‘இதயம் பேசுகிறது’ இதழில், 80களில் “தாயம்” என்ற பெயரில் கமல் எழுதிய தொடர், 2001 இல் ‘ஆளவந்தான்’ ஆகத் திரையேற்றம் கண்டது. திரைக்கதை, வசனத்தைக் கமல் எழுத, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். வெளியான போது 178 நிமிடங்கள் கால அளவினைக் கொண்ட படத்தைத் தற்போது 122 நிமிடங்களாகச் சுருக்கி, 4K தெளிவுத்திறனில் (resolution) வெளியிட்டுள்ளனர்.
சித்தி கொடுமைக்கு உள்ளாகும் விஜயும் நந்துவும் இரட்டையர்கள். விஜயை, அவரது மாமா இராணுவப்பள்ளியில் சேர்க்க, தந்தையுடன் தங்கும் நந்துவோ சித்தியைக் கொன்ற குற்றத்திற்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுகிறான். இராணுவ அதிகாரியாகும் விஜய், தேஜஸ்வினியைக் காதலித்துத் திருமணம் புரிகிறார். சித்தி தான் தேஜஸ்வினியாக வந்துள்ளார் என நம்பும் மனச்சிதைவுடைய (schizopernia) நந்து, தேஜஸ்வினியைக் கொன்று விஜயைக் காப்பாற்ற நினைக்கிறான். வேட்டையாடப் பயிற்சியெடுத்த விஜய் தேஜஸ்வினியைக் காப்பாற்றவும், மிருகமாகவும் குழந்தையாகவும் மாறிக் கொண்டே இருக்கும் நந்து தேஜஸ்வினியைக் கொல்லவும், வலு சண்டையில் ஈடுபடுகின்றனர். கான்க்ரீட் காட்டில் நடக்கும் போரில் வென்றதா வேட்டையனா, மிருகமா என்பதே படத்தின் கதை.
ஆளவந்தான் (Born to rule) என்ற ஹீரோயிசத் தலைப்பாக இருந்தாலும், 1952 இல் தமிழகத்தையே உலுக்கிய மிகப் பிரசித்தி பெற்ற ஒரு கொலை வழக்கில் கொலையுண்டவரின் பெயரைக் குறிக்கிறது. ஆளவந்தார் உடலில் இருந்து தலையைத் தனியாக வெட்டி, தலையை ராயபுரம் கடற்கரையில் புதைத்தனர் தேவகி – பிரபாகர் மேனன் தம்பதியினர். படத்தில், சுல்தானின் தலையைக் கொய்து தனியாக வீசி எறிவார் நந்து.
படத்தை, எளிமையான நாயகன் – வில்லன் கதையாகக் கொண்டு போயிருந்தால் மிகப் பெரிய கமர்ஷியல் வெற்றியைப் பெற்றிருக்கும். திரைக்கதை, வசனம் எழுதியுள்ள கமல்ஹாசன், நந்துவின் மனச்சிதைவை காட்சிரூபமாகக் காட்டியிருப்பார். கோட்பாடு (theory) ரீதியாகவே மனச்சிதைவைக் குறித்த புரிதலில்லாக் காலகட்டத்தில், நந்துவை வில்லனாக மட்டும் காட்டாமல் அவரது சிதைந்த மனதைக் காட்சிப்படுத்தியிருந்தார்கள். மனிஷா கொய்ராலாவைக் கோரமாகக் கொலை பண்ணிவிட்டு, லிஃப்ட்டில் இறங்கும்போது, நந்து ஒவ்வொரு தளத்திலும் சிதைவுண்ட தன் மனதில் பிரதிபலிப்பைக் காணுவான். நம் கண்களுக்குத் தெரியும் உலகம், நந்துவிற்கு வேறாகத் தெரியும். செய்தி வாசித்துக் கொண்டிருக்கும் ரவீனா டாண்டன், தொலைக்காட்சியில் இருந்து இறங்கி வந்து தன்னை அடிப்பது போல் பாவிப்பார் நந்து. மனிஷா கொய்ராலாவும் அப்படித்தான் தெரிவார். எக்ஸ்டஸி என்ற போதை வஸ்து காரணமாகச் சொல்லலாம், ஆனால் அவரது குழந்தைத்தனமான இயல்பு சித்தியை நினைவுப்படுத்தும் தருணத்தில் எல்லாம் நொடியில் மிருகமாக மாறிவிடுவார். ‘மிருகம்’ என்ற சொல்லாடல், இயல்பாக உள்ள அல்லது அப்படி நம்பும் பார்வையாளர்கள், தங்களைச் சாமானியர்கள் என தற்காத்துக் கொள்ள உபயோகிக்கும் சொல். பார்வையாளர்களுக்கு வன்முறையாகத் தெரிவது, நந்துவைப் பொறுத்தவரை கார்டூனில் வரும் சூப்பர் ஹீரோயிசம். தன்னை சக்திமேனாக, ஸ்பைடர்மேனாக, சூப்பர்மேனாகப் பாவித்துக் கொள்ளும் ஒரு சிறுவனின் மனநிலை மட்டுமே! பயங்கரவாதியின் கையில் ஆணிகளை இறக்கும் விஜயிடமும் அதீத வன்முறையும் வக்கிரமும் உண்டு. அதற்கு தேசப்பற்று எனப் பெயர். அதையே நந்து செய்யும்பொழுது மனச்சிதைவாகக் கொள்கிறோம். முன்னவர் ஹீரோ, பின்னவர் வில்லனா எனக் கேட்காமல் உணர்த்துகிறார் நம்மவர் கமல். இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் வன்முறையும் ஹீரோயிசம் என்றே நந்துவின் பாம்பு டேட்டூ உணர்த்துகிறது (2002 இல் வெளியான XXX படத்தில், நந்துவைப் போலவே மொட்டையடித்த தலையுடனும், உடல் முழுவதும் டேட்டூவுடனும் வின் டீசல் இருப்பார் என்பது ஏனோ நினைவில் நிழலாடுகிறது).
இரண்டு தசாப்தங்களுக்கு முன், இந்தப் படத்தினுடைய ரத்த சிவப்பான gory-த்தன்மையின் கனத்தைத் தாங்கிக் கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ பார்வையாளர்கள் தயாராகி இருக்கவில்லை. இப்பொழுது இருக்கும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸை எதிர்நோக்கும் பப்ஜி ரசிகர்களுக்காக சுமார் 50 நிமிடங்களை நீக்கியுள்ளனர். அதையும் மீறி, கமல்ஹாசனின் உழைப்பும், ஒளிப்பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள உன்மத்தம் கொள்ளச் செய்யும் வண்ணக்கலவையும், படத்தின் தொழில்நுட்ப நேர்த்தியும் பிரமிப்படையவே வைக்கிறது.