சூர்யா சார் சகோதரரைப் போலும், ராதிகா மேடம் தாயைப் போலவும், மமிதா தங்கையைப் போலும் இருப்பார்கள்.
ஜி.வி.பிரகாஷ் குமாருடன் மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறேன். ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு விஷயத்திற்கும், என்னை அவர் எப்போதும் ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருப்பார். என்னுடைய எதிர்பார்ப்பை விட எப்போதும் சிறந்த ஒன்றைதான் அவர் எனக்காக வழங்கிக் கொண்டிருக்கிறார்.
நான் படத்தைப் பின்னணி இசையுடன் முதல் பாதியைப் பார்த்து விட்டேன். மிகச் சிறப்பாக இருக்கிறது. அதனால்தான் இப்படத்தைப் பற்றி நம்பிக்கையுடன் என்னால் சொல்ல முடியும். இந்தத் திரைப்படம் சூர்யாவின் ரசிகர்களை மட்டுமல்ல, அவர்களுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் பிடிக்கும். படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு ரசிகர்கள் மட்டுமே வருவார்கள். ஆனால், இந்தப் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு ரசிகர்களாகிய நீங்கள் உங்கள் குடும்பத்தினரை அழைத்து வாருங்கள். அனைவரும் மகிழ்ச்சியைக் கொண்டாடுவார்கள். படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் வெளியே வரும்போது உங்கள் மனதில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் இருக்கும்.
அருண் ராஜா காமராஜ் எழுதிய ‘பட்டாம்பூச்சி’ பாடல்- ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரீல்ஸ்களால் சமூக ஊடகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக அவருக்கும் நன்றி. இது சூர்யாவுக்கு ஒரு நியூ ஏஜ் ஃபிலிம். இந்தத் திரைப்படம் ஜென் ஸீ ரசிகர்களுக்கும் பிடித்த படமாக இருக்கும்.
தயாரிப்பாளர் படத்தின் முதல் பாதியில் இடம் பெறும் ஒரு காமெடி காட்சியை பற்றிக் குறிப்பிட்டார். அது வீட்டில் இருக்கும்போது சிகரெட், ட்ரிங்க்ஸ் போன்ற விஷயத்தை மறைத்து மறைத்துச் செய்யும் போது, அதற்காக ராதிகா, சூர்யா, மமிதா ஆகிய மூவருக்கும் இடையே ஏற்படும் புரிதல் தொடர்பான காட்சி. அது பத்து நிமிடம் வரை நீடிக்கும். இது அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும். இது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடந்திருக்கும். அனைவரும் இதனைக் கடந்து வந்திருப்பார்கள். அதனால் இந்தக் காட்சியைப் பார்த்தவுடன் உங்கள் வாழ்க்கை இது போல் நடந்திருந்தால், அதனை ட்வீட் செய்யுங்கள் எனத் தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டார்” என்றார்.
நடிகர் சூர்யா, ” கோவை விமான நிலையத்திலிருந்து இந்த விழா நடைபெறும் இந்தத் தருணம் வரை இதனை ஒரு திருவிழாவைப் போல் கொண்டாடிவரும் ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என் மீது நீங்கள் வைத்திருக்கும் இந்த அன்பிற்கு நன்றி.
ஒரு காரணத்திற்காக நான் என் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை. இருந்தாலும் ரசிகர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், என்ன செய்தீர்கள் என்பதை நான் கவனித்துக் கொண்டே தான் இருக்கிறேன். ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானத்தை வழங்கியுள்ளீர்கள். நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறீர்கள். குட்டிக் குழந்தைகள் முதல் அனைவருக்கும் அவர்கள் விரும்பிய ஆடைகளை வாங்கிப் பரிசாக வழங்கி இருக்கிறீர்கள். இவை எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி.
கோயம்புத்தூர் பிறந்த மண் என்பதால் இங்கு வந்தவுடன் நிறைய ‘பிளாஷ்பேக்’குகள் வந்து கொண்டே இருக்கிறது. அதில் ஒன்றை மட்டும் சொல்கிறேன். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை ஒவ்வொரு வருடத்திலும் கோடை விடுமுறைக்குக் கோயம்புத்தூர் வந்து விடுவேன். கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து காரில் பயணிக்கும் போது சூலூர், காசி கவுண்டர் புதூர், புளியம்பட்டி, கவுண்டம்பாளையம், இளையராஜாவின் பாடல்கள், ஆடு மாடு மேய்ப்பது, மாட்டு வண்டி ஒட்டுவது, வயலில் நடப்பது, வரப்பில் உறங்குவது, கிணற்றில் குதிப்பது என எல்லாச் செயல்களையும் செய்திருக்கிறேன்.
கடந்த வருஷம் தியாவையும், தேவ்வையும் அழைத்துக் கொண்டு வந்து, ‘இந்தப் புளிய மரத்தில் தான் விளையாடினேன்’, ‘இந்தக் கிணற்றில் தான் குதித்தேன்’, ‘இந்த வாய்க்காலில் தான் படுத்துக் கொண்டிருந்தேன்’ என ஒவ்வொரு விசயத்தை அவர்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டேன். அதன் பிறகு குலதெய்வ கோயிலுக்கும் சென்று வந்தோம். இது எல்லாம் நான் ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், நாம் டிஜிட்டல் ஸ்கிரீனுடன் செலவழிக்கும் நேரம் அதிகமாகி விட்டது. நான் என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன். ஆனால் குடும்ப உறுப்பினர்களுடன் செலவிடும் நேரம் குறைவாகிவிட்டது. அதனால் தயவு செய்து குடும்பத்தினருக்கான நேரத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக செலவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நான் மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன் இதில் நானும் அடங்கி இருக்கிறேன். நானும் ஸ்கிரீன் நேரத்தைக் குறைத்துக் கொண்டு, குடும்பத்துடன் செலவிட வேண்டும் என எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.
நினைவுகளை உருவாக்குங்கள். சேமித்திடுங்கள். அது ஊரில் இருக்கும்போதுதான் கிடைக்கும். இதனை ஒருபோதும் யாரும் தவற விட்டு விடாதீர்கள். ஃபோனைப் பார்ப்பதன் மூலம் கிடைக்கும் நினைவுகளை விட, உங்களைச் சுற்றி உள்ள மக்களைப் பற்றி, ஊரைப் பற்றி, உறவுகளைப் பற்றி, நிறைய விஷயங்களைப் பேசிக் கலந்து உரையாடி, நினைவுகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். இதைப் பற்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அதனால் பகிர்ந்து கொள்கிறேன்.
எனக்கு மீசை முளைக்காத நாட்களில் பார்த்து வியந்த இன்றைய விழாவின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார். ரேடியோ மிர்ச்சியில் ஜிங்கிள்ஸிற்கு இசையமைத்தது இவர் தான் என சிறுவனாக இருந்த இவரைக் காட்டிய போது நான் வியந்து ரசித்தேன். அது மட்டுமல்லாமல் மேடையில் ஏறி பாடி, ஆடி நடித்த முதல் இசையமைப்பாளர் இவர்தான். ‘ஆடுகளம்’ படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலை மேடையில் பாடி ஆடியதை நான் பார்த்து ‘அட!’ என வியந்திருக்கிறேன். அந்தத் தருணத்திலிருந்து அவருடன் இணைந்து பயணித்திருக்கிறேன். அதில் ‘சூரரைப் போற்று’ மிக முக்கியமான படம். உச்சக்கட்ட காட்சியில் பாடலை வைத்து இன்னும் மெருகேற்றினார். அந்தப் படத்திற்குத் தேசிய விருது எனும் மரியாதையும் கிடைத்தது. அவருடனான ஏராளமான நல்ல நினைவுகள், அனுபவங்கள் பசுமையாய் இருக்கிறது. என் மீது அவர் காட்டும் நிபந்தனையற்ற அன்பிற்கு நன்றி. இந்தப் படத்தில் ராதிகா மேடத்திற்கும் மமிதாவிற்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ஸ்பெஷலாக இருக்கும்.
இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடன் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே ஆப்ஷனாகச் செலக்ட் செய்தது மமீதாவை தான். நாங்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே ஒரு படத்தில் நடிக்க இருந்தோம். ஆனால் சில காரணங்களால் அது நடைபெறவில்லை. ஆனால் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறோம். இதில் மமீதா ஒரு மேஜிக் செய்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தை அவ்வளவு அற்புதமாக ஏற்று நடித்திருக்கிறார். தமிழில் அவரே பின்னணியும் பேசியிருக்கிறார். தமிழிலும் நன்றாகப் பேசியிருக்கிறார்.
இந்தப் படத்திற்காக இயக்குநர் வெங்கி பிரார்த்தனை செய்ததாக சொன்னார். நானும் பிரார்த்தனை செய்தேன். ‘நான் அவருடைய ‘லக்கி பாஸ்கர்’ படத்தைப் பார்த்து பிரமாதமாக இருக்கிறதே!’ என வியந்து ரசித்தேன்.
எனக்கு வெவ்வேறு இயக்குநர்கள், வெவ்வேறு அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அதில் ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ எனக்கு ஒரு புது அடையாளம். அந்த அடையாளத்தைக் கொடுத்தது இயக்குநர் வெங்கி. நான் இதைப் போன்றதொரு படத்தில் நடித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அவருடைய எழுத்தின் மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு. இந்தப் படத்தில் மூன்று பெண்கள் இருக்கிறார்கள். அந்த மூன்று கதாபாத்திரங்களையும் எழுத்தில் அழகாக உருவாக்கியிருக்கிறார். உறவுகளைப் பற்றி அற்புதமாக பேசியிருக்கிறார். இந்த படத்தை பார்க்கும்போது உங்களின் உதட்டோரம் சின்ன புன்னகை எட்டிப் பார்க்கும். இது படம் முழுவதும் இருக்கும். இந்தப் படத்தில் ரொமான்ஸ், ஃபேமிலி- காமெடி என எல்லாம் இருக்கும். ஹீரோயிசமும் இருக்கும். எல்லாம் கலந்த ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும்” என்றார்.

